தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சைவ இலக்கியம்

  • 2.1 சைவ இலக்கியம்

    நாட்டை ஆண்ட நாயக்க மன்னர்களின் ஆதரவைப் பெற்ற கிறித்தவர்கள் மிஷனரிகளை ஏற்படுத்தித் தம் சமயத்தைப் பரப்பினர். ஆனால் சைவர்களோ மடங்களைப் போற்றிச் சைவத்தை வளர்த்தனர். தருமபுர ஆதீனத்தில் கல்வி கற்ற சைவ எல்லப்ப நாவலர், குமரகுருபர் என்ற இருவரும் சைவ சமயத்தை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினர். வீர சைவ மடத்தைச் சேர்ந்தவர் ஆகிய சிவப்பிரகாசரும் தருமபுர மடத்தின் வெள்ளியம்பலவாணத் தம்பிரானிடம் கல்வி பயின்றார். சிற்றரசர்களும் வள்ளல்களும் கூடப் புலவர்களை ஆதரித்ததால் சிற்றிலக்கிய வகை வளர்ந்தது.

    2.1.1 சைவ எல்லப்ப நாவலர்

    தொண்டை நாட்டிலே தாழை நகரில் பிறந்து வாழ்ந்தவர். இவர் பெருமை அருணாசலப் புராணம், திருவருணைக் கலம்பகம் செவ்வந்திப் புராணம், செங்காட்டங்குடி புராணம், திருவிரிஞ்சைப் புராணம், தீர்த்தகிரிப் புராணம், திருவெண்காட்டுப் புராணம் என்னும் நூல்களைப் பாடியுள்ளார். வட மொழியில் உள்ள சவுந்தர்ய லகரிக்கு உரை எழுதியுள்ளார். சைவத்தை நிலை நாட்டியதால், சைவ என்று அடைமொழி கொடுக்கப்பட்டார். தமது திருவருணைக் கலம்பகத்தில்,

    சைவத்தின் மேல்சமயம் வேறு இல்லை அதில் சார்சிவமாம்
    தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறைச்
                                  செம்பொருள்வாய்
    மைவைத்த சீர்திருத் தேவார மும்திரு வாசகமும்
    உய்வைத் தரச்செய்த நால்வர்பொற் றாள்எம்
                               உயிர்த்துணையே

    என்று பாடியுள்ளார். தேவார, திருவாசகம் என்பவற்றை இயற்றிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற நால்வரின் நூல்களும் சைவத்தைவிட மேலான சமயம் வேறு இல்லை என்பதையும் சிவத்தை விட மேலான தெய்வம் வேறு இல்லை என்பதையும் கூறுகின்றன; அந்நால்வர் திருவடிகள் எனது உயிர்க்குத் துணையானவை என்பது பாடலின் பொருள்.

    அக்காலப் புலவர்களைப் போன்று சிலேடை, மடக்கு, அணி என்பவற்றில் வல்ல இவர்,

    ஆராயுங் கால் எடுப்பது ஐயம் அன்றோ அம்மானை
    அன்னம் அறியார் எடுப்பது ஐயமோ அம்மானை

    (ஐயம் = பிச்சை, சந்தேகம் ; அன்னம் = உணவு (அன்னத்தின் வடிவத்தில் சிவபெருமானின் திருமுடியைத் தேடிச் சென்ற, பிரமன்)

    என்று பாடுகிறார்.

    ஒன்றை ஆராயும்போது ஐயம் ஏற்படும். அதாவது சந்தேகம் தோன்றும்; உணவாகிய அன்னத்தை அறியாத போது, அதைப் பெறப் பிச்சை எடுப்பர் என்று சிலேடை நயந்தோன்றக் கூறுகிறார்.

    2.1.2 குமரகுருபரர்

    தமிழ்மொழியையும் வடமொழியையும் கசடறக் கற்றுணர்ந்த குமரகுருபரர் நெல்லை மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டத்தில் பிறந்தவர் ஐந்தாண்டு வரை ஊமையாக இருந்து, திருச்செந்தூர் முருகனருளால் பேசும் திறன் பெற்றார். திருமலை நாயக்கர் காலத்தில் குமரி முதல் காஷ்மீர் வரை சென்று சைவ நெறியைப் பரப்பிய துறவி இவர். திருமலை நாயக்கர் சபையில் ‘மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழை’ அரங்கேற்றம் செய்தார். அந்நூலின் வருகைப் பருவத்தில், தொடுக்கும் கடவுட் பழம்பாடல்...’ எனத் தொடங்கும் பாடல் பாடியபோது மீனாட்சி அம்மையே ஒரு சிறு பெண்ணாக வந்து, அரசன் கழுத்திலிருந்த முத்துமாலையை எடுத்துப் புலவரின் கழுத்தில் அணிவித்து மறைந்தாள். அரசனும் இவரது பெருமையுணர்ந்தார்.


    குமரகுருபரர்


    மதுரை மீனாட்சி அம்மன்

    தம் காலப் புலவர்களைப் போன்றே சிலேடை, மடக்கு, யமகம், திரிபு என்பவற்றைப் பாடல்களில் அமைத்துப் பாடிய இவர் விண்ணைத் தொடும் கற்பனையை அதிகம் கையாள்கிறார் என்கிறார் மு.வ. தன் பண்டார மும்மணிக் கோவையில் ‘திரிகரணம்’ என்ற சொல்லைக் கொண்டு சிலேடையாகப் பாடல் இயற்றியுள்ளார்.

    நின்புகழ் நவிற்றியு நினைத்து நின்றுணைத்தாள்
    அன்புட னிறைஞ்சியு மின்பமுற் றனவால்
    அவகர ணங்களே யல்லமற் றம்ம
    சிவ கரணங்களாய்த் திரிந்தன வன்றே (11)

    என்று கூறுவதன் மூலம் தன் மனம், வாக்கு, செயல் மூன்றும் குருவை நினைத்தும் அவர் புகழ் கூறியும் அவர்தாள் வணங்கியும் இன்பமுற்றுத் திரிகரணங்கள் சிவகரணங்களாக மாறின என்கிறார். நிலையாமையை மக்கட்கு உணர்த்தி இறைவன்தாள் வணங்க வேண்டியதை,


    நீரில் குமிழி யிளமை நிறைசெல்வம்
    நீரில் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில்
    எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே
    வழுத்தாத தெம்பிரான் மன்று

    (நீதிநெறிவிளக்கம்-34)

    நமரங்காள் = (நம்மவர்களே)

    என்கிறார்.

    ஞானாசிரியர் ஒருவரை அண்டிக் கல்வி கற்க விரும்பியபோது தருமபுர மடத்தின் மாசிலாமணி தேசிகரால் சோதிக்கப்பட்டு அவரது மாணவரானார் குமரகுருபரர். ஆசிரியர் கட்டளைப்படி தில்லை சென்று வந்தார்; நூல்கள் இயற்றினார்; நாயக்க மன்னர் தந்த பொருள் கொண்டு காசிக்குச் சென்று பாதுஷாவைச் சந்தித்தார். அற்புதங்களை நிகழ்த்தினார். அதனால் மன்னன் இவர் மீது மதிப்பு கொண்டான். இவருடைய பெருமையுணர்ந்து கொண்டான். காசியிலும் தம் பணியைத் தொடர்ந்த அடிகள் இந்தியிலும் தமிழிலும் கம்பராமாணயச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இவருடைய சொற்பொழிவுகளைத் துளசிதாசர் கேட்டு மகிழ்ந்தார். இதற்கு அடிப்படையாக, அவர் தமது இராமாயணத்தில், கம்பன் வகுத்த அமைப்பில் சில காட்சிகள் உருவாக்கியிருப்பதைக் காட்டுவதுண்டு காசியில் ‘கேதாரநாத்’ கோயிலும் ‘குமாரசாமி மடமும்’ கட்டுவித்தார். ‘பிரபந்த வேந்தர்’ என்று பாராட்டப் பெறும் இவர் 15 நூல்களை இயற்றியுள்ளார். குறம், மாலை, கோவை என்ற சிற்றிலக்கியங்களை அறிமுகப்படுத்தினார். நீதிநெறி விளக்கம் என்ற நீதிநூலை எழுதினார். தமிழ் மீது இவர் கொண்ட பற்று இவர் தமிழுக்குத் தரும் அடைமொழிகளால் புலனாகும். சிற்சில வடசொற்களையும் தம் படைப்பில் கலந்து வழங்கிய குமரகுருபரர் இயற்றிய நூல்கள்:

    (1)
    கந்தர் கலிவெண்பா
    (2)
    மீனாட்சியம்மை குறம்
    (3)
    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
    (4)
    முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
    (5)
    பண்டார மும்மணிக் கோவை
    (6)
    சிதம்பரச் செய்யுட் கோவை
    (7)
    சிதம்பர மும்மணிக் கோவை
    (8)
    கயிலைக் கலம்பகம்
    (9)
    மதுரைக் கலம்பகம்
    10)
    காசிக் கலம்பகம்
    (11)
    சகலகலாவல்லி மாலை
    (12)
    திருவாரூர் நான்மணிமாலை
    (13)
    மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை
    (14)
    சிவகாமியம்மை இரட்டை மணிமாலை
    (15)
    நீதிநெறி விளக்கம்

    2.1.3 சிவப்பிரகாசர்

    இளம்வயதிலேயே தந்தையை இழந்தவர் சிவப்பிரகாசர்; வீரசைவர். துறைமங்கலத்தில் அண்ணாமலை ரெட்டியார் கட்டித் தந்த மடத்தில் வாழ்ந்து வந்தார். ரெட்டியார் தந்த பொற்காசு கொண்டு தருமையாதீன வெள்ளியம்பலத் தம்பிரானிடம் பாடங்கேட்க வந்தார். இவரது தகுதியறிந்து கொண்ட தம்பிரான், தமக்குக் காணிக்கையாகப் புலவர் ஒருவரை வாதில் அடக்குமாறு பணித்தார். இரு உதடுகளும் இணையாதபடி, ப, ம, வ என்ற எழுத்துகளைத் தவிர்த்து நிரோட்டக யமக அந்தாதியைப் பாடி வெற்றியுடன் திரும்பினார். தோற்ற புலவரைக் குருவின் மாணவராக்கினார். கிறித்தவத்தின் பெருமை கூறி, மக்களை மதமாற்றிய வீரமாமுனிவரைக் கண்டித்து ஏசுமத நிராகரணம் என்ற கண்டன நூலை இயற்றினார். ‘கற்பனைக் களஞ்சியம்’ என்றும், ‘கவிதா சார்வ பௌமர்’ என்றும் போற்றப் பெறும் இவர் 32 நூல்களை இயற்றியுள்ளார். அவை பின்வருமாறு:

    (1)
    சோண சைல மாலை
    (2)
    சிவப்பிரகாச விகாசம்
    (3)
    சதமணி மாலை
    (4)
    நால்வர் நான்மணி மாலை
    (5)
    நிரோட்டக யமக அந்தாதி
    (6)
    பழமலை அந்தாதி
    (7)
    பிச்சாடன நவமணி மாலை
    (8)
    கொச்சகக் கலிப்பா
    (9)
    பெரிய நாயகியம்மை நெடுங்கழி நெடிலாசிரிய விருத்தம்
    (10)
    பெரிய நாயகியம்மை கட்டளைக் கலித்துறை
    (11)
    திருவெங்கைக் கோவை
    (12)
    திருவெங்கைக் கலம்பகம்
    (13)
    திருவெங்கை உலா
    (14)
    திருவெங்கை அலங்காரம்
    (15)
    சிவநாம மகிமை
    (16)
    இட்டலிங்க அபிடேக மாலை
    (17)
    இட்டலிங்க நெடுங்கழி நெடில்
    (18)
    இட்டலிங்க குறுங்கழி நெடில்
    (19)
    இட்டலிங்க நிரஞ்சன மாலை
    (20)
    கைத்தல மாலை
    (21)
    சிவஞான பாலைய சுவாமிகள் நெஞ்சுவிடு தூது
    (22)
    சிவஞான பாலைய சுவாமிகள் தாலாட்டு
    (23)
    சிவஞான பாலைய சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி
    (24)
    சிவஞான பாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
    (25)
    சிவஞான பாலைய சுவாமிகள் கலம்பகம்
    (26)
    திருக்கூவப் புராணம்
    (27)
    கண்ணப்பச் சருக்கமும் நக்கீரச் சருக்கமும்
    (காளத்தி புராணம்)
    (28)
    வேதாந்த சூடாமணி
    (29)
    சித்தாந்த சிகாமணி
    (30)
    பிரபுலிங்க லீலை
    (31)
    தர்க்க பரிபாஷை (மொழிபெயர்ப்பு)
    (32)
    நன்னெறி

    சிவப்பிரகாசர் இயற்றிய நூல்களுள் புகழ் பெற்று விளங்குபவை நால்வர் நான்மணிமாலை, பிரபுலிங்க லீலை, நன்னெறி என்பவையாகும். சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரைப் பற்றியும் பத்துப் பத்துப் பாடல்களாக 40 பாடல்கள் கொண்டு விளங்குவது நால்வர் நான்மணிமாலை. பிரபுலிங்கலீலை என்பது சிவபெருமானின் அவதாரமாகிய அல்லம பிரபு என்பவரைத் தலைவராகக் கொண்ட காப்பியம். இது, கன்னட மொழியில் அதே பெயரில் உள்ள நூலின் மொழிபெயர்ப்பு. நன்னெறி என்பது இவரியற்றிய நீதி நூல்.

    வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி
    நெஞ்சம்நெக்கு உருகி நிற்பவர்க் காண்கிலேம்
    திருவா சகமிங்கு ஒருகால் ஓதின்
    கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
    தொடுமணற் கேணியின் சுரந்துநீர் பாய
    மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப்பு எய்தி
    அன்பர் ஆகுநர் அன்றி
    மன்பதை உலகில் மற்றையர் இலரே
                         (நால்வர் நான்மணிமாலை-4)

    என்ற பாடலின் மூலம் வேதத்தை விடத் திருவாசகம் உயர்ந்தது என்கிறார். பிரபுலிங்க லீலையில் பிறவியெடுத்தவன் அறம் செய்து உய்ய வேண்டும். அதாவது செய்யாதவன் உடம்பு பொற்கலத்தில் ஊற்றவேண்டிய பாலை, நில வெடிப்பினிடையே ஊற்றுதல் போல் வீண் என்று கூறுகிறார்.

    எய்தற்கரிய யாக்கைதனக் கெய்திற் றென்றா லதுகொண்டு
    செய்தற்கரிய வறங்கள்பல செய்து துயர்கூர் பிறவியினின்
    றுய்தற் கொருமை பெறவொண்ணா துழல்வோ னுடம்பு
                                                  பொற்கலத்திற்
    பெய்தற் குரியபால் கமரிற் பெய்த தொக்கு மென்பரால் (21)

    (யாக்கை = உடம்பு ; கமர் = நிலவெடிப்பு)

    உடலுறுப்புகளைக் கொண்டு உயர்ந்த நீதிகளைத் தன் நன்னெறியில் கூறி மனம் கவர்கிறார் சிவப்பிரகாசர்.

    பெரியவர் தந்நோய்போற் பிறர்நோய்கண் டுள்ளம்
    எரியின் விழுதாவ ரென்க - தெரியிழாய்
    மண்டு பிணியால் வருந்தும் பிறவுறுப்பைக்
    கண்டு கலுழுமே கண்          (பா. 20)

    என்ற பாடல் மூலம் பிறவுறுப்புகளின் துன்பம் கண்டு கண் அழுதல் போலப் பெரியவர்கள் பிறர் துன்பத்தைத் தம்துன்பம் போல் கொண்டு வருந்துவர் என்கிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2017 11:01:04(இந்திய நேரம்)