தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலக்கண நூல்கள்

  • 2.5 இலக்கண நூல்கள்

    பதினேழாம் நூற்றாண்டிலும் இலக்கண நூல்கள் இயற்றப்பெற்றன. ஏற்கெனவே இருந்த தொல்காப்பியம், நன்னூல் என்பவற்றிற்கு உரை கூறுவன போல் சில நூல்கள் இயற்றப் பெற்றன. தனியாகச் சில நூல்கள் இயற்றப் பெற்றன. இக்காலக் கட்டத்தில்தான் வடமொழியே சிறந்தது எனக் கருதிக் குட்டுப்பட்டோரும் உளர். உரைநூல் எழுதப் புகுந்து, அதற்குரிய மறுப்புரையால் மருண்டவர்களும் உளர். இது மரபை அழியாமல் போற்றி வந்ததையும், அக்காலத் தமிழ்ச் சான்றோரின் தமிழ்ப்பற்றையும் எடுத்துக் காட்டுகிறது. வடமொழி ஏற்றம் பெற்றதால், அதனோடு தமிழ் போட்டியிட வேண்டிய நிலையையும் இது சுட்டிக் காட்டுகிறது.

    2.5.1 வைத்திய நாத தேசிகர்

    ஆசிரியத் தொழில் புரிந்த இவர் திருவாரூரைச் சார்ந்தவர். தமது ஊரான திருவாரூரின் மீது திருவாரூர்ப் பன்மணி மாலை, நல்லூர்ப் புராணம், மயிலம்மை பிள்ளைத் தமிழ் என்ற சிற்றிலக்கியங்களை இவர் இயற்றியிருந்தாலும், 'குட்டித் தொல்காப்பியம்’ எனப்படும் இலக்கண விளக்கம் என்ற நூலை இயற்றிச் சிறப்புப் பெற்றார். தனது மாணவர் ஒருவர்க்கு இலக்கணம் கற்பிக்க இந்நூலை இயற்றினார். இந்நூலில் தொல்காப்பிய, நன்னூல் நூற்பாக்களோடு தாமியற்றிய நூற்பாக்களையும் வைத்து உள்ளார். இந்நூலுக்கு மறுப்பாகச் சிவஞான முனிவர் இலக்கண விளக்கச் சூறாவளி என்ற நூலைப் படைத்தார். இவரது மகனான சதாசிவ நாவலர் என்பவரும் வடுகநாத தேசிகர் என்பவரும் இலக்கண, இலக்கியப் படைப்புகளைப் படைத்துள்ளனர்.

    2.5.2 சுப்பிரமணிய தீட்சிதர்

    தமிழ்மொழி, வடமொழி என்ற இரண்டிலும் புலமைபெற்ற இவர் தஞ்சை அரசவைப் புலவர் இராமபத்ர தீட்சிதர் என்பவர் முன்னிலையில் பிரயோக விவேகம் என்ற நூலை இயற்றினார். இது வடமொழி நெறியினைப் போற்றுவது. இரு மொழிக்குமிடையே உள்ள இலக்கண ஒற்றுமைகளை உணர்த்தும் இந்நூல் போற்றுவாரின்றி அழிந்தது.

    2.5.3 ஈசான தேசிகர்

    வைத்தியநாத தேசிகர், சுப்பிரமணிய தீட்சிதர் போல இவரும் திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்தவர். அக்காலத்தில் மடத்தைச் சார்ந்தவர்கள் எல்லாரும் தமிழ்மொழியையும் வட மொழியையும் கசடறக் கற்றனர். அதனால் இவரும் இருமொழியையும் கற்றார் என்றாலும் இவர் வடமொழிப் பற்றுக்குப் பேர் போனவர். தசகாரியம் என்னும் பண்டார சாத்திரமும் சிவஞான போதச் சூர்ணிக் கொத்தும் இவரியற்றி இருந்தாலும் தாமியற்றிய இலக்கணக் கொத்து நூலால் பெயர் பெற்றவர். அதில் தமிழ் மொழிக்கு மட்டுமே உரிய ‘ற, ன, ழ, எ, ஒ’ என்ற எழுத்துகளால் பெருஞ்சிறப்பு ஒன்றுமில்லை. அது சிறப்புடைய மொழி எனக் கூற அறிவுடையோர் வெட்கப்படுவர். அந்த எழுத்துக்கள் வடமொழியில் இல்லையெனினும் வடமொழியே தமிழைவிட உயர்ந்தது எனக் கூறித் தமிழரின் தீரா வெறுப்பைச் சம்பாதித்தார். இவரைத்தான், “மெல்லத் தமிழினிச் சாகும் என்றந்தப் பேதையுரைத்தான்” என மகாகவி பாரதியார் சாடுகிறார். இவரது மாணவரான சங்கர நமச்சிவாயப் புலவர் நன்னூலுக்கு விருத்தியுரை இயற்றிப் புகழ் பெற்றார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:28:45(இந்திய நேரம்)