Primary tabs
-
2.2 வைணவ இலக்கியம்
இப்பதினேழாம் நூற்றாண்டில் சைவர்களைப் போன்றே வைணவர்களும் மத இலக்கியங்களையும் சிற்றிலக்கியங்களையும் வளர்ப்பதில் ஆர்வம் காட்டினர். அவ்வகையில் ’திவ்யகவி’ என்று அழைக்கப்படும் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் குறிப்பிடத்தக்கவர்.
2.2.1 பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
இவர் அழகிய மணவாள தாசர் எனவும் அழைக்கப்பட்டார். சோழநாட்டு வைணவர்; அந்தணர்; திருவரங்கத்தில் வாழ்ந்தவர். சிலேடை, யமகம், திரிபு அமைத்துப் பாடுவதில் வல்லவர். அஷ்டப் பிரபந்தம் என்றழைக்கப்படும் அழகர் அந்தாதி, திருவரங்கக் கலம்பகம், திருவரங்க அந்தாதி, திருவரங்க மாலை, திருவரங்க ஊசல், திருவேங்கடத் தந்தாதி, திருவேங்கட மாலை, நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி என்ற எட்டு நூல்களை இயற்றி வைணவ இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்.