தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர் ஆட்சி ஓங்கியது. கிறித்தவமும் இசுலாமியமும் ஆதரவு பெற்று வளர ஆட்சியாளர் காரணமாயினர். கிறித்தவ மிஷினரிகளும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களும் தமிழ்க் கல்வியிலும் தமிழ்மொழி வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டினர். பதிப்புக் கலையும் அச்சுக் கலையும் ஏற்றம் பெற்றதால், பழைய தமிழ் நூல்கள் அச்சேறின. உரைநடை வளர்ந்தது. மரபு வழியிலான புராணங்கள், சிற்றிலக்கியங்கள், தோத்திரப்பாக்கள், இலக்கண நூல்கள் ஆகியவை இந்நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்ற, இசை நாடகங்கள், கீர்த்தனைகள், அகராதி, தொகை நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், மேடை நாடகங்கள், பல்துறை நூல்கள் ஆகியவை நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றின. சிலேடை, யமகம், சித்திரகவிகள் என்பவற்றில் இந்நூற்றாண்டின் முற்பகுதியினர் மூழ்கியிருக்க, சிந்து, கண்ணி, கீர்த்தனை என்ற வடிவங்கள் செய்யுளாகவும் நாடகங்களாகவும் இசைப் பாடல்களாகவும் ஏற்றம் பெற்றன. உயர்ந்தோர் கையாண்ட இலக்கியத்தை ஆங்கிலேயரின் பணியும் அரசியல் நிலையும் பரவலாக்கின. தமிழரிடையே படிக்கும் பழக்கம் அதிகமாயிற்று. எதையும் வரலாற்று அறிவுடன் பார்க்கும் திறன் பெருகியது. ஆறுமுக நாவலர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பெ. சுந்தரம் பிள்ளை, இராமலிங்க அடிகள், மஸ்தான் சாகிபு, போப், கால்டுவெல் போன்றோர் இந்நூற்றாண்டில் குறிப்பிடத்தக்கவர்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:30:39(இந்திய நேரம்)