தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஸ்லாமியர் படைப்புகள்

  • 4.4 இஸ்லாமியர் படைப்புகள்

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் இசுலாமியப் புலவர்கள் பலர் தமிழில் தம் சமயம் சார்ந்த கருத்துகளை விளக்கிப் பல படைப்புகளைப் படைத்தனர். அரபிய, பாரசீக இலக்கியங்களைப் பின்பற்றித் தமிழில் புதிய, புதிய இலக்கிய வகைகளைப் படைத்தனர். மக்களிடையே செல்வாக்குப் பெற்ற இலக்கியங்களான மாலை, ஏசல், சிந்து, கும்மி, கண்ணி என்பவற்றையும் படைத்தனர். இக்காலக் கட்டத்தில் தோன்றிய குணங்குடி மஸ்தான், செய்குத் தம்பி பாவலர், சேகனா லெப்பை போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

    4.4.1 குணங்குடி மஸ்தான்சாகிபு

    இசுலாமியத் தாயுமானவர் என்று போற்றப் பெறும் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிர் லெப்பை ஆலிம். இஸ்லாமியச் சமயப்பிரிவுகளில் ஒன்றான சூபி (Sufi) யைச் சார்ந்து மஸ்தான் (துறவி) பட்டம் பெற்றவர். இவர் பாடல்களைத் தொகுத்தவர் சீயமங்கலம் அருணாசல முதலியார். 1813இல் துறவியான பின் சென்னையிலே வாழ்ந்து மறைந்தார். அங்கு அற்புதங்கள் பல நிகழ்த்தினார் என்பர். பேச்சுத் தமிழின் நடையைத் தம் பாடல்களில் கையாண்ட இவர் தம் பாடல்களில் பல தாயுமானவர் பாடல்கள் போலச் சமரசக் கருத்துகளைக் கொண்டு விளங்குகின்றன. இவர் மனோன்மணிக் கண்ணி, முகையத்தீன் சதகம், அகத்தீசர் சதகம், நிராமயக் கண்ணி, ஆனந்தக் களிப்பு ஆகிய நூல்களை இயற்றி உள்ளார். இவரைத் திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயரும் அய்யாசாமி முதலியாரும் போற்றி நூல் இயற்றியுள்ளனர்.

    ஏகப் பெருவெளியில் இருள்கடலில் கம்பமற்ற
    காகம் அது வானேன் கண்ணே றகுமானே (7)

    (ஏகம் = ஒன்று)

    ஊனெடுத்த நாள்முதலா உபயோக மற்றநான்
    கானில்நில வானேனென் கண்ணே றகுமானே (15)

    (ஊன் = உடம்பு)

    வேசந்தனைப் போட்டு மெய்மயக்கும் பொய்க்குருவாய்க்
    காசுபணம் பறித்தேன் கண்ணே றகுமானே (47)

    என்பன அவரியற்றிய றகுமான் கண்ணியின் சில பகுதிகள். இவரைப் பற்றிக் கா.சு. பிள்ளை அவர்கள் குறிப்பிடும் போது, "இவர் பாடல்கள் மிகவும் அன்பு விளைப்பன. கிறித்துமத கண்டனவச்சிர தண்டம் என்னும் ஒரு நூல் இயற்றியுள்ளார். இவர் தம் சொற்பொழிவுகள் திரட்டி அச்சிடப்பட்டுள்ளன. தேவைத் திரிபந்தாதி, அருணைச் சிலேடை வெண்பா மாலை என்ற நூற்களைப் படைத்ததன் மூலம் தன் இலக்கியப் புலமையை உணர்த்தியவர்" என்கிறார்.

    4.4.2 சதாவதானம் செய்குத்தம்பி பாவலர்

    பதினாறு வயதிற்குள் பாப்புனையும் ஆற்றல் பெற்றுப் பாவலர் ஆனவர். சீறாப் புராணத்துக்கு உரை எழுதி உள்ளார். வள்ளலாரின் அருட்பா - மருட்பா விவாதம் நடந்த வேளையில் அருட்பா கட்சியில் நின்று அருஞ்சொற்பொழிவாற்றி வள்ளலாருக்குத் துணை புரிந்தார். அவதான அரசர் என்று போற்றப்படுகிறார். ஷம்சுத் தாசீன் கோவை, கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை, திருநாகூர்த் திரிபந்தாதி, திருக்கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ், நபிகள் நாயகமான்மிய மஞ்சரி, நாகைக் கோவை என்பவற்றைப் படைத்தார். நாகர்கோவில்காரரான இவருக்குத் தமிழக அரசு 1984இல் கோட்டம் எடுப்பித்தது.

    4.4.3 சேகனா லெப்பை

    செய்கு அப்துல் காதர் நயினார் லெப்பை என்பது இவரது பெயர். இவரது இப்பெயர் சேகனா லெப்பை என வழங்கப்படுகிறது. தமிழ், வடமொழி, அராபி, பார்சி முதலிய பன்மொழி வல்லவர். நபிகள் நாயகம் பற்றித் திருப்புகழ் பாடிய இவர் நவீன அகத்தியர் என்று பாராட்டப் பெறுகிறார். அட்டபந்தம், அந்தாதி, கமலபந்தம், நாகபந்தம் முதலிய சித்திர கவிகள் செய்துள்ளார். உமறுவின் சீறாவை நிறைவு செய்யும் வகையில் புதூகுஹ்ஷாம் என்ற புராணத்தை எழுதியுள்ளார்.

    4.4.4 வண்ணக் களஞ்சியப் புலவர்

    ஹமீது இபுராகிம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் வண்ணப்பாக்கள் பாடுவதில் வல்லவர். நாகூர் தர்க்கா சாதுவின் வரலாற்றை மொகிதீன் புராணமாகப் பாடினார். இந்த நூலிற்காகப் பத்தானை மரக்காயர் தம் மகளை இவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். இராஜநாயகம், சுலைமான் நபியின்கதை, தீன் விளக்கம், குத்பு நாயகம் என்னும் நூல்களை இயற்றியுள்ளார்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1

    நவீன கம்பர் என்று போற்றப்படுபவர் யார்?

    2

    ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலை எழுதியவர் யார்?

    3

    அறுவகை இலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?

    4

    மதங்க சூளாமணியின் ஆசிரியர் யார்?

    5

    இசுலாமியத் தாயுமானவர் என்று போற்றப் பெறுபவர் யார்?

    6

    நவீன அகத்தியர் என்று பாராட்டப் பெறுபவர் யார்?

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 12:03:57(இந்திய நேரம்)