தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கிறித்தவர் படைப்புகள்

 • 4.5 கிறித்தவர் படைப்புகள்

  ஐரோப்பாவிலிருந்து சமயம் பரப்ப வந்து, தமிழ் கற்றுத் தொண்டு புரிந்த கிறித்தவர் மட்டும் அன்றி, கிறித்தவ சமயம் சார்ந்த தமிழ்நாட்டுப் பெருமக்களும் தமிழ்த் தொண்டாற்றி உள்ளனர். அவர் தம் பணி பற்றிக் காண்போம்.

  4.5.1 ஐரோப்பிய கிறித்தவர்கள்

  15ஆம் நூற்றாண்டின் இறுதி தொடங்கிச் சமயம் பரப்ப வந்த ஐரோப்பியர் தமிழ்த் தொண்டும் புரிந்தனர். தமிழ்மொழியை முறையாகக் கற்ற அவர்களுள் ஏறத்தாழ 30 பேர் தமிழ்த் தொண்டு புரிந்துளர் என்கிறார் மது. ச. விமலானந்தம். அவர்களுள் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் ஏறக்குறைய 10 பேராவார். அவர்களைப் பற்றி இனிக் காண்போம்.

  • டாக்டர் ஜி.யு.போப்

  தமிழை முறையாகக் கற்ற போப் அவர்கள், 60 ஆண்டுகட்கும் மேலாகத் தமிழ்த்தொண்டு புரிந்தார். தனது கல்லறைமேல் நான் ஒரு தமிழ் மாணவன் என்று பொறிக்கப்பட வேண்டும் என விழைந்தவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து தமிழை உலகறியச் செய்தவர். மேல்நாட்டு அறிவுத் துறைகளான உளநூல், தத்துவ நூல், கணிதம், அளவை நூல் (Logic) என்பவற்றை முதன் முதலில் தமிழில் கற்பித்தவர் இவரே. திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை என்ற நூல்களின் சில பாடல்களையும் சிவஞான போதத்தையும் மொழி பெயர்த்தார். பல ஏடுகளில் தமிழ் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். தோடர் மொழி, துளுமொழி கற்று அவற்றின் இலக்கணத்தை வெளியிட்டார். தமிழ் இலக்கணத்தை Elementary Tamil Grammar என 3 பாகமாக எழுதினார். தமிழ்ப் புலவர்களையும், தமிழ்த் துறவிகளையும் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார்.

  • டாக்டர் கால்டுவெல்

  அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் அவர்கள் 53 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தார். இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளுடன் தமிழ், தெலுங்கு, துளு, மலையாளம் போன்ற மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார் கால்டுவெல். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் ஓர் இனத்தைச் சார்ந்தவை என்பதை தாம் எழுதிய A Comparative Grammar of Dravidian Languages நூலில் புலப்படுத்தினார். தமிழ் மொழியின் வேர்ச் சொற்களைக் கொண்டு, பிறமொழிகளில் பயிலும் பல சொற்கள் தமிழ்ச் சொற்களின் சிதைவே என நிறுவினார். நெல்லை மாவட்ட வரலாற்றை ஆராய்ந்து எழுதிப் பரிசு பெற்ற இவர் கொற்கை, காயல், தூத்துக்குடி போன்ற துறைமுக இடங்களைத் தமது அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து வெளியிட்டார். நற்கருணைத் தியானமாலை, தாமரைத் தடாகம், ஞானஸ்நானம் போன்ற உரைநடை நூல்களும் இயற்றினார்.

  • வில்லியம் தெய்லர்

  ஐரோப்பியர் தமிழைக் கற்க எளிதான பாடநூல்களைப் படைத்த தெய்லர், ஆர்வ மிகுதியால் செந்தமிழ் ஆய்வு புரிந்தார். கீழ்த்திசைக் கையெழுத்துச் சுவடி நிலையத்திலுள்ள ஏட்டுச் சுவடிகளின் பட்டியலை எழுதி வெளியிட்டார். வேதசாட்சி என்ற நூலை வெளியிட்டார். ராட்லர் என்பவர் அச்சிட்டு முடிக்காதுவிட்ட அகராதியை 1400 பக்கம் கொண்ட பேரகராதியாக வெளியிட்டார்.

  • எல்லீஸ் துரை

  தமிழ், வடமொழி இரண்டையும் முறையாகக் கற்ற இவர் எல்லீசர் என்றும் அழைக்கப் பெறுகிறார். சென்னையில் வருவாய் வாரியச் செயலராக இருந்து, காணியாட்சி முறையும் வேளாண் சீர்திருத்தமும் கண்டவர். முத்துச்சாமி பிள்ளை என்பவரைக் கொண்டு வீரமாமுனிவரின் நூல்களை எல்லாம் தேடச் செய்தார். வீரமாமுனிவர் வரலாற்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். திருக்குறளின் முதல் 13 அதிகாரங்கட்கு முதன்முதலில் உரையெழுதினார். கால்டுவெல்லுக்கு முன்பே, திராவிட மொழிகளைக் கற்றுத் திராவிட மொழிகள் வடமொழியினின்றும் வேறானவை; கிளை மொழிகள் அல்ல; தனித்து இயங்குவன என்ற உண்மைக் கருத்துகளை வெளியிட்டார்.

  • பெர்சிவல் பாதிரியார்

  ஆறுமுக நாவலரிடம் தமிழ் கற்று யாழ்ப்பாணத்தில் சமயப்பணி புரிந்த பெர்சிவல் பாதிரியார் யாழ்ப்பாணக் கல்லூரியைத் தோற்றுவித்தார். விவிலியத்தைத் தம் குருவுடன் சேர்ந்து மொழி பெயர்த்தார். 1874இல் 6156 பழமொழிகளைத் திரட்டி ஆங்கிலப் பெயர்ப்புடன் வெளியிட்டார். தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ் அகராதிகள் வெளியிட்டார். தமிழில் முதன்முதலில் சென்னையில் தினவர்த்தமானி என்ற செய்தித்தாளை நடத்தினார். ஆராதனை ஒழுங்கு, மெதடிஸ்த் வினாவிடை என்ற நூல்களை எழுதினார்.

  • பாவர்

  ஆங்கிலோ இந்தியரான இவர் திருநெல்வேலியில் வாழ்ந்தார். கிறித்தவ மதம் இந்தியாவில் பரவியதைப் பற்றி நூல் எழுதியுள்ளார். 1871-இல் முழுமையான தமிழ் பைபிள் வெளிவரத் துணை புரிந்தவர்களுள் இவரும் ஒருவர். ஆங்கிலத்தில் நன்னூல் முழுவதையும் சீவக சிந்தாமணியின் நாமகள் இலம்பகத்தினையும் தன் ஆங்கில உரையுடன் வெளியிட்டு உள்ளார். வேத அகராதி, நியாயப்பிரமாண விளக்கம், விசுவாசப் பிரமாண விளக்கம், பதமஞ்சரி, சாதி வித்யாச விளக்கம், தர்ம சாத்திர சாரம், பிரசங்க ரத்தினாவளி என்ற உரைநடை நூல்களை எழுதினார்.

  • லாசரஸ்

  திருக்குறள், நன்னூல் இரண்டையும் முழுமையாக மொழிபெயர்த்து வெளியிட்டதுடன் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப் பழமொழிகளைத் திரட்டி The Dictionary of Tamil Proverbs என்ற நூலும் வெளியிட்டார்.

  4.5.2 தமிழ்க் கிறித்தவர்கள்

  மேலை நாட்டுக் கிறித்தவர்கள் குறிப்பாக ஐரோப்பியர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டைப் போல், தமிழ்நாட்டுக் கிறித்தவர்களும் தம் படைப்பால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தினர்.

  • வேதநாயகம் பிள்ளை

  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்று மாயூரத்தில் முனிசீப்பாகப் பணியாற்றினார். நீதிச் சட்டங்களை முதன்முதலில் தமிழில் எழுதியவர் இவரே. பிரதாப முதலியார் சரித்திரம் என்ற முதல் தமிழ் நாவலையும் எழுதியவர் இவரே. பின் சுகுண சுந்தரி சரித்திரம் என்ற நாவலும் எழுதினார். கடிதம் எழுவதுபோல் சில தனிப்பாடல்கள் எழுதியுள்ளார். நலுங்குப்பாடல் வகையிலும் அங்கத இலக்கிய வகையிலும் பாடல் புனைந்துள்ளார். சாதிவேறுபாட்டை வெறுத்த இவர், பெண்கள் முன்னேற்றம், பெண்கல்வி என்பதிலும் செய்யுள், உரைநடை என்பதிலும் மகாகவி பாரதிக்கு முன்னோடியாகத் திகழ்கிறார். தாயுமானவரைப் போன்றே சமரசத்தை விரும்பி, சர்வசமயச் சமரசக் கீர்த்தனை பாடினார். நீதி நூல், பெண்மதி மாலை, தேவமாதா அந்தாதி, திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, பெரியநாயகி அம்மாள் பதிகம், சத்திய வேதக் கீர்த்தனை என்ற நூல்களைப் பாடினார். அக்காலத்தில், வழக்குகளில் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நேர்மையான எண்ணம் கொண்டவர். இலஞ்சம் வாங்கிப் பிழைப்பவர்களை, ‘ஏதுக்கோ வாங்குகிறீர் இலஞ்சம் ....’ என்ற பாட்டில் கடுமையாகச் சாடுகிறார். இவர் தம் பாடல்களில் வடமொழிச் சொற்கள் பல சர்வ சாதாரணமாய்க் கலந்து விளங்குகின்றன.

  போதக யூரோப்பு மாதர்களைக்கண்டு
  பொங்கிப் பொறாமை கொண்டோமே என்றும்
  பேதம் இல்லா இந்தியா தனில்நாங்கள்
  பிறந்தென்ன லாபம் கண்டோமா
  நாதக் கல்விக்கு நகை எந்தமூலையே
  நாங்கள் விரும்போம் நவரத்ன மாலையே
  வேதநாயகன்செய் பெண்மதி மாலையே
  வேண்டினோம் தாரும் விடோம் உங்கள் காலையே

  (சர்வசமயச் சமரசக் கீர்த்தனைகள் - வேதநாயகம் பிள்ளை -கேளும் பூமான்களே என்ற 5 - ஆம் பாடல்)

  என்று கல்வி வேண்டி ஒரு பெண் பாடுவதாக வேதநாயகம் பிள்ளை பாடியுள்ளார்.

  • H.A கிருஷ்ணப் பிள்ளை

  வைணவ வேளாளர் மரபில் தோன்றிக் கிறித்துவராக மாறி, கிறித்தவக் கம்பன் என்று புகழப் பெறுபவர். ஜான்பன்யன் என்பவர் எழுதிய Pilgrims Progress என்ற நூலை இரட்சண்ய யாத்திரீகம் எனத் தமிழ்ப்படுத்தினார். இவர் பாடல்கள் ஆழ்வார், நாயன்மார் பாடல்கள் போல் உருக்கமாக அமைந்துள்ளன. கிறித்தவர்களின் தேவாரம் என்றழைக்கப் பெறும் இரட்சண்ய மனோகரம் என்ற நூலையும், இரட்சண்ய சமய நிர்ணயம், இரட்சண்யக் குறள், போற்றித் திருஅகவல் என்ற நூலையும் பாடினார். இலக்கணச் சூடாமணி, கிறித்தவரான வரலாறு என்ற உரைநடை நூல்களையும் காவிய தர்ம சங்கிரகம் என்ற தொகுப்பு நூலையும் எழுதினார். கால்டுவெல்லின் பரதகண்ட புராதனம் என்ற நூலையும் வேதமாணிக்க நாடாரின் வேதப் பொருள் அம்மானை என்ற நூலையும் பதிப்பித்தார். பெர்சிவல் பாதிரியாருக்குத் தமிழ் கற்பித்தார்; தினவர்த்த மானியின் துணை ஆசிரியராகவும் திகழ்ந்தார்.

  • வேதநாயகம் சாத்திரியார்

  சரபோசி மன்னரின் ஆஸ்தான வித்துவானாக, அரசவைப் புலவராகத் திகழ்ந்த சாத்திரியார் கிறித்தவப் பாக்கள் பல்லாயிரம் இயற்றி, ஆஸ்தான வித்துவான் பட்டம் பெற்றவர். கிறித்தவப் பாடல்களைத் தமிழிசையுடன் இயைத்து இயற்றி முதன் முதலில் வழிகோலியவர் இவரே! வின்சுலோவுடன் இணைந்து குருட்டுவழி என்ற நூலையும், அக்காலத்திலே 100 வராகன் பரிசு பெற்ற நோவாவின் கப்பல் என்ற நூலையும் பாடினார். சரபோசி மன்னர் வேண்டியும் ‘கிறித்துவைத் தவிரப் பாடேன்!’ என்று கூறியவர். பெத்லகேம் குறவஞ்சி, சென்னைப் பட்டணப் பிரவேசம், ஞான ஏற்றப்பாட்டு, ஞானத்தச்சன் நாடகம், ஞானக் கும்மி, ஆதியானந்தம், பராபரன்மாலை, ஞானஉலா, ஞான அந்தாதி முதலான 52 நூல்களைப் பாடியுள்ளார். தமிழகப் பக்தி நெறிப்படி கர்த்தரை வழிபட வழிகாட்டியவர்.

  • அந்தோணிக்குட்டி அண்ணாவியார்

  தூத்துக்குடி மகாவித்துவான் என்று போற்றப் பெறும் அந்தோணிக் குட்டி ஆசிரியத் தொழில் புரிந்து வந்தார். கிறித்துவின் மீது பாக்கள், கீர்த்தனைகள் பாடியுள்ளார். அருணகிரி நாதரைப் பின்பற்றி கிருத்து சங்கீதம் என்ற நூலை இயற்றினார். ஆசைப்பத்து, அருள்வாசகம், ஆனந்தமஞ்சம் என்பன இவரியற்றிய பிற நூல்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 12:09:47(இந்திய நேரம்)