தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மரபு சார்ந்த இலக்கியங்கள்

 • 4.1 மரபு சார்ந்த இலக்கியங்கள்

  சென்ற நூற்றாண்டைப் போலவே இந்நூற்றாண்டிலும் மடத்தின் ஆதரவிலும் செல்வர்களின் ஆதரவிலும் சிற்றரசர்களின் ஆதரவிலும் இலக்கியங்கள் தோன்றின. இப்பிரிவில் குறிப்பிடப்படுபவர்கள் எல்லாம் வானாளாவிய கற்பனை, சொல் அலங்காரங்கள், சித்திரக்கவிகள் என்பனவற்றில் கட்டுண்டு மரபு வழியான இலக்கியங்களையே படைத்தவர்கள், தெய்வத்தின் பேரிலும் ஊரின் பேரிலும் வள்ளல்களின் பேரிலும் இவர்கள் இலக்கியங்களைப் படைத்தனர்.

  4.1.1 மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை

  மகாவித்துவான் என்று பாராட்டப்பெறும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதீனத்தின் மடத்துப் புலவராக விளங்கியவர். சிவஞான முனிவரைப் போன்றே புலமைப் பரம்பரையை உருவாக்கியவர். நவீன கம்பர் என்றும் பிற்காலக் கம்பர் என்றும் போற்றப் பெறுபவர். நாளொன்றுக்கு நானூறு பாடல் பாடும் ஆற்றல் பெற்றவர். ஆசு கவி, மதுர கவி, சித்திரக் கவி, வித்தாரக் கவி என்னும் 4 வகைக் கவிகளும் பாடவல்லவர். இவர் இயற்றிய 22 புராணங்களுள் 16 தலபுராணங்கள், பிள்ளைத் தமிழ் 10, அந்தாதி 16, உலா 1, மாலை 4, கோவை 3, கலம்பகம் 2 தவிர சேக்கிழார் பிள்ளைத்தமிழ், தில்லையமக அந்தாதி, திருவானைக்கா இரட்டை மணிமாலை என 61 நூல்கள் இயற்றியுள்ளார். இவரிடம் கல்வி கற்ற 11 பேர் தலைசிறந்த நூல்களைப் படைத்துள்ளனர். பழந்தமிழ் இலக்கிய வர்ணனைகள், கற்பனைகள், சொல் அலங்காரங்கள் எல்லாம் நிறைந்து இருந்தன.

  சேக்கிழார் பக்திச்சுவை ததும்பப் பெரியபுராணம் பாடினார். அவரை அழகானதொரு வரியில் பின்வருமாறு பிள்ளையவர்கள் கூறுகின்றார்:

  பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ

  (வலவ = அறிஞன்)

  4.1.2 இராமலிங்க அடிகள்


  இராமலிங்கர் வடலூர் சபை

  இளமையிலேயே கவிதை பாடும் ஆற்றலை இறையருளால் பெற்றார் இராமலிங்கர்; அவரது எதிரிகள் கூட வணங்கிப் போற்றும் தூய வாழ்க்கை வாழ்ந்தவர். விருத்தம் எனும் பாவகையில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார். தாயுமானவர் போன்று சமய சமரச நெறியைப் போற்றியவர்; அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை என்பது இவரது தாரக மந்திரம். கீர்த்தனை, கும்மி, கண்ணி, சிந்து முதலிய நாட்டுப்புற வடிவங்களைத் தம் பாடலில் கையாண்டவர்.

  சைவ, வைணவச் சமயங்களிடையே ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியை இந்நூற்றாண்டுப் புலவர்தம் படைப்புகளில் கண்டதாலோ என்னவோ சமயங்களிடையே சமரசத்தை வலியுறுத்துகிறார். “வைணவர்கள் சிவனையோ, சைவர்கள் திருமாலையோ போற்றிப் பாடாத காலத்தில் இவர் திருமாலின் மேல் ஸ்ரீராம நாமத் திருப்பதிகம், ஸ்ரீவீரராகவப் பெருமாள் போற்றித் திருப்பஞ்சகம் பாடியுள்ளார்” என்று வியக்கிறார் மு.வ.

  இவருடைய பாடல்களை இவரது மாணவர்கள் அருட்பா என்று பெயரிட்டு அழைத்தனர். அதுவரை தேவார, திருவாசகத்தை மட்டுமே அவ்வாறு அழைத்து வந்தனர். இதனால் ஆறுமுக நாவலர் அருட்பா என்று அழைப்பது தவறென நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்; பின் தோற்றார்.

  ஜீவகாருண்யம், ஆன்மநேய ஒருமைப்பாடு, சோதி வழிபாடு என்பவற்றைப் போற்றிய அடிகள் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற 2 உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். ஏறத்தாழ 6000 பாக்கள் கொண்ட திருவருட்பாவை இயற்றியுள்ளார். மேலும் வியாக்கியானங்கள், மருத்துவம், உபதேசம், கடிதம், அழைப்பிதழ், விண்ணப்பங்கள் எனப் பல்துறையிலும் படைப்புகளைப் படைத்துள்ளார்.

  இராமலிங்கரின் திருவருட்பா பாடல்களை ஆறு திருமுறைகளாகத் தொகுத்தவரும் வகுத்தவரும் முதன் முதலில் பதிப்பித்தவரும் தொழுவூர் வேலாயுத முதலியார் ஆவார். இறைவனைக் காதலனாகவும் தன்னைக் காதலியாகவும் கொண்டு பாடப்பட்ட பல பாடல்களை அருட்பாவில் நாம் காணலாம். “ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே” என்று தான் பாடல்களை இயற்றிய காரணத்தைக் கூறுகிறார். சிறிது கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் தம் பாடல் பயன்பட வேண்டுமென்பதே இவரது நோக்கம். நாரையையும், கிளியையும் இறைவனிடம் தூது அனுப்பும் முறையிலும், மாணிக்கவாசகரைப் பின்பற்றி உந்தீபற என்றும், அடைக்கலமே என்றும், ஊதூதுசங்கு என்றும் முடியும் பாடல்களைப் பாடியுள்ளார்.

  எளிய சொற்களுக்கு இடையே மிக நுட்பமான தத்துவ அனுபவங்கள் பொதிந்த, ஆழ்ந்த பாடல்களும் உண்டு.

  ஆணிப்பொன் அம்பலத்தே கண்ட காட்சிகள்
  அற்புதக் காட்சியடி அம்மா
  அற்புதக் காட்சியடி              (காட்சிக்கண்ணி - பாடல் 5)

  வானத்தின் மீதுமயிலாடக் கண்டேன்
  மயில் குயில் ஆச்சுதடி - அக்கச்சி
  மயில் குயில் ஆச்சுதடி

  என்ற பாடல்கள் அத்தகையன.

  “தமிழ்க் கவிதைக்குத் தெளிவும் எளிமையும் உருக்கமும் தந்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய பெருமை இராமலிங்கரையே சாரும்” என்கிறார் மு.வ.

  4.1.3 சிவக்கொழுந்து தேசிகர்

  சிவக்கொழுந்து தேசிகர் தஞ்சையில் ஆட்சி புரிந்த மராட்டிய அரசர் சரபோஜியின் அரசவைப் புலவராக இருந்தவர். இரண்டு தலபுராணங்களும் மூன்று உலா நூல்களும் ஒரு கோவையும் சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகமும் இயற்றினார். இவருடைய பாடல்கள் எல்லாம் பழைய இலக்கியப் பாங்கில் அமைந்தவை. இவரது பாடல்களை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போற்றி மனப்பாடம் செய்தார்.

  4.1.4 வேலுச்சாமிக் கவிராயர்

  வெண்பா பாடுவதில் வல்ல வேலுச்சாமிக் கவிராயர் கந்தபுராண வெண்பா, திருக்கச்சூர் ஆலக்கோயில் புராணம், திருவேட்டக்குடிப் புராணம், தில்லை விடங்கன் புராணம், தில்லை நிரோட்டக யமக அந்தாதி, தேவாரச் சிவத்தல வெண்பா போன்ற நூல்களைப் பாடியுள்ளார். இவர் சிவகங்கைச் சிற்றரசரால் ஆதரிக்கப்பட்டார். வெண்பா பாடுவதில் சிறந்து விளங்கிய இவரை வெண்பாப்புலிக் கவிராயர் என்பர்.

  4.1.5 சோமசுந்தர நாயகர்

  வடமொழி, தென்மொழி என்னும் இருமொழிச் சமய நூல்களையும் கற்றவர். வைணவத்தில் இருந்து கடும் சைவப் பற்றாளராக மாறியவர். சமயச் சொற்பொழிவு ஆற்றுவதில் இணையற்ற திறமை பெற்றவர். பாஸ்கர சேதுபதி மன்னன் அவையில் வைதிக சைவ சித்தாந்த சண்ட மாருதம் என்ற பட்டம் பெற்றவர். சைவசமய உண்மைகளை விளக்கும் உரைநடை நூல்கள் நூற்றுக்கும் மேல் இயற்றினார். அவற்றில் வடமொழிப்புக் கலப்பு மிகுதி. செந்தமிழ்ச் சொற்களால் ஆன செய்யுள்கள் பலவும் எழுதியுள்ளார். பரசமய கோளரி என்றும் பாராட்டப் பெற்றார். பிரமாநுபூதி, சிவநாமப் பஃறொடை வெண்பா, ஆச்சாரியப் பிரபாவம், ரத்நாவளி என்பன இவரியற்றிய நூல்களுள் சில. மறைமலையடிகள் இவரது மாணவர்.

  4.1.6 தண்டபாணி சுவாமிகள்


  தண்டபாணி சுவாமிகள்

  எட்டு வயதிலேயே கவி பாடியவர். முருகபக்தி காரணமாக இளவயதிலேயே முருகதாச சுவாமிகள் என்று போற்றப்பட்டார். திருப்புகழ் போலச் சந்தப்பாக்கள் பல பாடியதால் திருப்புகழ் சுவாமிகள் என்று போற்றப்பட்டார். அருணகிரி நாதர் வரலாற்றை ஒரு புராணமாகப் பாடியுள்ளார். புலவர்களின் வரலாறுகளைக் கூறும் புலவர் புராணம் இவர் இயற்றியதே ஆகும். வண்ணங்கள் பாடும் தன்மையால் இவர் வண்ணச் சரபம் என்றும் அபர அருணகிரிநாதர் என்றும் சரபகவி வித்வான் என்றும் போற்றப்படுகிறார்.

  தில்லைத் திருவாயிரம், தெய்வத் திருவாயிரம், ஏழாயிரப் பிரபந்தம், திருச்செந்தூர்க் கோவை, திருச்செந்தூர்த் திருப்புகழ், திருமயிலைக் கலம்பகம், சென்னைக் கலம்பகம், ஆமாத்தூர்த் தலபுராணம் முதலிய நூல்களையும், அறுவகை இலக்கணம் என்ற இலக்கண நூல்களையும் இயற்றியுள்ளார்.

  4.1.7 பூவை கலியாண சுந்தர முதலியார்

  பூவை கலியாண சுந்தர முதலியார் கற்பக விநாயகர் பதிகம், சித்தாந்த சாதனக் கட்டளை, காமாட்சி அம்மன் பதிகம், மாசிலாமணியீசர் பதிகம், சுந்தர விநாயகர் பதிகம், திருவான்மியூர் புராணம், சித்தாந்தக் காரியக் கட்டளை, திரிபுரசுந்தரி மாலை என்பவற்றுடன் சேக்கிழார் வரலாறு, செய்யுள் இலக்கணம், காளத்தி, புராண வசனம், திருவேற்காட்டுப் புராண வசனம், திருவொற்றியூர்ப் புராண வசனம் என 15 உரைநடை நூல்களும் எழுதியுள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 11:39:07(இந்திய நேரம்)