தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பத்திரிகைகளும் உரைநடை வளர்ச்சியும்

  • 4.7 பத்திரிகைகளும் உரைநடை வளர்ச்சியும்

    அச்சு இயந்திர அறிமுகத்தாலும், உரைநடை வளர்ச்சியாலும் பத்திரிகைகள் பல தொடங்கப்பட்டன. பல புதிய இலக்கிய வடிவங்கள் அறிமுகமாயின.

    4.7.1 பத்திரிகைகள்

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல சுவையான கட்டுரைகளையும் அறிவுக்கு விருந்தான பகுதிகளையும் மக்களிடையே பரப்புவதற்குப் பயன்பட்டவை இதழ்களே! அவற்றுள் தினவர்த்தமானி (1856), ஜனவிநோதினி (1870), விவேக சிந்தாமணி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சுதேச மித்திரன் நாளிதழ் (1882), மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்தி வரும் செந்தமிழ் இதழ், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்தி வரும் தமிழ்ப் பொழில் இதழ், திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்க் கழகத்தார் நடத்தி வரும் செந்தமிழ்ச் செல்வி என்பன அதிக அளவில் விற்பனையான இதழ்கள். இவை தவிர பூவை கலியாண சுந்தரனாரைத் துணை ஆசிரியராகக் கொண்டு 1918இல் வெளிவந்த சித்தாந்தம், 1899இல் வெளிவந்த வித்யா விநோதினி, 1888இல் வெளிவந்த தமிழ்ச்செல்வம், விவேகபாநு என்பனவும் குறிப்பிடத்தக்க இதழ்களே! இவ்விதழ்களுள் பெரும்பான்மையானவை தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    4.7.2 உரைநடை வளர்ச்சி

    அச்சு இயந்திரங்களின் வரவால் தமிழில் உரைநடை இலக்கியம் புதிய பொலிவைப் பெற்றது. ஏட்டுச் சுவடிகளில் மட்டுமே அடைபட்டிருந்த தமிழ் இக்காலக் கட்டத்தில் பல்கிப் பெருகியது எனில் மிகையாகாது. உரைநடை வளர்ச்சியினால் புதினம் போன்ற புதிய இலக்கிய வடிவங்கள் தமிழில் வந்தன.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் பலதரப்பட்ட உரைநடை வகைகள் நிலவின. இறையனார் அகப்பொருள் போன்று சொற்செறிவு, அணி, நீண்ட தொடர்கள் கொண்ட உரைநடை, வடமொழிச் சொற்களைத் தாராளமாய்க் கலந்து உருவான பண்டித நடை, சிறிய சிறிய எளிய வாக்கியங்களால் ஆன நடை, எளிதில் பொருள் விளங்காத, கடுஞ்சொற்கள் கொண்டு அமையும் நடை எனப் பல வகைகள் நிலவின. பள்ளிகளில் மாணவர்க்குப் போதிப்பதற்கென்றே எளிய நடையில் அமைந்த உரைநடை நூல்களும் இந்நூற்றாண்டில் இயற்றப் பெற்றன. பாமரரையும் மகிழ்விக்கப் பெரிய பெரிய எழுத்துகளில் முதன்முதலாகப் புராணக் கதைகளும் நாட்டுப்புறக் கதைகளும் பதிப்பிக்கப் பெற்று வெளியிடப் பெற்றன. இவற்றை மக்கள் அதிகம் போற்றினர்.

    திருச்சிற்றம்பல தேசிகர் கம்பராமாயணத்தையும் இராமாயண உத்தர காண்டத்தையும் உரைநடையில் எழுதினார்.
    நகைச்சுவைக் கட்டுரைகள் நிரம்பிய விநோதரச மஞ்சரி என்ற நூல் வீராசாமி செட்டியாரால் வெளியிடப் பெற்றது.
    நாகை தண்டபாணிப் பிள்ளை புத்தரின் வரலாற்றையும், தொழுவூர் வேலாயுத முதலியார் திருவெண்காட்டடிகள் வரலாறு, வேளாண் மரபியல், சங்கர விசயம் என்ற உரைநடை நூல்களையும் எழுதினர். பெரிய புராணத்தையும் மார்க்கண்டேய புராணத்தையும் கூட உரைநடையில் எழுதியுள்ளார் தொழுவூரார்.
    யாழ்ப்பாணத் தமிழறிஞரான ஆறுமுக நாவலர் தமிழ்ப் பாட நூல்களைத் தாமே எழுதித் தனது அச்சகத்தில் அச்சிட்டார். பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் என்பவற்றை உரைநடையில் எழுதியதுடன் இலக்கணத்தை எளிதில் கற்பதற்கும் சைவ சமயத்தை அறிந்து கொள்வதற்கும் எளிய உரைநடை நூல்களை எழுதியதால், இவரைத் தமிழ் உரைநடையின் தந்தை எனலாம்.
    • புதினம் (Novel)

    உரைநடை இலக்கிய வகையான நாவல்தான் தமிழ்மொழியில் முதன்முதலில் 1879இல் தோன்றியது. சிறுகதை பின்னால் தோன்றியது. தென்னக நாவலாசிரியர்களின் தலைவராகி, தமிழ் நாவலின் தந்தை என்ற சிறப்பினை மாயூரம் வேதநாயகம் பிள்ளை பெறுகிறார். வேத நாயகம் பிள்ளை, குருசாமி சர்மா, ராஜம் அய்யர், மாதவையா, நடேச சாஸ்திரி என்ற ஐவரும் தமிழ் நாவல் உலகின் தொடக்கத்தை சமூகச் சீர்திருத்தம், பெண்மை போற்றல் என்பவற்றைக் கருவாகக் கொண்டு அமைத்தனர்.

    மாவட்ட நீதிபதியாகத் திகழ்ந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1876இல் தமிழில் பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நாவலை எழுதினார். கதை கேட்கும் ஆர்வம் மக்களுக்கு இருந்ததால், தாம் உரைநடை வாயிலாகப் பல கருத்துகளை உணர்த்த முடியும் என அவர் நினைத்தார்.

    தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் கிராமங்களிலும் நகரங்களிலும் தாம் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, குடும்ப, சமுதாய வாழ்க்கை நிலைகளைச் சொல்லோவியமாக வடித்துக் காட்டினார். இவரது இரண்டாவது நாவல் சுகுண சுந்தரி (1887) பெண்மையைப் போற்றுகிறது. முதல் நாவலில் கதைமாந்தர் ஒருவர் கதை கூற, இரண்டாவது நாவலில் ஆசிரியரே கதைகூறிச் செல்கிறார்.

    பிரேமகலாவதீயம் என்ற நாவலை சு.வை. குருசாமி சர்மா என்பவர் எழுதினார். குடும்பச் சூழலைப் பின்பற்றி இந்நாவல் அமைந்துள்ளது.

    1893இல் அ. மாதவையா எழுதிய சாவித்ரி சரித்திரம் என்ற நாவல் அரைகுறையாக விடப்பட்டது. இவர் எழுதிய பத்மாவதி சரித்திரத்தில் முதல் பாகமும், இரண்டாவது பாகமும் வெளிவந்தன. தெளிவான பாத்திரப் படைப்பும், ஆசிரியரின் சீர்திருத்த ஆர்வமும் இதில் புலனாகிறது. விஜய மார்த்தாண்டன், முத்துமீனாட்சி என்னும் நாவல்களையும் அவர் இயற்றினார். தமிழ்நாவல் துறையில் உள்ளீடு, வடிவு ஆகிய இருவகையிலும் புதுமை வளர்த்தவர் மாதவையா என மு.வ. புகழ்கிறார்.

    1896இல் இராஜம் ஐயர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் வெளிவந்தது. தொடர்கதையாக வெளிவந்து பின் நாவலாக அச்சிடப்பட்டது. கிராம வாழ்க்கையும் ஜல்லிக்கட்டு விழாவும் அக்கால மக்களின் பழக்க வழக்கங்களும் உள்ளவாறே கூறப்பட்டுள்ளன. மனித வாழ்க்கைத் தத்துவம் செறிந்து காணப்படுகிறது நாவல்.

    1894இல் பண்டித ச.ம. நடேச சாஸ்திரி என்பவர் தானவன் என்ற நாவலை எழுதினார். இவரே 1900ஆம் ஆண்டில் தீனதயாளு என்னும் நாவலை எழுதினார். இவருடைய திக்கற்ற இரு குழந்தைகள், மதிகெட்ட மனைவி ஆகிய நாவல்கள் 1902, 1903இல் வெளிவந்தன.

    நாகை தண்டபாணி என்பவர் சதாநந்தர், ஏகம்பஞ்சநதம், கலாசுந்தரி, மாயாவதி முதலிய நாவல்களை அடுத்த ஆண்டுகளில் இயற்றினார். பொதுவாக, இக்கால கட்டத்தில் எழுந்த நாவல்களில் நீதி போதனைகள் அதிகம், கிளைக் கதைகளும் வலிந்து கூறப்பட்ட பாடல்களும், பெண் முன்னேற்றச் சிந்தனைகளும் காணப்படுகின்றன. இதே காலத்தில் இலங்கையிலும் மலேசியாவிலும் கூட நாவல்கள் இயற்றப் பெற்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 12:48:55(இந்திய நேரம்)