தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05111l3-1.3 மொழி வகைகள்

  • 1.3 மொழி வகைகள் (Types of Languages)

    மொழியின் இயல்பு, பயன்பாடு, தன்மை, பயன்படுத்துபவரது தகுதி, பயன்படுத்துபவரது எண்ணிக்கை, பயன்படுத்துபவரது மதிப்பு, வாழும் இடம் போன்றவற்றின் அடிப்படையில் மொழியைக் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்.

    ஒரு மொழியிலிருந்து பல மொழிகள் கிளைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு அடிப்படையாக அமையும் மொழியை மூல மொழி என்று குறிப்பிடுவார்கள்.

    தனி மனிதர் பேசும் மொழியைத் தனி மொழி என்பார்கள்.

    ஒரே மொழியைப் பலரும் பயன்படுத்தினாலும், அவரவர்களுடைய பின்புலம், சூழ்நிலை காரணமாக ஒவ்வொருவரின் பேச்சிலும் எழுத்திலும் ஒரு தனித்தன்மை ஏற்படும். இதையே தனி மொழி என்று சொல்லுகிறோம்.

  • மூல மொழி
  • அடிப்படை மொழி என்றும், முன்னை மொழி என்றும் தொன்மை மொழி என்றும் மூல மொழி வழங்கப்படுகிறது. ஒரு மொழி அடிப்படையாக அமைய, அதிலிருந்து பல மொழிகள் உருவாகலாம். அந்த நிலையில் அடிப்படையாக இருந்த மொழியை மூல மொழி என்று சொல்வர். தமிழ் ஒரு மூல மொழி. ஏனென்றால் தமிழின் சொற்களில் பெரும்பாலானவை வேர்ச்சொற்கள். இவற்றிலிருந்துதான் எண்ணற்ற சொற்கள் உருவாக்கப்படுகின்றன. திராவிட மொழிகளில் உள்ள சொற்களின் வேர்ச்சொற்களை ஆய்ந்து பார்த்தால் அவை தமிழ் வேர்ச்சொற்களாகவே உள்ளன. எனவே, ‘முன்னைத் திராவிடம்’, ‘மூலத் திராவிடம்’, ‘தொல் திராவிடம்’ என்றெல்லாம் கூறுவது தமிழுக்கு வெகுவாகப் பொருந்தும் என்பார் தேவநேயப் பாவாணர்.

  • தனி மொழி
  • தனி மொழி என்பது ‘தனியாள் பேசும் மொழி’ (Idiolect) என்பர். தமிழ் என்பது ஒரு மொழி. அதைத் தமிழகத்தில் இருக்கும் தமிழாசிரியராகிய நான் பேசுகிறேன். எழுதுகிறேன். அதே தமிழை வேற்றுமண்ணில் வசிக்கும் தமிழராகிய நீங்கள் பேசுகிறீர்கள்; எழுதுகிறீர்கள். அதே தமிழை வேற்று மொழி பேசும் வெளிநாட்டு மாணவர்களாகிய நீங்கள் பேசுகிறீர்கள்; எழுதுகிறீர்கள். தமிழ் ஒரே மொழிதான். ஆனால் அதைப் பேசுகின்ற, எழுதுகின்ற நானும், நீங்களும் வெவ்வேறு பின்புலத்தைக் கொண்டவர்கள். அதற்கேற்ப, நம் ஒவ்வொருவர் தமிழும் வெவ்வேறாக அமைகிறது அல்லவா? இதையே ‘தனி மொழி’ என்பர். வேறுபாடுகள் இடம்பெறலாம். இருந்தபோதிலும் நான் பேசுவதை நீங்களும், நீங்கள் பேசுவதை நானும் புரிந்து கொள்ள முடியும். எழுதுவதைப் படிக்க முடியும். அதில் சிக்கல் இருக்காது. தனி மொழியின் சிறப்பு இதுவாகும்.

  • செந்தமிழ், கொடுந்தமிழ்
  • பழந்தமிழ் இலக்கண நூல்கள் தமிழைச் செந்தமிழ் என்றும், கொடுந்தமிழ் என்றும் பாகுபாடு செய்திருப்பது தனி மொழியாய் அமைகின்ற வேறுபாடுகளை வைத்துத்தான். இடத்திற்கு இடம் வேறுபட்ட பொருளில் வழங்கும் சொற்களைத் தமிழ் இலக்கணம் திசைச் சொற்கள் என்று குறிக்கிறது. இவ்வாறு சொற்களில் மட்டும் அன்றிப் பேசும் முறை, சொல்லைக் கையாளும் வகை, வாக்கிய அமைப்பு, ஒலிக்கும் முறை போன்றவற்றால் எழும் எல்லா வேறுபாடுகளையும் உள்ளடக்கியது ‘தனி மொழி’.

    நில அமைப்பு, அரசியல் முதலிய காரணங்களினால் இரண்டு மொழிகள் ஒரே இடத்தில் வழக்கில் இருக்கலாம். நாளடைவில் இரண்டு மொழிகளிலிருந்தும் சில கூறுகள் இணைந்து ஒரு புது மொழி உருவாகலாம். அந்தப் புது மொழி, இரண்டு மொழிப் பிரிவினருக்கும் புரியக் கூடியதாகவும், இருவருக்கும் பொதுவானதாகவும் அமையும். அப்படி அமைவதைப் பொது மொழி என்று கூறுவார்கள்.

    ஒரே மொழியைப் பேசுகிறவர்களும் கூட, அவரவர்கள் சார்ந்திருக்கும் துறை அல்லது தொழில் காரணமாகச் சில சிறப்புக் கூறுகளைத் தம் பேச்சில் வழங்குவர். தமிழிலேயே பேசினாலும் எழுதினாலும், ஒரு குறிப்பிட்ட துறைக்குரிய செய்திகளைக் கொண்டிருக்கும். எனவே, அது மற்றவர்களுக்கு விளங்காது. அவ்வாறு, துறை அல்லது தொழில் சார்ந்த மொழியைச் சிறப்பு மொழி என்று குறிப்பிடுவோம்.

  • பொது மொழி - ஒரு விளக்கம்
  • மொழிகளில் கலப்பு ஏற்பட்டுப் பொதுவான ஒரு புது மொழி தோன்றுவதுண்டு. இந்தப் பொது மொழி என்பது, மொழியின் ஒற்றுமைக் கூறுகளைக் கொண்டு பொதுவானதாக அமைவது ஆகும். ஆப்பிரிக்காவில், பிரெஞ்சு மொழியும் ஆப்பிரிக்க மொழியும் கலந்த ‘பிட்கின் மொழிகள்’ பல பேசப்படுகின்றன. இவற்றைப் பொதுமொழிக்குச் சான்றாகக் குறிப்பிடலாம்.

  • சிறப்பு மொழி - ஒரு விளக்கம்
  • ஒருவர் ஒரு மொழியைக் கற்பது வேறு. அந்த மொழியில் உள்ள சிறப்பான துறைகளைக் கற்பது வேறு. என்னால் தமிழில் எழுதமுடியும். பேசமுடியும். படிக்க முடியும். புரிந்து கொள்ள முடியும் என்பவருக்குத் தொல்காப்பியம் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். காரணம் தமிழுக்குரிய நுண்மையான இலக்கண விதிமுறைகள் தொல்காப்பியத்தில் தரப்பட்டுள்ளன. தமிழில் ஆழ்ந்த புலமை உள்ளவருக்கு உரிய ‘சிறப்பான நூல்’ அது. வணிகர், மருத்துவர், அறிவியலாளர், தகவல் தொழில் நுட்பத் திறனாளர் தத்தம் துறைகளில் எழுதுவதும், பேசுவதும் அத்துறைசார் சிறப்புக் கூறுகளை மிகுதியும் பெற்றிருக்கும். அதனைச் ‘சிறப்பு மொழி’ எனலாம். துறை சார்ந்த உரைகளில், நூல்களில் மொழியின் பொதுக் கூறுகள் குறைவு. சிறப்புக் கூறுகள் அதிகம். அவ்வகையில் அம்மொழியைச் சிறப்பு மொழி என்று குறிப்பிடுவர்.

    குறைவான எண்ணிக்கையில் உள்ள கூட்டத்தினர், தமக்குள்ளே கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்காக, ஒருமொழியை உருவாக்கிக் கொள்வதுண்டு. இதன் நோக்கமே, தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்ளவும், மற்றவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கவும் முயல்வதுதான். இது, குறுமொழி எனப் பெயர் பெறும்.

    செம்மை இல்லாத, திருத்தமுறாத மொழி வடிவம் கொச்சை மொழி, இது எந்த இலக்கணத்துக்கும் வரையறைக்கும் உட்படாததாகும்.

  • குறுமொழி - ஒரு விளக்கம்
  • மிகச் சிறிய எண்ணிக்கையினர் தங்கள் குழுவினரோடு பேசிக் கொள்ளவும், எழுதவும் உருவாக்கிக் கொள்ளும் செயற்கையான மொழியே குறுமொழி ஆகும். குறுமொழி எல்லாருக்கும் புரிவதில்லை. அக்குழுவினருக்கு மட்டுமே புரியும். எல்லாராலும் பயன்படுத்தப் படுவதில்லை. குறிப்பிட்ட குழுவினரால் மட்டுமே பயன்படுத்தப்படும். குறுமொழியின் தோற்றம் எதிர் பாராமல் அமையும். மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தாம் பேசுவது வெளியாருக்குப் புரிந்துவிடக் கூடாது என்றும் தங்களுக்கு வசதி கருதிக் குறுமொழியை உருவாக்கிக் கொள்கின்றனர். குறுமொழி பலகாலம் நீடித்து வாழ முடியாது. பேசுவோர் வட்டம் காலப் போக்கில் குறுகி மறைந்துவிடலாம். ஒரு குழுவினர் தங்களுக்குள் பேசிக்கொள்வதற்குப் பயன்படுத்தும் மொழியைத் தமிழ், குழூஉக்குறி என்று குறிப்பிடுகிறது. இது குறுமொழியைச் சேர்ந்தது. வணிகர்கள் வியாபார இரகசியங்களைக் காப்பாற்ற வேண்டிக் குறுமொழியைத் தங்களுக்குள் கையாள்கின்றனர்.

  • கொச்சை மொழி - ஒரு விளக்கம்
  • கொச்சை மொழி என்பது திருந்தாத மொழி. விதிமுறைகள், சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், தளைகள் எதிலும் சிக்காத தன்னியல்பான மொழி இது, கொச்சை மொழி என்பது இழிந்தது; வசைச் சொற்கள் இடம்பெறுவது என்பர். எந்த மொழியில்தான் வசைச் சொற்கள் இல்லை? ஒரு மொழியின் வசைச் சொற்களை ஆராயும்போது அம்மொழி பேசுவோரது பண்பாட்டு, நாகரிக வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியும்.

    கட்டமைப்புடன், செறிவாக இருக்கும் இலக்கியச் செழுமை மிக்க திருந்திய மொழியைச் செவ்விய மொழி என்பர். தமிழ் ஒரு செவ்விய மொழி ஆகும்.

    ஒரு மொழி பரந்துபட்ட நிலையில் வழக்கில் உள்ளபோது, நாட்டில் ஆங்காங்கேயும் எல்லையோரங்களிலும் அம்மொழியில் சிறு சிறு வேறுபாடுகள் உண்டாவது இயல்பு. இதற்குக் காரணம் வெவ்வேறாக அமையலாம். அப்படித் தோன்றும் உருமாற்றங்கள் பெருகி, இறுதியில் இம்மாற்றங்களைக் கொண்டே ஒருமொழி உருவாவதற்கு மிகுதியான வாய்ப்புகள் உண்டு. அவ்வாறு தோன்றும் மொழியைக் கிளைமொழி என்று குறிப்பிடுவது வழக்கம்.

    ஒரு மொழி பேசுவோர் இடையே போக்குவரத்து தடைபடலாம். கூடிப் பேசும் வாய்ப்புக் குறையலாம். ஒரு பகுதியினர் பேசுவதற்கும் மற்றொரு பகுதியினர் பேசுவதற்கும் இடையே வேறுபாடுகள் தோன்றலாம். வேறுபாடுகள் மிகலாம். ஒரு மொழியில் தோன்றும் இத்தகைய வேறுபட்ட வகைகளை அம்மொழியின் ‘கிளைமொழிகள்’ என்று குறிப்பிட வேண்டும்.

    கிளைமொழி தோன்றக் காரணங்களாவன: கடல், பேராறு, மலைத்தொடர் போன்ற இயற்கை அமைப்புகள் ஒரு நாட்டைப் பிரிக்கும்போது, ஒரு மொழியிலிருந்து கிளைமொழி தோன்றக்கூடும். தமிழிலிருந்து மலையாளம் கிளைமொழியாகத் தோன்றவும், நாளடைவில் தனிமொழியாக உருப்பெறவும் குறுக்கே அமைந்த மேற்குத் தொடர்ச்சி மலை காரணம் எனலாம். கிராமம், நகரம் என்று இடம்பெயர்ந்து வாழும்போது கிராமத்தில் வாழ்பவர் பேசும் மொழியும், நகரத்திற்கு இடம் பெயர்ந்து வந்த அதே குடும்பத்தினர் பேசும் மொழியும் வேறுபடுவதுண்டு. ஒரே ஊரில் வாழும் இருவேறு சமயத்தினர் பேசும் மொழியில் வேறுபாடு வருவதுண்டு. இசுலாமியர் அரபு, உருதுச் சொற்கள் கலந்து தமிழ் பேசுவதைக் கூறலாம். ஒரே இடத்தில் வாழுபவரது மொழிநடை சமூகப் பிரிவு காரணமாக, கல்வியறிவின் காரணமாக வேறுபடுவதுண்டு. மக்கள் கலந்து பழக இன்றைய போக்குவரத்து வசதிகள், தகவல் தொழில்நுட்ப வாய்ப்புகள் உதவுகின்றன. தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்கள், இதழ்கள் முதலியவை பொதுத்தமிழ் உருவாக உதவுகின்றன.

  • இலக்கியக் கிளைமொழி
  • கிளைமொழியைக் கூடப் பல்வேறு வகைகளாகப் பகுக்கலாம். செந்தமிழ், கொடுந்தமிழ் என்று இலக்கண உரையாசிரியர்கள் கூறுவது கிளை மொழிகளைத்தான் என்பர். செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தில் பேசுவது கொடுந்தமிழ்; எல்லை கூறப்பட்ட தமிழ்ப் பகுதிக்குள் பேசப்படுவது செந்தமிழ் என்று கூறுவர். சங்கத் தமிழ், இடைக்காலத் தமிழ், இக்காலத் தமிழ் என்று இலக்கியங்களின் அடிப்படையில் கூறலாம்.

  • கிளைமொழியின் வகைகள்
  • வட்டாரக் கிளைமொழி
  • ஒரு பகுதியில் (மாவட்டம் போன்ற வட்டாரப் பிரிவுகள்) வாழும் மக்கள் பேசுவதற்கும், மற்றொரு பகுதியில் வாழ்பவர் பேசுவதற்கும் உள்ள வேறுபாடுகளால் உண்டாகும் மொழி வட்டாரக் கிளைமொழி ஆகும். தமிழ்நாட்டில் கரிசல் காட்டுப் பகுதியில் வழங்கும் மொழியை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

  • வகுப்புக் கிளைமொழி
  • ஒரு சமயத்தினர் அல்லது சாதியினர் பேசுவதற்கும், அதே பகுதியில் வாழும் மற்றொரு சமயத்தினர் அல்லது சாதியினர் பேசுவதற்கும் உள்ள வேறுபாடுகள் மி்குந்து உண்டாகும் மொழி ‘வகுப்புக் கிளைமொழி’ ஆகும்.

  • தொழில் கிளைமொழி
  • ஒரு தொழில் செய்வோரது பேச்சில் அவர்தம் தொழிலுக்கு மட்டுமே உரிய அரிய சொற்கள் மிகுந்து இருக்கும். இம்மிகுதியால் உண்டாகும் கிளைமொழி ‘தொழில் கிளைமொழி’ ஆகும். நூற்றுக்கணக்கான அரிய சொற்களை மீனவர் கையாள்கின்றனர். அது போலவே குயவர் பேச்சிலும் மிகுந்த சொற்கள் சிறப்புப் பொருள் தரும் கலைச்சொற்களாக உள்ளன.

  • உட்கிளைமொழி
  • ஒரே பிரிவினர் பேசும் மொழியில் கூட வேறுபாடுகள் இடம்பெறுவதுண்டு. அவ்வேறுபாடுகள் மிகுதியால் உண்டாகும் கிளைமொழி ‘உட்கிளைமொழி‘ ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 22-07-2017 12:17:30(இந்திய நேரம்)