தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

4.1 இந்திய மொழிகள்

  • 4.1 இந்திய மொழிகள்

    இந்திய மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பகுக்கலாம்:

    1)
    இந்தோ - ஆரிய மொழிக் குடும்பம்
    2)
    இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம்
    3)
    திராவிட மொழிக் குடும்பம்

  • இந்தோ - ஆரிய மொழிக் குடும்பம்
  • இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தில் உள்ள சில முக்கிய மொழிகள் பஞ்சாபி, சிந்தி, ஹிந்தி, உருது, பிகாரி, ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி, அசாமி, வங்காளி, ஒரியா, பஹரி, காஷ்மீரி, சமஸ்கிருதம் என்பன. இந்திய மக்களில் சுமார் 74 விழுக்காட்டினர் இம்மொழிகளைப் பேசுகின்றனர்.

  • இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம்
  • இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஆங்கிலமே இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உயர்கல்வி நிலையில் ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ளது. ஆங்கிலம் தவிர பிரெஞ்சு, போர்த்துகீசிய மொழிகள் பாண்டிச்சேரி, கோவா போன்ற பகுதிகளில் பேசப்படுகின்றன.

  • திராவிட மொழிக் குடும்பம்
  • திராவிட மொழிக் குடும்பம் இந்தியாவின் இரண்டாவது பெரிய மொழிக் குடும்பம் ஆகும். இந்திய மக்களில் 25 விழுக்காட்டினர் திராவிட மொழிகளைப் பேசுகின்றனர். திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள முக்கிய மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை. தொன்மையும், இலக்கியச் செழுமையும் மிக்க தமிழ்மொழி மத்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய மொழிகளுள் நகலி, பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகள் ஏட்டளவிலேயே உள்ளன. சமஸ்கிருதமொழியும் ஏட்டளவிலேயே உள்ளது; சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது; சிறுபான்மையினரால் பேசப்படுகிறது. இந்நாட்டில் பல்வேறு இனத்தினர் வாழ்கின்றனர். பல்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். என்றாலும் மொழிகளுக்கிடையே பல பொதுமைப் பண்புகள் இழையோடும் நிலை அறியப்பட்டது. மொழிகளுக்குள் காணப்படும் ஒத்த சொற்களும், மொழிகளின் இலக்கணக் கூறுகளில் காணப்படும் ஒற்றுமைக் கூறுகளும் அறிஞர்களை வியக்க வைத்தன. முறைப்படி ஆராயத் தூண்டின.

    1866இல் வியன்னாவில் கீழ்த்திசை மாநாடு (Oriental Congress) கூடியது. அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ‘இந்திய மொழிகள் பற்றிய கள ஆய்வு’ செய்யுமாறு இந்திய அரசை வற்புறுத்தியது. இத்தீர்மானம் அரசால் பரிசீலிக்கப்பட்டது. குடி மதிப்பீடு (Census) வினாப் பட்டியலில்,

    • தனிநபர் பிறந்த இடம் எது?
    • தனிநபரின் தாய்மொழி எது?
    • தனிநபர் பேசும் மொழி எது?

    என்ற தகவலும் சேர்க்கப்பட்டது. 1881இல் நடந்த முதல் குடி மதிப்பீட்டுக் கணக்கெடுப்பில் இத்தகவல்களும் திரட்டப்பட்டன. புதுப்புதுச் செய்திகள் கிடைத்தன. இந்திய மொழிகள் பற்றிக் கிடைத்த செய்திகளை முழுமைப்படுத்த ஒரு தனித் திட்டம் தீட்டப்பட்டது. அது இந்திய மொழிகளின் கள ஆய்வுத் திட்டம் (Linguistic Survey of India) என்று நடைமுறைப்படுத்தப்பட்டது. அது 1898இல் தொடங்கப்பட்டது. 29 ஆண்டுகள் கள ஆய்வு நடந்தது. சர். ஜார்ஜ் ஆபிரகாம் கிரியர்சன் (Sir George Abraham Grierson) என்பவர் இத்திட்டத்தின் இயக்குநர். இதன் அறிக்கை 1927இல் வெளியானது. அவ்வறிக்கையில் அன்றைய இந்தியாவில் 1595 மொழிகள் வழங்கியமை பற்றிய தகவல்கள் தரப்பட்டிருந்தன.

    அவை

  • பேசப்பட்ட மொழிகள் 179
  • கிளைமொழிகள் 544
  • பின் இணைப்பில் இடம் பெற்ற மொழிகள் 872
  • இந்தியாவில் 1652 மொழிகள் பேசப்படுகின்றன என்று 1961ஆம் ஆண்டின் குடி மதிப்பீட்டுக் கணக்கெடுப்புக் கூறுகிறது. திராவிட மொழிக் குடும்பத்தில் 30 மொழிகள் உள்ளன. இந்திய மக்களில் 24.47 விழுக்காட்டினர் திராவிட மொழிகளைப் பேசுகின்றனர் என்கிறது அவ்வறிக்கை.

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 17:55:02(இந்திய நேரம்)