Primary tabs
-
4.5 வட திராவிட மொழிகள்
வட திராவிட மொழிகளில் பிராகுயி, மால்டோ, குரூக் ஆகிய மூன்று மொழிகள் அடங்கும். ஆந்திராவில் வழங்கும் கோயா மொழியைத் தனி மொழி என்று கண்டுபிடித்து அதையும் வட திராவிட மொழியுடன் சேர்த்துள்ளனர். எனினும் சிலர் கோயா மொழியைக் கோண்டி மொழியின் வட்டார வழக்காகவே கருதுகின்றனர். வட திராவிட மொழிகளில் பிராகுயி முதலில் பிரிந்திருக்க வேண்டும். காலப் போக்கில் குரூக், மால்டோ இரண்டும் தனி மொழிகளாகப் பிரிந்திருக்க வேண்டும் என்பர். வட திராவிட மொழிகளில் ‘க்’ இறந்தகால இடைநிலையாகவும் ‘ஓ’ எதிர்கால இடைநிலையாகவும் உள்ளன. மொழி முதலில் வரும் ககரம் ஹகரமாகவும், வகரம் பகரமாகவும், சகரம் ககரமாகவும் மாறும் நிலையை வடதிராவிட மொழிகளில் காணமுடிகிறது.
- பிராகுயி மொழி
பலுச்சிஸ்தான் பகுதிகளில் பிராகுயி மொழி பேசப்படுகிறது என்று டாக்டர் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். டென்னிஸ் டி.எஸ். பிரே (Denys de Savmarez Bray) என்பவர் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது பிராகுயி மொழி என்று நிறுவினார். பேராசிரியர் எமனோ 1962இல் பிராகுயி மொழி வட திராவிட உட்பிரிவைச் சேர்ந்தது என்று விளக்கினார். திராவிட மக்களும், பிராகுயி மக்களும் ஒரே இனத்தவர் என்று கொள்ளச் சான்றுகள் இல்லை. எனினும் திராவிட மொழி பேசுவோரது கலப்பு இருக்க வேண்டும் என்று இராமச்சந்திர தீட்சிதர் குறிப்பிடுவார். பிராகுயி மொழி பாரசீக மொழியுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கலத், ஹயர்பூர் மாவட்டங்களில் உள்ளவர்கள் பிராகுயி மொழி பேசுகின்றனர். ஈரான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் வாழ்வோர் பிராகுயி மொழி பேசுகின்றனர். இப்பகுதிகளில் பலுச்சி மொழி பெருவழக்காக உள்ளது. பிராகுயி மொழி பேசுவோர் எண்ணிக்கை மூன்று இலட்சம் என்றும், ஐந்து இலட்சம் என்றும் இரு வேறு கூற்றுகள் உள்ளன. பேராசிரியர் எமனோ பிராகுயி மொழி பற்றி ஆய்ந்து பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
- மால்டோ மொழி
பீகார், வங்காளம் ஆகிய பகுதிகளில் வாழ்பவர்கள், மால்டோ மொழி பேசுகின்றனர். ஏறத்தாழ 90 ஆயிரம் பேர் பேசுகின்றனர். மால்டோ மொழிச் சொற்களைப் பேராசிரியர் பி.எச். ஹாட்ஸன் (B.H.Hodgsn), கேம்பல் (Sir George Campell) ஆகியோர் தொகுத்துள்ளனர். எர்னஸ்ட் ட்ரோயெஸ் (Ernest Droese) 1884இல் எழுதி வெளியிட்ட மால்டோ மொழி அறிமுகம் (Introduction to the Malto Language) என்ற நூல்தான் இம்மொழி பற்றி வந்த முதல் நூலாகும். மால்டோ மொழி பேசுவோர் மாலர் (மனிதர்கள்) ஆவர். மலை என்னும் சொல்லில் இருந்து பிறந்தது மாலர் என்னும் சொல். ‘மாலர் என்பது, மலை மனிதர்கள் என்ற பொருளுடையது’ என்று டாக்டர் கிரியர்சன் கூறுவார். தொன்மை இலக்கியங்கள் இல்லை. எனினும் கிறித்தவத் தொண்டர்கள் பல இலக்கியங்களை மால்டோ மொழியில் உருவாக்கியுள்ளனர். மால்டோ மொழியில் உயிரொலிகள் சொற்களின் எல்லா இடங்களிலும் இடம் பெறுகின்றன. எனினும் நெடில் உயிரொலிகள் மொழியின் இறுதியில் இடம் பெறுவது கிடையாது.
- குரூக் மொழி
குரூக் மொழியை டாக்டர் கால்டுவெல், ‘ஒரோவன்’ மொழி என்று குறிப்பிட்டுள்ளார். பீகார், அசாம், வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் குரூக் மொழி பேசுவோர் உள்ளனர். 11.4 இலட்சம் மக்கள் குரூக் மொழி பேசுகின்றனர். கர்னல் டால்டன் (Colonel Dolton) எழுதிய வங்காள மக்களின் வரலாறு (Ethnology of Bengal) என்னும் நூலில் குரூக் மொழி பேசும் மக்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. பட்சச் பாதிரியார் (Rev. F. Batsch) குரூக் மொழிக்கு இலக்கணம் எழுதியுள்ளார். பேராசிரியர் ஏ.கிரிக்நாட் (A. Grignard) 1924இல் குரூக் மொழி அகராதி ஒன்றையும், இலக்கணநூல் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டார். ஃபென்ட் ஹன் (Fend - Hahn) என்பவரும் சி.பி. லெசஸ் (C.B. Leses) என்பவரும் குரூக் மொழிக்குரிய அகராதியைத் தயாரித்துள்ளனர்.