தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உயிரெழுத்து மாற்றங்கள்

  • 1.3 உயிரெழுத்து மாற்றங்கள்

    பல்லவர் காலத்தில் உயிரெழுத்துகளில் ஏற்படும் மாறுதல்கள் சிக்கல் நிறைந்தவை. முதலில் அவற்றின் அளவில் மாறுதல் இருந்தது. மொழி முதலில் ‘இ > எ’, ‘உ > ஒ’ மாற்றங்கள் காணப்படுகின்றன. சொற்களின் பழைய வடிவங்களில் தோன்றும் அகர மாற்றம் அய் > எய் > எ > அ என விளக்கமாகக் கூறப்படுகிறது. தொடர்ச்சியற்ற மாற்றங்களும் கூடப் பிற்காலத்திய பேச்சு மொழிச் சொற்கள் பலவற்றை விளக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

    1.3.1 உயிரெழுத்துகள்

    சங்க காலம், சங்கம் மருவிய காலம் ஆகிய காலங்களைப் போலவே பல்லவர் காலத்திலும் இ, எ, உ, ஒ, அ ஆகிய ஐந்து உயிர்களும் அவற்றின் இன நெடில்களாகிய ஈ, ஏ, ஊ, ஓ, ஆ ஆகிய ஐந்து உயிர்களுமாகப் பத்து உயிர் எழுத்துகள் இருந்து வந்தன. எகரமும் ஏகாரமும் தவிர ஏனைய உயிர்கள் சொல்லின் எல்லா இடங்களிலும் வரும். கர காரங்கள் சொல்லின் இறுதியில் இடம் பெறவில்லை.

    சான்று:

    முதலில்
    இறுதியில்
    அமை
    பல
    ஆமை
    பலா
    இறை
    ஆடி
    ஈற்று
    உறு
    ஒரு
    ஊறு
    பூ
    எழு
    -
    ஏழு
    -
    ஒரு
    நொ
    ஓடு
    போ

    • மாற்றங்கள்

    உயிரெழுத்துகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிப் பார்ப்போம்.

    • நெடில் குறிலாதல்

    இம்மாற்றம் உயிரெழுத்துகள் மாத்திரையில் குறைந்து ஒலிப்பதை நமக்கு உணர்த்துகிறது. குறிப்பாக மெய்களுக்கு அல்லது மெய்ம் மயக்கங்களுக்கு முன்னர் நெட்டுயிர்கள் குற்றுயிர்களாக ஆவது என்பது பல்லவர் காலத்துப் பெரு வழக்கு ஆகும். கூரம் செப்பேடு போன்றவற்றில் இம்மாற்றங்கள் காணப்படுகின்றன.

    சான்று:

    நீக்கி
    >
    நிக்கி
    ஆழாக்கு
    >
    ஆழக்கு
    தீந்தமிழ்
    >
    திந்தமிழ்
    வீற்றிருந்தருளி
    >
    விற்றிருந்தருளி
    மூன்று
    >
    முன்று

    • அசையில் அளவு மாற்றம்

    மெய்யினையும் அதைத் தொடர்ந்து உயிரினையும் உடைய அசைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மெய்யும் உயிரும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட அளவினை உடையனவாக இருத்தல் வேண்டும். அதாவது மெய் அரை மாத்திரை அளவினையும், உயிர்க்குறில் ஒரு மாத்திரையையும், உயிர்நெடில் இரண்டு மாத்திரைகளின் அளவையும் பெற்று இருத்தல் வேண்டும். ஆனால் நீரில் உப்புக் கரைவது போல அசையில் உள்ள மெய்யின் அளவு உயிருடன் கலந்துவிடுகிறது. இந்நிலையில் உயிருடன் கூடிய மெய்யொலி மறைவதில்லை. ஆனால் உயிரின் அளவே குறைக்கப்படுகிறது.

    • உயிர்கள் மறைதல்

    உயிர்கள் குறிப்பாக வெடிப்பொலிகளுக்கும் ர்/ல் ஆகியவற்றிற்கும் இடையில் உள்ள உயிர்கள் அடிக்கடி மறைந்து மெய்ம்மயக்கங்களுக்கு வழி வகுக்கின்றன.

    • அசை புகுத்தப்படுதல்

    மெய்ம்மயக்கங்களைத் தவிர்க்க மெய்களின் இடையில் உயிர்கள் புகுத்தப்படுகின்றன.

    அ) இகரம் புகுத்தப்படுதல்

    பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கும் போது இகரம் பயனாகின்றது. முந்தைய அல்லது அடுத்த எழுத்து இதழொலியாகவோ, நாவளையொலியாகவோ இருக்குமாயின் கரம் வருகிறது. தமிழ் இயற்சொற்களிலும் விரைந்து ஒலிப்பதால் ஏற்படும் மயக்கங்களைத் தவிர்க்க உயிரெழுத்து வருகின்றது. கர,கர மெய்களைப் பொறுத்த வரையில் மயக்கங்கள் தோன்றுவது இயல்பாகின்றது.

    சான்று:

    தரிசி
    >
    த்ரிசி
    >
    திரிசி
    பலா
    >
    ப்லா
    >
    பிலா
    புறா
    >
    ப்றா
    >
    பிறா

    ஆ) உகரம் புகுத்தப்படுதல்

    மெய்ம்மயக்கத்தைத் தவிர்க்கப் பிறிதொரு உயிரான உகரமும் புகுத்தப்படுகிறது. இம்மாற்றம் சற்றுப் பிந்தையது எனலாம்.

    சான்று:

    மகிழ
    >
    மக்ழ
    >
    மகுழ
    விழிஞம்
    >
    வ்ழிஞம்
    >
    வுழிஞம்

    • அகரம் இகரமாதல்

    பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகக் கவனிக்கப்பட வேண்டிய மாற்றம் என்று இதனைக் கூறலாம்.

    சான்று:

    மங்கலம்
    >
    மங்கிலம்
    மேலன
    >
    மேலின
    கடா
    >
    கிடா

    • ஐகாரம் மாற்றம்

    அ) ஐகாரம் அகரமாதல்

    சான்று:

    ஐந்து
    >
    அஞ்சு
    தலை
    >
    தல
    பனைக்காய்
    >
    பனங்காய்

    ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கூரம் செப்பேட்டில் ஐந்தே என்பது அயிந்தே எனக் காணப்படுகின்றது.

    ஆ) ஐகாரம் எகரமாதல்

    சான்று:

    அரசர்
    >
    அரைசர்
    >
    அரெசர்
    தலை
    >
    தலெ
    சினை
    >
    சினெ
    எல்லை
    >
    எல்லெ

    அரைசர் > அரெசர் என்று சொன்னாலும், சொல்லின் இடையிலுள்ள எகரம் அகரமாகவே எழுதப்படும். (எனினும், சொல்லிடை எகரம் அகரமாக ஒலிக்கப்படவில்லை. அரெசர் என்ற வடிவத்திலுள்ள அகரம் கீழ்நடு உயிர். ஆனால் சொல்லிடை அகரம் முன்தாழ் இடை உயிராக மாறுகின்றது.)

    • ஒளகாரம் எல்லா இடங்களிலும் வருதல்

    இக்காலக் கட்டத்தில் ஒளகாரம் சொல் முதல், இடை, கடை என்னும் எல்லா இடங்களிலும் வருவதாக அவிநயம் கூறுகிறது. இவ்வாறு உயிரெழுத்துகள் பல்லவர் காலத்தில் மாற்றங்கள் பெற்று, தமிழ்மொழியில் நிகழ்ந்த மாறுதல்களைச் சுட்டி நிற்கின்றன.

     
    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
     
    1.

    இலக்கியச் சான்றுகளே அன்றிப் பல்லவர் காலத் தமிழை அறிய உதவும் வேறு சான்றுகள் யாவை?

    2.

    கூரம் செப்பேட்டில் ஐந்தே என்ற சொல் எவ்வாறு காணப்படுகிறது?

    3.

    நெடில் குறில் மாற்றம் எந்தச் சூழலில் ஏற்படுகிறது என்பதைப் புலப்படுத்துக.

    4.
    அகர இகர உயிர் மாற்றத்திற்கு இரு சான்றுகள் தருக.
புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 17:39:29(இந்திய நேரம்)