தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொல்லாட்சி

  • 6.4 சொல்லாட்சி

    மராட்டியர் காலத் தமிழில் பிற மொழிகளிலிருந்து பல சொற்கள் கடனாகப் பெறப்பட்டன. வடமொழிச் சொற்கள் பல தமிழாக்கம் செய்யப்பட்டன. பேச்சு வழக்குச் சொற்கள் பல சிற்றிலக்கியங்களில் கையாளப்பட்டன. ஆங்கிலச் சொற்களில் பல தமிழ் ஒலிக்கேற்ப வரிவடிவ மாற்றமும் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டன. சில வடமொழிச் சொற்களும், ஆங்கிலச் சொற்களும் அப்படியே எந்த மாற்றமும் இன்றிக் கையாளப்பட்டுள்ளன. பல வடமொழிச் சொற்களும் வடமொழித் தொடர்களும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

    6.4.1 தமிழில் கலந்த வேற்றுமொழிச் சொற்கள்

    மராட்டியர் காலத் தமிழில் வேற்றுமொழிச் சொற்கள் பல இலக்கியங்களிலேயே கையாளப்பட்டதைக் காண முடிகிறது. அம்மொழிகளில் உள்ள சொற்கள் பல அவ்வாறே தமிழில் கடன் வாங்கப் பட்டன.

    • வடமொழிச் சொற்கள்

    இம்மொழிச் சொற்களுள் பல கடன் வாங்கப் பட்டு வடமொழியின் உச்சரிப்புக்கு ஏற்ப அவ்வாறே உச்சரிக்கப்பட்டன. புராணங்கள், வழிபாடுகள், அரசியல் என்று பல நிலைகளில் இவ்வடமொழிச் சொற்கள் கடனாகப் பெறப்பட்டன.

    அ) வடமொழிச் சொற்களாகவே இருந்தமை

    கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி் வடமொழிச் சொற்கள் எந்த மாற்றமுமின்றி எழுதப்பட்டன.

    சான்று:

    சாஸ்திரி
    உத்ஸவம்
    யதாஸ்து
    போஜனம்

    ஆ) நன்னூலார் கூறிய விதியைப் பின்பற்றிப் பல வடமொழிச் சொற்களைக் கிரந்த எழுத்துகளை நீக்கித் தமிழ் வரிவடிவத்தில் எழுதும் வழக்கமும் மராட்டியர் காலத்தில் இருந்து வந்தது.

    சான்று:

    பக்ஷம்
    >
    பட்சம்
    பாஷை
    >
    பாசை
    ரிஷபம்
    >
    இடபம்
    ஸ்வரூபம்
    >
    சுரூபம்
    ஸ்வஸ்தி
    >
    சுவத்தி
    ஸீதா
    >
    சீதை
    ஹரா
    >
    அரன்

    • ஆங்கிலச் சொற்கள்

    வடமொழிச் சொற்கள் போன்றே ஆங்கிலச் சொற்களும் வந்து தமிழில் புகுந்தன. ஆங்கிலேயர் வருகை நாயக்கர் கால இறுதியிலேயே இருந்து வந்ததால் ஆங்கிலச் சொல்லின் தாக்கத்திற்குத் தமிழ் மொழியும் ஆளாகிவிட்டது என்று கூற இயலும்.

    அ) ஆங்கிலச் சொற்கள் மாற்றமின்றிப் பயன்படுத்தப்பட்டமை

    மராட்டியர் காலக் கல்வெட்டுகளில் பல இடங்களில் ஆங்கிலச் சொற்கள் தமிழுக்கு ஏற்றபடி எந்த மாற்றமும் பெறாமல் அவ்வாறே பயன்படுத்தப் பட்டுள்ள நிலையைக் காண முடிகிறது.

    சான்று:

    Committee
    -
    கம்மிட்டி
    Collector
    -
    கலெக்டர்
    Senior
    -
    சீனியர்
    Deputy
    -
    டெபுடி
    Late
    -
    லேட்

    ஆ) ஆனால் வேறு சில இடங்களில் ஆங்கில மொழிச் சொற்கள் தமிழ் ஒலிப்புக்கேற்பச் சற்று மாற்றமடைந்து காணப்படுகின்றன.

    சான்று:

    English
    -
    இங்கிலீசு
    Highness
    -
    அயினெஸ்
    Agent
    -
    ஏஜண்டு
    Fund
    -
    பண்டு
    Agent office
    -
    ஏஜண்டாபீசு
    Cent
    -
    செண்டு
    Colonel
    -
    கர்னல்

    • பிறமொழிச் சொற்கள்

    வடமொழியும் ஆங்கிலமும் அல்லாத வேறு சில மொழிச் சொற்கள் பல தமிழில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

    அ) அரபு மொழிச் சொற்கள்

    சான்று:

    இலாக்கா
    இமாம்
    கசர்
    கொசுறு
    சைத்தான்
    தணிக்கை
    மகசூல்
    ஜாமீன்

    ஆ) பெர்ஷியன் மொழிச் சொற்கள்

    சான்று:

    திவான்
    ஜாமின்
    தர்க்கா
    சர்தார்
    சுமார்
    பீங்கான்
    லுங்கி
    ஸர்க்கார்
    ஷால்

    இ) உருது மொழிச் சொற்கள்

    சான்று:

    கைதி
    கெடுபிடி
    சாமான்
    சீட்டு
    அசல்
    அஸ்திவாரம்
    கச்சேரி
    கஸகஸா

    ஈ) தெலுங்கு மொழிச் சொற்கள்

    சான்று:

    பாளயம்
    உப்புசம்
    கோமுட்டி
    பத்தர்
    சொக்காய்
    கொலுசு
    கண்ணராவி
    கபோதி
    கம்மல்
    கெடுவு
    சுலுவு

    உ) மராட்டிய மொழிச் சொற்கள்

    சுமார் 55 சொற்கள் மராத்தி மொழியிலிருந்து தமிழுக்கு வந்துள்ளன. அவற்றில் 23 சொற்கள் இன்றும் பேச்சு வழக்கில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    சான்று:

    (1) உணவு வகைகள்

    கச்சாயம்
    கிச்சடி
    கேசரி
    கோசும்பரி
    சேமியா
    வாங்கி
    ஸொஜ்ஜி

    (2) சமையல் பாத்திரங்கள்

    கங்காலம்
    கிண்டி
    ஜாடி

    சாலிகை
    குண்டான்

    (3) இசை தொடர்பானவை

    சாகி
    லாவணி
    தண்றி

    அபங்கம்
    டோக்ரா

    (4) பிற சொற்கள்

    லாகு
    காமாட்டி
    ஜம்பம்
    கோலி

    = = = =
    ஆதரவு
    அறிவு
    உணர்ச்சி
    சிறுவர் விளையாட்டு
    சாவடி தண்டி
    =
    ஓர் எடை

    ஊ) கன்னட மொழிச் சொற்கள்

    சான்று:

    கெலி (வெல்) அட்டிகை
    தண்டால்
    ஏகத்தாஸம்
    கெடுபிடி

    கொஸ்து
    எட்டன்
    சமாளித்தல்
    பட்டறை

    எ) போத்துக்கீசியச் சொற்கள்

    மேலைநாட்டாரின் வருகையை அடுத்துப் போர்த்துக்கீசியச் சொற்கள் பல தமிழில் கலந்து நடைமுறைக்கு வந்துவிட்டன.

    சான்று:

    கடுதாசி
    சன்னல்
    துவாலை
    பாதிரி
    பீப்பா

    மேஜை
    மேஸ்திரி
    வராந்தா
    ஆசியா

    ஏ) பிரெஞ்சு மொழிச் சொற்கள்

    போர்த்துக்சீசியரைப் போன்றே பிரெஞ்சுக்காரர்களும் வாணிபத்திற்காகத் தமிழகம் வந்ததன் விளைவாக அவர்தம் சொற்களும் தமிழில் கலந்து மராட்டியர் காலத் தமிழில் காணப்படுகின்றன.

    சான்று:

    ஆஸ்பத்திரி
    டாக்டர்
    புட்டி
    லாந்தர்

    தாம்பூர்
    காரோட்டு (கிழங்கு)

    ஐ) மலையாள மொழிச் சொற்கள்

    கன்னடம், தெலுங்கு மொழிச் சொற்கள் போன்றே சுமார் 50 மலையாள மொழிச் சொற்களும் தமிழ் மொழியில் காணப்படுகின்றன.

    சான்று:

    அச்சி
    அடியந்திரம்
    கச்சவடம்
    பட்டி

    ஜன்மி
    நேரியல்
    பிரதமன்
    தரவாடு

    இவற்றில் பல சொற்கள் நாஞ்சில் நாட்டுத் தமிழில் காணப்படுகின்றன.

    6.4.2 பிறமொழிச் சொற்களின் தமிழ் வரிவடிவமும் மொழிபெயர்ப்பும்

    மராட்டியர் காலத்தில் செப்பேட்டில் பிறமொழிச் சொற்கள் பல தமிழ் மொழிக்கேற்ற வரிவடிவத்தையும் மொழிபெயர்ப்பையும் பெற்று விளங்குகின்றன.

    சான்று:

    தமிழ் மொழிக்கேற்ற வரிவடிவம்
    Admiral
    -
    அமரால்
    Holland
    -
    உலாந்தா
    Godown
    -
    கிட்டங்கு
    Contract
    -
    கொந்திறாத்து

    தமிழ் மொழிபெயர்ப்பு
    Junior General
    -
    சின்ன சென்னறல்
    Factory
    -
    பெத்திரி வீடு

    6.4.3 மராட்டியர் காலத் தமிழில் பேச்சுமொழிச் சொற்கள்

    மராட்டியர் காலத்தில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களிலும் பல பேச்சு வழக்குச் சொற்கள் வழக்கத்திற்கு வந்து பயன்படுத்தப் பட்டுள்ளன.

    • தமிழ் இலக்கியங்களில் பேச்சு வழக்குச் சொற்கள்

    மராட்டியர் காலச் சிற்றிலக்கியங்களில் தமிழ்ப் பேச்சு வழக்குச் சொற்கள் பல காணப்படுகின்றன.

    சான்று:

    அஞ்சு
    கவுத்தாலே
    தெண்டனிட்டு
    கிட்டே
    கடுதாசி
    முந்தாநாத்து

    ஒண்டி
    சும்மா
    பலவந்தம்
    சாமான்யம்

    • மராட்டியர் செப்பேட்டில் பேச்சு வழக்குச் சொற்கள்

    சான்று:

    கரபாத்திரம்
    விருத்தி
    ஆஜ்ஞை
    உலுப்பை

    விருது
    வின்னாசம்
    சம்பு
    செறுவாடு

    • மராட்டியர் காலப் பட்டயங்களில் காணப்படும் பேச்சு வழக்குச் சொற்கள்

    மராட்டியர் காலத் தமிழ் மொழியானது கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பேச்சு மொழிச் சொற்களைக் கொண்டிருப்பதோடு, பட்டயங்களிலும் அத்தகைய சொற்களைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

    சான்று:

    அஞ்சாவது
    இத்தைவரை
    இப்போ
    குடுக்கிறது
    சிலவு
    துடங்கின
    முன்னாலே

    நடக்குது
    தண்ணீ
    நாலாவுது
    புதுப்பிச்சு
    மனுசர்
    ரொக்கம்

    இன்றைய பேச்சுத் தமிழின் சாயல்கள் பல மராட்டியர் காலத்திலேயே வழக்கத்திற்கு வந்துவிட்டன என்று கூற இயலும். “தமிழ் மொழித் தூய்மை இயக்கம்” என்ற இயக்கம் இன்றைய இருபதாம் நூற்றாண்டில் தலையெடுக்காவிடில் தமிழ் மொழியில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் பிறமொழிச் சொற்களைத்தான் கண்டிருக்க முடியும். மொழி என்பது கடன் வாங்கும் இயல்பைக் கொண்டிருப்பினும் எல்லை உடையதாக இருப்பதால்தான் இத்தகைய பிறமொழித் தாக்குதல்களைக் கடந்தும் தமிழ் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று கூற இயலும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-08-2017 13:12:59(இந்திய நேரம்)