தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உருபனியல்

  • 2.4 உருபனியல்

    உருபனியலில், பெயர்ப்பாகுபாடு, திணை, பால், எண், இடம் உணர்த்தும் விகுதிகள், உயர்வு ஒருமைப் பெயர்கள் பற்றிப் பார்ப்போம்.

    2.4.1 பெயர்ப் பாகுபாடு

    பெயர்ப்பாகுபாட்டில் இடம் பெற்றுள்ளவை வருமாறு :

    • சிறப்புப் பெயர் (Personal Noun)

    குறிப்பிட்ட ஒரு மனிதன், இடம் அல்லது ஒரு பொருளின்பெயரைக் குறிப்பது சிறப்புப் பெயராகும். இச்சிறப்புப் பெயர்கள் பன்மை உருபை ஏற்பதில்லை.

    இராமன், சீதை, சென்னை இராமன்கள், சென்னைகள் என்று வருவதில்லை.

    • பொதுப்பெயர் (Common Noun)

    சிறப்புப் பெயர் அல்லாதன எல்லாம் பொதுப் பெயராகும். இவை பன்மை ஏற்று வரும். இவற்றுள்ளும் சில பன்மையை ஏற்பதில்லை. எண்ணப்படு பெயர் (Count Noun), திரட்பெயர் (Quantitative Noun) என்றும் இவற்றைப் பிரிக்கலாம்.

    எண்ணப்படு பொருட்பெயர் - பன்மை உருபை ஏற்கும்
    பையன்+மார் - பையன்மார்
    வீடு+கள் - வீடுகள்

    பால்
    தண்ணீர் திரட்பொருட்பெயர் - பன்மை உருபை ஏற்காது.
    காற்று

    • உயிருடைய பொருட்பெயரும் உயிரில்லாப் பொருட்பெயரும்

    மனிதன், நாய் போன்றன உயிருடைய பொருட் பெயர்கள். நாற்காலி போன்றவை உயிரில்லாப் பொருட்பெயர். இவை முறையே இக்காலத் தமிழில் ஏழாம் வேற்றுமை இடப் பொருளை உணர்த்த ‘இடம்’ என்னும் உருபையும் ‘இல்’ என்னும் உருபையும் பெறுகின்றன.

    மனிதனிடம்
    நாயிடம்
    நாற்காலியில்

    உயிருடைய பொருட்பெயர்கள் ‘ஐ’ உருபைக் கட்டாயம் பெற்றுவரும் என்றும் உயிரில்லாப் பொருட்பெயர்கள் அவ்வுருபை ஏற்றோ ஏற்காமலோ வரும் என்றும் கூறுவர்.

    • பருப்பொருட் பெயரும் நுண்பொருட் பெயரும் (Concrete and Abstract Noun)

    உருவம் உள்ளதையும் கண்ணால் காணக் கூடியதையும் பருப் பொருள்கள் என்றும், உருவம் இல்லாததையும் கருத்தளவிலேயே நினைக்கக் கூடிய பொருட்களையும் நுண் பொருள்கள் என்றும் பிரிப்பர். நுண்பொருட் பெயர்களோடு மூன்றாம் வேற்றுமை உருபு ‘ஓடு’, வினையெச்ச உருபாகிய ‘ஆய்’ ஆகிய இரண்டும் மயங்கி வரும் என்பார் செ.வை.சண்முகம். இவற்றையெல்லாம் இயற்பெயர்கள் என்போம்.

    காற்று (காற்றோடு, காற்றாய்)

    • ஆக்கப் பெயர்கள் (Derived Nouns)

    வேறொரு சொல் வகையிலிருந்து ஆக்கிக் கொள்ளப்பட்ட பெயர்களை ஆக்கப் பெயர்கள் என்போம். இக்காலத் தமிழில் வழங்கும் சில ஆக்கப் பெயர்களாக மு.சண்முகம் பிள்ளை தமது இக்காலத் தமிழ் என்ற நூலில் குறிப்பிடுவன பின்வருமாறு:

    (1) த்துவம் - என்னும் உருபு பெறல்

    முதலாளி
    முக்கியம்
    >
    >
    முதலாளித்துவம்
    முக்கியத்துவம்

    (2) அம் - என்னும் உருபு பெறல்

    திருப்பு
    ஓட்டு
    நெருக்கு
    அடங்கு
    >
    >
    >
    >
    திருப்பம்
    ஓட்டம்
    நெருக்கம்
    அடக்கம்

    (3) பது - என்னும் உருபு பெறல்

    எடு
    கொடு
    உண்
    >
    >
    >
    எடுப்பது
    கொடுப்பது
    உண்பது

    (4) ப்பு - என்னும் உருபு பெறல்

    சிரி
    விரி
    >
    >
    சிரிப்பு
    விரிப்பு

    (5) வு - என்னும் உருபு பெறல்

    வாழ்
    தேய்
    >
    >
    வாழ்வு
    தேய்வு

    (6) ஆளி - என்னும் உருபு பெறல்

    பேச்சு
    நோய்
    >
    >
    பேச்சாளி
    நோயாளி

    (7) மை - என்னும் உருபு பெறல்

    பெரு
    சிறு
    >
    >
    பெருமை
    சிறுமை

    (8) வந்தன் / வந்தர் - என்னும் உருபு பெறல்

    செல்வம்
    தனம்
    >
    >
    செல்வந்தன் / செல்வந்தர்
    தனவந்தன் / தனவந்தர

    (9) மான் - என்னும் உருபு பெறல்

    நீதி
    கல்வி
    சக்தி
    >
    >
    >
    நீதிமான்
    கல்விமான்
    சக்திமான்

    (10) ஐ - என்னும் உருபு பெறல்

    கொல்
    வில்
    >
    >
    கொலை
    விலை

    • பெயர்ச் சொல்லில் எதிர்மறை வடிவம்

    பெயர்ச் சொல்லில் எதிர்மறைப் பொருளை உணர்த்த ‘அ’ என்ற முன்னொட்டு சேர்க்கப்படுகிறது. சில சொற்களில் ‘அவ’ என்ற முன்னொட்டும் சேர்க்கப்படுகிறது.

    நாகரிகம்
    நீதி
    மானம்
    நம்பிக்கை
    >
    >
    >
    >
    அநாகரிகம்
    அநீதி
    அவமானம்
    அவநம்பிக்கை

    • பதிலிடு பெயர்கள் (pronouns)

    ஒரு பெயர்ச் சொல்லுக்குப் பதிலாக இட்டு வழங்கும் இன்னொரு பெயரையே பதிலிடு பெயர்கள் என்கிறோம். பால் வேறுபாடு காட்டாமல் எண் வேறுபாட்டைக் காட்டும் இப்பெயர்களைப் பின்வருமாறு பிரித்துக் காட்டலாம்.

    சுட்டுப் பெயர்களே படர்க்கை மூவிடப் பெயர்களாக இடம் பெறுகின்றன. சுட்டு்ப் பெயர்களே திணை,பால்காட்டுவன; இதனடிப்படையில் இலக்கணப் புலவர்கள் பெயர்ச் சொற்களை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால் என்று பிரித்துள்ளனர்.

    அந்த, இந்த என்ற சொற்கள் இக்காலத் தமிழில் சுட்டுப் பெயரடைகளாகப் பயன்படுகின்றன.

    2.4.2 திணை, பால், எண், இடம் உணர்த்தும் விகுதிகள்

    திணை, பால், எண், இடம் உணர்த்தும் ஈறுகளாக இக்காலத் தமிழில் அமைவன பின்வருவன ஆகும்.

    • ஆண்பால் விகுதி

    அன், ஆன், வன், காரன்.

    அன்
    ஆன்
    வன்
    காரன்
    =
    =
    =
    =
    திருடன், செவிடன், அரசன்
    மச்சான், அத்தான், வண்ணான்
    குயவன்
    வேலைக்காரன், வீட்டுக்காரன்

    • பெண்பால் விகுதி

    அள், த்தி, ஆத்தி, ச்சி, காரி, வி

    அள்
    த்தி
    ஆத்தி
    ச்சி
    காரி
    வி
    =
    =
    =
    =
    =
    =
    மகள்
    குறத்தி, பள்ளத்தி
    பாப்பாத்தி, வண்ணாத்தி
    பள்ளச்சி, செட்டிச்சி
    வேலைக்காரி, வீட்டுக்காரி
    புதல்வி, தலைவி

    • பலர்பால் விகுதி

    அர், அர்கள், வர், வர்கள், மார், மார்கள், கள்

    அர்
    அர்கள்
    வர்
    வர்கள்
    மார்
    மார்கள்
    கள்
    =
    =
    =
    =
    =
    =
    =
    அரசர், திருடர்
    அரசர்கள், திருடர்கள்
    புதல்வர், செல்வர்
    புதல்வர்கள், செல்வர்கள்
    அண்ணன்மார், தம்பிமார், தாய்மார்
    அண்ணன்மார்கள், தம்பிமார்கள், தாய்மார்கள்
    ஆண்கள், பெண்கள், தம்பிகள்

    • ஒன்றன்பால் விகுதி

    ஒன்றன்பால் காட்டும் விகுதிகளைத் தமிழ்ப் பெயர்ச்சொற்களில் காண முடிவதில்லை.

    • பலவின்பால் விகுதி

    ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிக்கும் அஃறிணைப் பெயர்களே பலவின்பால் பெயர்களாகும்.

    க்கள், கள் ஆகியவை பலவின்பால் உணர்த்தும் விகுதிகளாக அமைகின்றன.

    க்கள்
    கள்
    =
    =
    பூக்கள்
    ஆடுகள்

    2.4.3 உயர்வு ஒருமைப் பெயர்கள் (Honorific Singular)

    சமுதாயத்தில் படிநிலை அமைப்பு ஏற்பட்டதன் விளைவாகத் தமிழில் உயர்வைக் குறிக்கும் விகுதிகள் தோன்றின. முக்கியமானவர்களை மற்றவர்களினின்றும் வேறுபடுத்த ‘ஆர்’ என்ற விகுதி பயன்பட்டது. ‘கள்’ சேர்ந்து நாளடைவில் ‘ஆர்கள்’ என்று மாறியது. பலர்பாலுக்குரிய பெயர்ச்சொல்லுடன் ‘கள்’ என்ற பன்மை விகுதி சேர்த்த வடிவமாகிய ‘அவர்கள்’ என்னும் சொல்லையும் சேர்த்து மதிப்பு ஒருமையைக் குறிப்பதாயிற்று. அடிகள் என்ற சொல்லும் இவ்வகையில் இடம் பெறுகிறது.

    அண்ணனார், அண்ணியார்,
    வரதராசனார், துணைவேந்தர் அவர்கள்,
    தலைவர் அவர்கள். அம்மையார் அவர்கள், காந்தி அடிகள்.

    படர்க்கையில் உயர்வு ஒருமையைக் காட்ட ‘ஆர்’, ‘ஆர்+கள்’, ‘அவர்கள்’ முதலியவற்றைச் சேர்ப்பது வழக்கமாக அமைகிறது. தன்மையிலும், முன்னிலையிலும் பன்மையே உயர்வு ஒருமைக்குப் பயன்படுத்தப் படுகிறது. முன்னிலையில் பன்மை வடிவங்கள் உயர்வு ஒருமையைக் குறிக்கப் பயன்படுகின்றன.

    நீ, நீர், நீங்கள்

    என்பன முறையே தாழ்ந்தோரையும், சமநிலையில் உள்ளோரையும், உயர்ந்தோரையும் குறிக்கப் பயன்படுகின்றன. உயர்வைக் குறிக்கும் ஒருமைப் பெயர்கள் முன்னிலை ஏவல் வினைகளையும் பாதிக்கின்றன. இவ்வகையில் ஏவல் சொல் தாழ்ந்த நிலையினருக்கும், ‘உம்’ விகுதி சேர்த்த அமைப்பு சமமான நிலையில் உள்ளவர்க்கும், ‘உம்+கள்’ சேர்த்த அமைப்பு உயர்ந்த நிலையில் உள்ளவர்க்கும் பயன்படுத்தப்படுகிறது.

    நட, நடவும், நட(வு)ங்கள்.

    ‘அருளும்’ என்ற துணைவினை மிகுந்த மரியாதையைக் காட்டுகிறது.

    சான்று: நடந்தருளும்

    அருள்ஞானிகள், அரசர் போன்றோருக்கு இத்துணைவினை பயன்படுத்தப்படுகிறது. படர்க்கையும் உயர்வைக் குறிக்க ஆளப்படுகிறது. தமிழில் ‘தாம், தாங்கள்’ என்ற இரு பாகுபாட்டு வடிவங்கள் உள்ளன. கடவுளை மட்டுமின்றி அருள்ஞானிகளையும் துறவிகளையும் பற்றி முன்னிலை உயர்வாகப் பேச இந்தப் படர்க்கை வடிவங்கள் சேர்க்கும் முறை உண்டு. சில நேரங்களில் தொடரின் முடிவு அஃறிணை ஒருமையாக அமைந்தும் உயர்வைக் குறிக்க வரும்.

    சாமி வந்தது.

    இவ்வாறு கூறுவது உயர்வாகக் கூறும் முறையாகும்.

    ஆண்பால் அல்லது பெண்பால் ஒருமையைப் பயன்படுத்துவது மதிப்புடையதாக இல்லாத இடங்களில் அஃறிணை ஒன்றன்பால் விகுதியைப் பயன்படுத்திச் சுட்டுவது மரியாதையாகக் கருதப்படுகின்றது.

    அண்ணன் வந்தது
    அக்காள் வந்தது, தங்கை வந்தது.

    பெண்களிடம் பேசும்போது ‘அம்மா’ என்ற சொல் உயர்வைக் குறிக்க இடம்பெறுகிறது.

    வந்தாயா
    வந்தாயாம்மா
    வந்தாயாப்பா
    வந்தாங்கொ
    =
    =
    =
    =
    சமமானவரைக் குறிக்க
    பெண்ணை அல்லது தங்கையைக் குறிக்க
    இளையோர் உள்ளிட்ட ஆடவரைக் குறிக்க
    படர்க்கையில் மிக முக்கியமானவர்களைக்
    குறிக்க

    இவையும் உயர்வு குறிக்கும் வடிவங்களாகின்றன.

    2.4.4 வினை

    வினையில் இடம் பெற்றுள்ள இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றிப் பார்ப்போமா?

    • இறந்த காலம்

    இறந்த காலம் காட்டும் இடைநிலைகளாக இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் பின்வருவன அமைகின்றன.

    (1) த் ~ ச் ; த்த் ~ ச்ச்
    (2) ந்த் ~ ஞ்ச்
    (3) ண்ட்
    (4) ன்ன்
    (5) இ ~ இன் ~ ன்

    சான்று:

    (1)
    (2)
    (3)
    (4)
    (5)
    6)
    (7)
    (8)
    (9) (10)
    (11)
    (12)
    (13)
    (14)
    செய்தான்
    கொண்டான்
    நின்றான்
    அறிந்தான்
    பாய்ந்தான்
    ஒடுங்கினான்
    நட்டான்
    உண்டான்
    தின்றான்
    கேட்டான
    பார்த்தான்
    விற்றான்
    முடித்தான்
    படித்தாள்
    >
    >
    >
    >
    >
    >
    >
    >
    >
    >
    >
    >
    >
    >
    செய்தா~
    கொண்டா~
    நின்னா~
    அறிஞ்சா~
    பாஞ்சா~
    ஒடுங்க்னா~
    நட்டா~
    உண்டா~
    தின்னா~
    கேட்டா~
    பாத்தா~
    வித்தா~
    முடித்தா~
    படிச்சா

    துணைவினை என்ற முறையில் ‘கொண்டு’ என்பது சில மாற்றங்களுக்கு உட்பட்டு இறந்த காலத்தை உணர்த்துகிறது.

    கொண்டு
    >
    கொணு
    >
    க்ணு ~ க்னு
    சான்று : எடுத்துக்ணு
    கொண்டு
    >
    கொடு
    >
    க்டு
    சான்று: எடுத்துக்டு

    • நிகழ்காலம்

    நிகழ்கால உருபுகளாக ‘ற், க்ற்’ ஆகியன அமைகின்றன.

    சான்று:

    போகிறாள்
    கேட்கிறாள்
    >
    >
    போறா
    கேக்றா

    • எதிர்காலம்

    ‘ப், ப்ப்’ வடிவிலி உருபன் (ற), ‘வ்’, மெய்கள் மகர மெய்யாக ஓரினமாக்கப்படுதல் முதலியவை எதிர்காலத்தைக் குறிக்கப் பயன்படுகின்றன.

    தின்பான்
    தின்குவா
    >
    >
    தின்னுவா~
    தின்பா >

    திம்மா~

    • துணை வினைகள்

    வினைகளுக்குப் புதிய பொருள்களை உண்டாக்குவதற்குத் துணை வினைகள் பயன்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படும் துணை வினைகளாவன:

    வை
    போ
    கொண்டிரு
    விடு
    தொலை
    தள்ளு
    அழு
    ஆயிற்று
    =
    =
    =
    =
    =
    =
    =
    =
    செய்து வை
    செய்யப் போகிறான்
    செய்து கொண்டிருந்தான்
    வந்து விடுவான்
    கொடுத்துத் தொலை
    விட்டுத் தள்ளு
    கொடுத்து அழு
    பணம் கேட்டு ஆயிற்று

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 13:01:55(இந்திய நேரம்)