Primary tabs
நாட்டுப்புறத்து மக்களாம் கிராமத்து மக்களை நாட்டார் என்றும் கூறுவதுண்டு. இச்சொல் குறித்த தகவல்கள் சிலவற்றை அறிந்து கொள்வது மிகவும் தேவையானதாகும். 'நாட்டார்' என்ற சொல் மக்களுள் ஒரு நிலப்பகுதியினர் என்ற பொருளில்தான் நாட்டுப்புற இலக்கியத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பதற்கும் 'நாட்டார்' என்ற சொல் இக்காலத்தில் பயன்படத் தொடங்கி விட்டது. இதனால், 'நாட்டார்' என்பது நாட்டுப்புறத்தாரை மட்டுமே குறிக்கும் என்பதை நாட்டுப்புறவியல் இலக்கியம் கற்பவர்கள் தெளிவுபட முதற்கண் அறிந்து கொள்ள வேண்டும்.
நாட்டுப்புறவியல் அறிஞர் நா. வானமாமலை, முதன்முதலில் நாட்டுப்புறத்தாரை 'நாட்டார்' என்று குறிப்பிட்டு அவர்களது வரலாற்றினை, இலக்கியத்தைக் குறித்து எழுதுவதை 'நாட்டார் வரலாறு’ என்று எடுத்துக் கூறினார். தமிழ்ப் பேரகராதி நாட்டார் என்ற சொல் குறித்துப் பல்வேறு விளக்கங்களைத் தருகின்றது.
• தேசத்தார்
• நாட்டு மகாசனம்
• நாட்டாண்மைக்காரர்
• கள்ளர், செம்படவர் முதலிய சாதியினரின் பட்டப் பெயர்கள்
• தென்னார்க்காடு மாவட்டத்திலிருந்த ஒரு விவசாய வகுப்பார்அகராதியின் கருத்துப்படி 'நாட்டார்' என்பது ஒரு கூட்டத்தாருக்கு உரியது என்பதாக இல்லை. மேலும் 'நாட்டார்' என்ற சொல்லாட்சி தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் ஒரு குறிப்பிட்ட சாதி மக்களைச் சுட்டுவதாக வழங்கப்படுகிறது. ஆனால் இத்தகு வரன்முறைகளுக்கு உட்படாத சொல்லாக, நாட்டுப்புறத்தாரே 'நாட்டார்' என்று நாட்டுப்புறவியல் அறிஞர்கள் விளக்கம் தந்தனர். 'நாட்டார்' என்பதே, ஆங்கிலத்தில் குறிக்கப் பெறும் folk என்னும் சொல்லுக்கு இணையாக இந்த அறிஞர்கள் தரும் தமிழ்ச் சொல்லாகும். இச்சொல்லின் அடிப்படையில் நாட்டுப்புறவியல் தொடர்பாகப் பல்வேறு கலைச் சொற்களையும் உருவாக்கியுள்ளனர். அச்சொற்களைத் தெரிந்து கொள்வது நலம் பயப்பதாகும்.
• கலைச்சொற்கள் பட்டியல்• நாட்டுப்புற வழக்காறு - Folk lore
• நாட்டுப்புறவியல் - Folk loristics
• நாட்டுப்புற இலக்கியம் - Folk Literature
• நாட்டுப்புறப் பாடல் - Folk Song
• நாட்டுப்புறக் கலை - Folk Art
• நாட்டுப்புற நம்பிக்கைகள் - Folk Beliefsஇச்சொற்களை அறிந்து கொண்டால் இவ்விலக்கியம் குறித்துப் படிப்பதற்குத் துணையாக இருக்கும்.