தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

2.2-இராமப்பய்யன் அம்மானை

  • 2.2 இராமப்பய்யன் அம்மானை

    தமிழில் தோன்றிய முதல் அம்மானை (கதைப்பாடல்) இராமப்பய்யன் அம்மானையாகும். இதன் காலம் கி.பி.1640. மதுரையில் கி.பி.1623 முதல் 1656 வரை ஆட்சி புரிந்த திருமலை நாயக்கரிடம் தளவாயாக இருந்த இராமப்பய்யன், இராமநாதபுரத்தை ஆண்டு வந்த சேதுபதி சடைக்கத் தேவன் மீது போர் தொடுத்து அவனைச் சிறைசெய்து வந்த கதையைக் கூறுவது இராமப்பய்யன் அம்மானையாகும்.

    · மன்னர்களின் மரபு

    கதையின் உள்ளே செல்வதற்கு முன்பு போரில் ஈடுபட்ட இரு மன்னர்களின் மரபு பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    விசுவநாத நாயக்கர் (1529-1564) தொடங்கி வைத்த நாயக்க வம்சத்தில் வந்தவர் திருமலை நாயக்கர் (1623-1659). இவரது தளபதியே இராமப்பய்யன். இவனே கதையின் தலைவன்.

    இராமநாதபுர சேதுபதிகள் வம்சத்தில் வந்த இரண்டாம் சடைக்கன் சேதுபதியே இராமப்பய்யனை எதிர்த்துப் போரிட்டவன். இனி அம்மானை கூறும் கதையைப் பார்க்கலாம்.

    · இயல்பு

    சேதுபதியின் மக்களான குமாரன், அழகன் ஆகிய இருவரும் களத்தில் காலனுக்கு இரையாகிவிட்டதைக் கேட்டதும் அவர்களுடைய அன்னை இரங்கி அழுவதைக் கதைப் பாடல் இயல்பாக விளக்கிப் படிப்போரைக் கசிந்து உருகச் செய்கிறது.

    · அமைப்பு

    கதை நிகழ்ச்சியின் அடிப்படையில் இராமப்பய்யன் அம்மானையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இராமப்பய்யன் தலைமையிலான நாயக்கப் படையெடுப்பில் தொடங்கிச் சேதுபதி தன் படையுடன் இராமேசுவரம் சேர்ந்தது வரை ஒரு பகுதியில் அடங்கும். இரண்டாவது பகுதி இராயருக்கு உதவி செய்ய இராமப்பய்யன் வெங்களூர் சென்ற பயணத்தைக் குறிக்கும். மூன்றாவது பகுதியில் இராமேசுவரத்திற்குப் பாலம் கட்டுதல், நாயக்கர் படைக்கும் மறவர் சேனைக்கும் நடந்த தரைப்போர், பரங்கியர் கலந்து கொண்ட கடற்போர், வன்னியன் வெற்றிக்கும் சாவுக்கும் பிறகு சடைக்கன் அடைக்கலம், சிறைவாசம், சடைக்கன் விடுதலை, சேது நாட்டின் அரசைச் சேதுபதி மீண்டும் பெறல் ஆகியவையாகும்.

    வரலாற்றையும் வாழ்வையும் இணைத்து இனிது விளக்குவது கதைப்பாடல் என்ற உண்மை இக்கதைப்பாடல் மூலம் நன்கு புலப்படுகிறது.

    2.2.1 கதைச் சுருக்கம்

    பாண்டியர் ஆட்சிக்குப் பிறகு மதுரையைத் திருமலை நாயக்கர் தலைசிறந்த மன்னனராக ஆட்சி புரிந்து வந்தார். திருமலை நாயக்கர் காலத்தில் (கி.பி.1623-1659) மறவர் நாட்டைத் தளவாய் சேதுபதி இரண்டாவது சடைக்கன் தேவன் ஆண்டு வந்தான். அவனுடைய நாட்டைப் பலமுறை முயன்றும் திருமலை நாயக்கரால் கைக்கொண்டு ஆணை செலுத்த முடியவில்லை. இக்காலத்தில் இராமப்பய்யன், திருமலை நாயக்கரின் தளபதியாகப் பணிபுரிந்து கொண்டிருந்தான்.

    திருமலை நாயக்கர்

    திருமலை நாயக்கரின் நம்பிக்கைக்கும் பாராட்டுக்கும் உரிய இராமப்பய்யன் பல போர்க்களங்களைக் கண்டவன்.

    திருமலையின் எண்ணத்தை உணர்ந்த இராமப்பய்யன், சேதுபதியைத் தானே அடக்க, திருமலையின் அனுமதியைப் பெறுகின்றான். திருமலையின் அனுமதியோடு இராமநாதபுர சேதுபதி இரண்டாம் சடைக்கத்தேவன் மீது போர்தொடுக்கச் செல்கிறான் இராமப்பய்யன். செல்லும் வழியில் மானாமதுரையில் தங்கியிருந்த பொழுது, சடைக்கத் தேவன் தன் மருமகன் வன்னியனை அனுப்பி இவன் மீது போர் தொடுத்து வெற்றி பெறுகிறான். எழுபத்திரண்டு பாளையக்காரர்கள் இராமப்பய்யனுக்கு உதவி செய்தும் போரில் அவன் வெற்றி பெறவில்லை. போகலூர்க் கோட்டையிலே நடந்த போரிலும் வன்னியனே வெற்றி பெறுகிறான். இராமப்பய்யன் அரியாசபுரத்தை முற்றுகையிட்டுத் தாக்கும்போது சடைக்கத்தேவன் காயம் அடைந்து இராமேசுவரம் சென்றுவிடுகிறான். இந்நிலையில் இராமப்பய்யன், இராயருக்கு உதவி புரிவதற்காக வடக்கே அனுப்பப் பெற்று வெற்றி வாகை சூடுகிறான். மீண்டும் போகலூர்க் கோட்டையை முற்றுகையிட்டுச் சேதுபதியின் மக்களான குமாரன், மதியார் அழகன் ஆகியோரைப் பிடித்துச் சித்திரவதை செய்து கொல்கிறான். இராமேசுவரத்திலுள்ள சேதுபதியுடன் போரிட பரங்கியர் உதவியுடன் கப்பல் போரும் நடைபெறுகின்றது. வெற்றியும் தோல்வியும் இரு பக்கமும் மாறிமாறி ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் வன்னியன் வைசூரி அம்மையினால் துன்பப்படுகிறான். பாம்பன் துறைப்போரில் வன்னியன் இறக்க, அவன் மனைவி ஈமத்தீயில் விழுந்து உயிர் துறக்கிறாள். பின்னர் சடைக்கத்தேவன் சரணடைய, சிறையில் அடைக்கப்படுகிறான். சிறையிருந்த காலத்தில் மாயன் (திருமால்) அருளால் அவன் கால் விலங்குகள் தெறித்தன. காவலர் மூலமாக இச்செய்தி அறிந்த திருமலை, சடைக்கத் தேவனை விடுவித்து, ஆடை ஆபரணம் கொடுத்து ‘ராமநாத சுவாமி நல்ல பெருந்தீவில் சென்றிருங்காண்’ என்று விடை கொடுத்து அனுப்பியதாகவும். விடைபெற்ற சேதுபதி சொக்கலிங்கம் மீனாட்சி துணையென்று வணங்கி.

    ராமநாத சுவாமி நல்லபெரும் பட்டணத்தில்
    செங்கோல் செலுத்திச் சேவடியைக் கைதொழுது
    மாயன் அருளால் மண்டலத்தை ஆண்டிருந்தான்;

    எனவும் கூறி, கதையாசிரியர் இராமப்பய்யன் அம்மானையை முடிக்கின்றார்.

    2.2.2 வரலாறும் கதைப்பாடலும்

    நாயக்கர்கள் கி.பி. 1529 முதல் 1726 வரை, கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் மதுரையை ஆண்டு வந்தனர். நாயக்க மன்னர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் விசுவநாத நாயக்கர் (1529 - 1564), திருமலை நாயக்கர் (1623 - 1659), இராணி மங்கம்மாள் (1689 - 1706) ஆகியோராவர். நாயக்க அரசு வம்சத்தைத் தோற்றுவித்தவர் விசுவநாத நாயக்கர். நாடு முழுவதையும் எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரித்து எவர் எவர்க்கு எந்த ஊர் அல்லது பட்டணம் உரியது என்பதை உறுதி செய்தவரும் இவரே. நாயக்க மன்னர்கள் மதுரையிலிருந்து அரசு செலுத்தினாலும் மறவர் நாடு பெயரளவில்தான் அவர்கள் ஆட்சியிலிருந்தது. போர்வீரர்களாகிய இம்மக்களுடைய நாடும் ‘மறவர் நாடு’ என்றே வழங்கியதாக சேசு கடிதம் (Jesuit Letters, Letter of Proenza to Nikel, Trichiropoly, 1659) ஒன்று கூறுகிறது. வெளிநாட்டினரின் ஊடுருவலைத் தவிர்க்க, சேதுபதி வம்சத்தை உயிர்ப்பித்து ஒரு வலிமையான அரசை மறவர் நாட்டில் நிறுவியவர் விசுவநாத நாயக்கரின் மகனான முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரே ஆவார். ஆயின் மறவர் நாட்டு மக்கள், தமிழ்நாட்டின் பிறபகுதியினர் அடங்கி ஒடுங்கியதைப் போல், நாயக்க அரசருக்குப் பணிந்து அவர்களது ஆட்சியை ஏற்க மறுத்தனர். இக்காலக் கட்டத்தில் மறவர் நாட்டைத் தளவாய் சேதுபதி இரண்டாவது சடைக்கத்தேவன் ஆண்டு வந்தான். மதுரையை, திருமலை நாயக்கர் ஆண்டு வந்தார். மதுரைக்கு அருகில் வலிமை பொருந்திய சிற்றரசு ஒன்று இயங்கினால் அது தன்னுடைய அரசுக்கே உலைவைக்கும் என்று தவறாக எண்ணிய திருமலை, சேதுபதிமீது படையெடுக்கத் தக்க தருணத்தை எதிர்நோக்கியிருந்தார்.

    இதே காலக்கட்டத்தில் சேதுபதியை ஆட்சி பீடத்திலிருந்து அகற்ற முந்தைய சேதுபதியின் சோர புத்திரனான தம்பி என்பான் அவனுக்குத் தொல்லைகள் கொடுத்து வந்தான். திருமலை நாயக்கனின் உதவியையும், தம்பி நாடினான். இதற்காகக் காத்திருந்த திருமலை, சேதுபதி மதுரை ஆட்சியை மதிக்காமலும் கப்பம் கட்டாமலும் இருந்து வருகிறான் என்ற சாக்கைச் சொல்லி மறவர் நாட்டின்மீது படையெடுத்தார்.

    · வரலாறு

    நாயக்கர் வரலாற்றைப் பெருமளவு அறியத் துணைபுரிபவை சேசுசபைப் பாதிரிமார் எழுதிய கடிதங்களாகும். இதுவரை கூறப்பட்ட நாயக்கர் வரலாற்றுக்கும், இராமப்பய்யன் அம்மானையில் காணப்படும் வரலாற்றுத் தகவலுக்கும் பெரியதொரு வேறுபாடு இல்லை. இராமப்பய்யன் என்ற தெலுங்குப் பிராமணப் படைத்தலைவன் ஒருவன் திருமலை நாயக்கரின் படைத்தலைவனாய் இருந்தான் என்பதிலும், மறவர் நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான் என்பதிலும் எவ்வித மாறுபாடுமில்லை. மறவர் நாட்டுப் படையெடுப்பில் இராமப்பய்யன் வெற்றியடைந்து சடைக்கத்தேவன் சேதுபதியைத் திருமலை நாயக்கனிடம் ஒப்புவித்துச் சிறையில் அடைக்கச் செய்தான் என்பது அம்மானையில் காணப்படும் தகவலாகும். இதற்கு மாறாக, போரின் நடுவிலேயே இராமப்பய்யன் இறந்து விட்டானென்று வரலாறு சொல்லுகின்றது. ஆனால் கதைப்பாடல் சேதுபதியின் மருமகன் வன்னியத் தேவன் இறந்ததனால், சடைக்கத்தேவன் (சேதுபதி) திருமலையிடம் சரணடைந்தான் எனக் கூறுகிறது. சடைக்கத் தேவனின் தம்பி சோரபுத்திரனைப் பற்றிக் கதைப் பாடலில் குறிப்பிடப்படவில்லை. வன்னியைப் பற்றிய செய்தி அம்மானையில் தவிர வேறு எங்கும் காணப்படவில்லை. மறவர் படையைத் தோற்கடிக்க முடியாத இராமப்பய்யன் பரங்கியரின் உதவியை நாடினான் என்று அம்மானை கூறுகிறது. சேசு சபைக் கடிதமோ மதுரை நாயக்கன் மறவர் நாட்டுப் படையெடுப்பில் தனக்கு உதவியதற்காகப் போர்ச்சுக்கல் அரசனுக்கு மறவர் நாட்டில் கோட்டை கட்டிக் கொள்ளவும், பல மாதா கோயில்கள் கட்டிக் கொள்ளவும் அனுமதி வழங்கினான்; இன்னும் பல வசதிகளையும் அளிக்க முன்வந்தான் என்று உறுதி செய்கிறது.

    சிறை வைக்கப்பட்ட சேதுபதி, பாதிரியாரின் வேண்டுகோளின்படி விடுதலையடைந்ததாக வரலாறு கூறுகின்றது. தெய்வ பக்தியால் சேதுபதியைக் கட்டியிருந்த விலங்குகள் தெறித்துவிடவே திருமலையால் விடுதலை செய்யப்பட்டான் என்று அம்மானை சொல்கிறது. ஆயின் வடநாட்டிலிருந்து வந்த திருத்தலப் பயணிகளான வயிராகிகளும் லாடசந்நியாசிகளும் திருமலை நாயக்கனிடம் முறையிட்டதனால் சேதுபதி விடுதலை செய்யப்பட்டான் என்றும் வரலாறு சொல்லுகின்றது. மேலும் மெக்கன்சி சேர்க்கையில் (Meckenzie Manuscripts) வடநாட்டிலிருந்து வந்த திருத்தலப் பயணிகள் திருச்சியில் சிறை வைத்திருந்த சேதுபதியாகிய சடைக்கத்தேவனை விடுவித்து, ஸ்ரீரங்கத்தில் அவனுக்கு முடிசூட்டி, இராமநாதபுரம் அழைத்துச் சென்று அரசு கட்டிலில் அமர்த்தினார்கள் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது.

    இவ்விரண்டு செய்திகளிலிருந்தும் சேதுபதி விடுதலையில் வடநாட்டுத் திருத்தலப் பயணிகள் ஈடுபட்டிருந்தார்கள் என்பது பொதுவாகத் தெளிவாகிறது.

    இந்த அளவிலேயே கதைப்பாடல், வரலாற்றிலிருந்து மாறுபட்ட செய்திகளைக் கொண்டுள்ளதாக விளங்குகின்றது. கி.பி. 17ஆம் நூற்றாண்டு மதுரை நகர அரசியல் நிலையை அறிந்து கொள்ள இராமப்பய்யன் அம்மானை பெரிதும் துணைபுரிகின்றது. எனலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:23:35(இந்திய நேரம்)