தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.2 சிறுதெய்வம் - பெருந்தெய்வம் மரங்கள்

  • 2.2 சிறுதெய்வம் - பெருந்தெய்வம்

    சிறுதெய்வம் என்று சொல்லும் பொழுதே பெருந்தெய்வம் என்ற ஒன்றும் இருப்பதாகக் கருத்து அமைவது தவிர்க்க இயலாததாகும். மனித சமூகத்தில் உயர்வு, தாழ்வு என்ற பாகுபாடு தோன்றி வளர்ந்துள்ளதைப் போலவே, மனிதப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வழிபாட்டிலும் பெருந்தெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு என்ற பாகுபாடு நிலவி வருகிறது. சமூகத்தின் அடித்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் சிறுதெய்வங்களாகவும், மேல்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் பெருந்தெய்வங்களாகவும் தனித்தனியே வணங்கப்பட்டு வருகின்றன.

    .

    பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

    2.2.1 சிறுதெய்வம் - பெருந்தெய்வம் வேறுபாடு

    நாட்டுப்புற மக்கள் சிறுதெய்வங்களை மட்டுமல்லாது சிவபெருமான், திருமால், முருகன், விநாயகர், பார்வதி, மீனாட்சி, காமாட்சி போன்ற பெருந்தெய்வங்களையும் வழிபட்டு வருகின்றனர். இருப்பினும் சிறுதெய்வங்கள், பெருந்தெய்வங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் மிகுதி, இந்த அட்டவணையைப் பாருங்கள், உங்களுக்குப் புரியும்.

    சிறுதெய்வங்கள்
    பெருந்தெய்வங்கள்
    1.
    பிறப்பு, இறப்பு உடையவை

    பிறப்பு, இறப்பு அற்றவை

    2.
    கிராமம், காடு, மலைப் பகுதிகளில் மிகுதியாக வணங்கப்படுவன.

    நகரங்களில் மிகுதி.

    3.
    பாமர மக்களால் வழிபடப் படுபவை

    பெரும்பாலும் உயர்குடியைச் சேர்ந்தவர்களால் வழிபடப்படுபவை

    4.
    வரையறைக்கு உட்பட்ட ஆற்றலை மட்டும் உடையவை

    அதீத ஆற்றல் உடையவை

    5.
    குடும்பம், குலம், இனம், கிராமத்திற்கென்று தனித்தனிக் கோயில்கள் உண்டு.

    அனைத்தும் பொதுக் கோயில்களே

    6.
    உயிர்ப் பலியிட்டு வழிபடப் படுபவை

    பலியிடலை ஏற்காதவை. மரக்கறி உணவையே விரும்புபவை

    7.
    ஆரவாரமான வழிபாட்டை உடையவை

    அமைதியான வழிபாட்டைக் கொண்டவை.

    8.
    அந்தணர் அல்லாதாரே பூசாரிகளாக இருப்பர். சாமியாடிகள், அம்மனாடிகள் உண்டு.

    பெரும்பாலும் அந்தணர்கள் அல்லது சைவ வேளாளர்கள் பூசாரிகளாக இருப்பர். சாமியாடுவதை விரும்புவதில்லை

    9.
    செவிவழிக் கதைகளும், நாட்டுப்புறப் பாடல்களும் உண்டு.

    புராணங்களும் தல வரலாறுகளும் உண்டு.

    பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

    சிறுதெய்வங்களுக்கும் பெருந்தெய்வங்களுக்கும் இருப்பிடம், உருவ அமைப்பு, கோயில் அமைப்பு, வழிபாட்டு முறை, விழாக்கள், நேர்த்திக் கடன் போன்றவற்றில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. இதை நீங்களும் நன்கு அறிவீர்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 09-10-2017 15:56:26(இந்திய நேரம்)