Primary tabs
-
5.6 விளையாட்டுகள் வழங்கும் கொடை
எல்லாம் இதன்பால் உள என்று கூறுமளவிற்கு அனைத்துத் திறன்களையும் தன்னை நாடி வருவோருக்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளலாய், பண்பாட்டுப் பெட்டகமாய் நாட்டுப்புற விளையாட்டுகள் விளங்குகின்றன. அறிவு, ஆற்றல், சிந்தனை, ஒழுக்கம், கூட்டியக்கம், இசை, மகிழ்ச்சி என்று அவை வழங்கும் கொடைகள் சொல்லி முடியாது. அதையும்தான் என்னவென்று பார்த்துவிடுவோமே !
சிறியோர் விளையாட்டுகளில் பாடல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. பாடல் இல்லாத விளையாட்டு பருப்பு இல்லாத கூட்டு போன்றதாகும். இப்பாடல்கள் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டுவதோடு உலக அறிவையும் மொழித்திறனையும் கணிதப் பயிற்சியையும் வளர்ப்பனவாக உள்ளன. பாடலின் முதலடியைக் கொண்டே விளையாட்டுகளும் நினைவுபடுத்தப் படுகின்றன. விளையாட்டில் இடம்பெறும் பாடல்கள் விளையாட்டுகளின் தன்மைக்கு ஏற்பவும் வயது, பருவம், மனம், விருப்பம் போன்றவற்றிற்கு ஏற்பவும் உடல் வளர்ச்சியைக் கவனத்தில் கொண்டும் உருவாக்கப் பட்டுள்ளன.
சொற்கூட்டுப் பாடல்கள், பட்டு வருபவரைத் தேர்ந்தெடுக்கும் பாடல்கள், மொழிப் பயிற்சிப் பாடல்கள், நாப்பிறழ்ச்சிப் பாடல்கள், எண்ணுப் பயிற்சிப் பாடல்கள் என்று விளையாட்டுப் பாடல்கள் பல திறத்தன.
விளையாட்டுப் பாடல்கள் சிலவற்றைக் காண்போம்.1) சொல் புதிது ; சுவை புதிது ; சொற்கூட்டும் இனிது.
நீயும் நானும் கூட்டு
பாடு ஒரு பாட்டு
சில்லரையை நீட்டு
சிவகாசி வேட்டு
திண்டுக்கல்லுப் பூட்டு
திருப்பித்தலைய ஆட்டு2) பாட்டு இதோ ; பட்டு வருபவர் யார்? பார்த்துவிடுவோம்.
3) இவர்கள் எந்தப் பூவைப் பறிக்க வருகிறார்கள்?
பூப்பறிக்க வருகிறோம் பூப்பறிக்க வருகிறோம்
எந்த மாதம் வருகிறீர்? எந்த மாதம் வருகிறீர்?
ஐப்பசி மாதம் வருகிறோம் ஐப்பசி மாதம் வருகிறோம்
எந்தப் பூவைப் பறிக்கிறீர்? எந்தப் பூவைப் பறிக்கிறீர்?
தேவி பூவைப் பறிக்கிறோம் தேவி பூவைப் பறிக்கிறோம்
யாரை விட்டுப் பறிக்கிறீர்? யாரை விட்டுப் பறிக்கிறீர்?
எழிலை விட்டுப் பறிக்கிறோம் எழிலை விட்டுப் பறிக்கிறோம்
என்று வந்து பறிக்கிறீர்? என்று வந்து பறிக்கிறீர்?
இன்று வந்து பறிக்கிறோம் இன்று வந்து பறிக்கிறோம்.4) கேலிப் பாட்டிற்குக் கூலி வேண்டுமா ! அதோபார் மொட்டைத் தலை
மொட்டையும் மொட்டையுஞ் சேந்துச்சாம்
முருங்கை மரத்தில் ஏறுச்சாம்
கட்டை எறும்பு கடுச்சுச்சாம்
காலுகாலுன்னு கத்துச்சாம்5) ஒன்னுரெண்டு சொல்லிக்கோ ! ஓடிப்போயிப் பிடிச்சுக்கோ !
ஒன்னு ஓடிவா கண்ணு
ரெண்டு ரோசாப்பூச் செண்டு
மூனு முகட்டுமேல தேனு
நாலு நாய்க்குட்டி வாலு
அஞ்சு அவரைக்காய்ப் பிஞ்சு
ஆறு அந்தாபாரு தேரு
ஏழு பானையில கூழு
எட்டு டமடமக் கொட்டு
ஒன்பது ஓலைப்பாயப் போட்டு
பத்து படுக்கப்போட்டு மொத்துஇப்பாடல்கள் சிறியோரால் காலங்காலமாகப் பாடப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வளர்த்தெடுக்கப்பட்டும் வந்துள்ளன ; வருகின்றன.
உள்ளங் கவரும் சந்த நடை, எளிய சொற்கூட்டு, திரும்ப வரல், எளிதில் திருப்பிச் சொல்லும் மொழி நடை, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஓசை நயம், இனிமை என்றவாறு அமைந்திருப்பது விளையாட்டுப் பாடல்களின் தனிச்சிறப்பாகும்.
விளையாட்டுகளில் பாடப் பெறும் பல பாடல்கள் இன்று மறந்து போய்விட்டன; இல்லையில்லை மறைந்தே போய்விட்டன. விளையாட்டுகளும் பல மறைந்து வருகின்றன. நாட்டுப்புற இசை மரபில் விளையாட்டுப் பாடல்களுக்குத் தனி இடமுண்டு என்பதை எவராலும் மறுக்க முடியாது. அவற்றைத் தொகுத்துப் பாதுகாப்பது நமது கடமையாகும்.
விளையாட்டு உலகம் தனித்தன்மை வாய்ந்தது. விளையாட்டின் போது சிறுவர்கள் தம்மிடையே ஒரு நெருக்கமான உறவினைக் கொண்டிருப்பர். இந்த நெருக்க உறவும் உணர்வும் மற்றவர்களைப் புரிந்து கொள்ளவும் தோழமை கொள்ளவும் உதவுகின்றன. பெற்றோர், ஆசிரியரிடமிருந்து கற்றுக் கொள்வதை விட, நண்பர் குழுவின் வாயிலாகச் சிறுவர் சிறுமியர் நிறையக் கற்றுக் கொள்கின்றனர். சிறுவர்கள் தன்னொத்த வயதினருடன் சேர்ந்து கற்றுக் கொள்ளும் நடத்தைகளும் பழக்க வழக்கங்களும், முதன்மையும் முக்கியத்துவமும் வாய்ந்தவையாகும்.
விளையாட்டின் போது சிறுவர்களுக்குள் நிகழும் உரையாடல், பாடல்கள், விடுகதைகள், கேலி கிண்டல் போன்றவை ஒரு சுதந்திரத் தன்மையை அவர்களின் மனத்தில் விதைக்கின்றன. புதிய புதிய கதாபாத்திரமாகத் தங்களை உருவகித்துக் கொண்டு ஆடுவது (எலியும், பூனையும் விளையாட்டில் எலியாகவும் பூனையாகவும் மாறுவது, பூசணிக்காய் விளையாட்டில் பூசணிக்காய், இராஜா, வேலைக்காரனாக மாறுவது, துப்பறியும் விளையாட்டில் கள்ளன் போலீசாக மாறுவது) போன்ற செயல்கள் 'போலச் செய்யும்' நடிப்புத் திறனை வெளிப்படுத்தக் கூடியவையாக உள்ளன.
ஓடுதல், தாவிப் பாய்தல், குதித்தல், தாண்டுதல், சொற்பயிற்சி, நாப்பயிற்சி, கணக்கு போன்ற பயிற்சிகளை வளர்ப்பவையாகவும் ஐம்புலன்களுக்கும் ஒரு சேர இன்பம் ஊட்டுவனவாகவும் விளையாட்டுகள் அமைந்துள்ளன.
சிறுவர், சிறுமியர்கள் விளையாட்டில் காட்டும் உற்சாகத்தை அறிந்து, அவர்களின் உள இயல்பினைப் புரிந்து, கல்வி விளையாட்டாகப் போதிக்கப்பட வேண்டும். “A sound mind in a sound body” என்பது விளையாட்டுகளின் வாயிலாகவே சாத்தியமாகும்.
உடல் திறன், உள்ளக் கிளர்ச்சி, வீரப் பண்பு, மதி வன்மை, குழு மனப்பான்மை, இசை, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளுதல், நீண்ட ஆயுள் போன்றவை விளையாட்டில் ஈடுபடுவோருக்கு விளையாட்டுகள் வழங்கும் கொடையாகும்.