தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2-2:5-அரசியல் விடுதலை

  • 2.5 அரசியல் விடுதலை

    ஆங்கிலேயர் வணிகத்தின் பொருட்டு இந்தியாவிற்கு வந்தவர்கள். மெல்ல மெல்ல, இந்திய நாட்டின் அரசியலில் நுழைந்தனர். மன்னர்களுக்கு இடையே பிரிவுகளை ஏற்படுத்தினர். பிரிவுகளைப் பயன்படுத்தி நாட்டு அரசியலில் பங்கு பெற்றனர். பிறகு அரசியலில் முழுமையாக ஈடுபட்டனர். இவ்வாறு இந்தியா முழுவதையும் தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். இந்திய மக்கள் அடிமைப்பட்டனர். அரசியலில் சுரண்டப்பட்டனர். இக்கொடுமையை எதிர்த்துப் போராட முன்வந்தவர்களுள் பாரதியாரும் ஒருவர்.

    அந்நியராகிய ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து இந்திய மக்கள் விடுதலை பெற வேண்டும். அதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிப் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

     

    2.5.1 ஒற்றுமை

    இந்தியா சாதியின் அடிப்படையிலான சமுதாய அமைப்பு உடையது. எனவே மக்களிடையே பல பிரிவுகள் இருந்தன. ஒற்றுமை (Unity) இல்லாமல் இருந்தது. மக்களிடையே ஒற்றுமை இருந்தால்தான், எல்லோரும் ஓர் இனம் என்ற உணர்வு இருந்தால் தான், அந்நியரை எதிர்க்க முடியும் என்று நம்பினார் பாரதியார். எனவே இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பது பற்றிப் பாடுகிறார்.

    அந்நியரின் அரசியல் ஆதிக்கத்தால் பல துன்பங்களை அனுபவித்தனர் இந்தியர். இதிலிருந்து விடுதலை பெற வேண்டும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அந்நியர்களை எதிர்த்துப் போராட வேண்டும். எவ்வாறு போராட வேண்டும்? ஒற்றுமையுடன் போராட வேண்டும். இல்லாவிட்டால் நாம் எல்லோரும் அழிந்து விடுவோம் என்கிறார் பாரதியார்.

    ஆட்சியில் அமர்ந்திருக்கும் அந்நியர்கள், நம்மைச் சுரண்டுகிறார்கள். அந்தச் சுரண்டலை ஒழிக்க - ஆட்சியை நீக்க ஒற்றுமையுடன் போராடுவோம். இல்லாவிட்டால் அழிந்து விடுவோம் என்று எச்சரிக்கிறார்.

     

    2.5.2 அடிமை மோகம்

    இந்தியர்களில் சிலர் ஆங்கிலேயரின் ஆட்சியை ஆதரித்தனர். ஆங்கிலேயரின் கீழ் அடிமையாக வாழ்வதையும் விரும்பினார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு ஆங்கிலேயரால் பல சலுகைகள் கிடைத்தன. இத்தகைய அடிமைமோகம் கொண்டவர்களைப் பார்த்துப் பாரதியார்,

     

    என்று தணியும் இந்த சுதந்திர தாகம்!
    என்று மடியும் எங்கள் அடிமையில் மோகம்?

    ( சுதந்திர தாகம், 1)
     

    (மடியும் = அழியும்)

    என்று வினவுகிறார்.

    மேலும், அடிமை மோகம் கொண்டவர்களே, இனியாவது அந்த மோகத்தை விட்டு நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்ளுங்கள் என்று வேண்டுகிறார். அற்பமான அடிமைத் தனத்தை விரும்பி நீங்கள் பேணிப் பாதுகாத்து முன்னர் வாழ்ந்திருக்கலாம் . அது ஓர் இழிவான செயல் என்று எண்ணி நாணம் அடையுங்கள். அதன் காரணமாக உங்களுக்கு வந்த இகழ்ச்சிகள் நீங்க வேண்டும் எனில், அந்நியருக்குத் தொண்டு செய்யும் அந்த அடிமை மோகத்தைத் ‘தூ’ என ஒதுக்கி விடுங்கள் என்று வேண்டுகிறார் பாரதியார்.

     

    புல்லடிமைத் தொழில் பேணிப் - பண்டு
    போயின நாட்களுக்கு இனி மனம் நாணித்
    தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
    தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி . . .

    (தேசிய கீதங்கள், வந்தேமாதரம், 1,6)
     

    (புல், புல்லிய = அற்பமான, பேணி = பாதுகாத்து, பண்டு = பழைய/முன்னர், தூவென்று = ‘தூ’ என, தள்ளி = ஒதுக்கி)

     

    2.5.3 அஞ்சாமை

    இந்தியா, அந்நியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற வேண்டுமானால், அந்நியர்களை எதிர்க்கும் துணிவு வேண்டும். அந்தத் துணிவைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? எதைக் கண்டும் அஞ்சக் கூடாது. அஞ்சாமையே துணிவைக் கொடுக்கும். அதனால் எதைக் கண்டும் அஞ்சாதீர்கள் என்று வேண்டுகிறார் பாரதியார். எனவே, கோழையாய் (coward) இருக்கின்றவர்களையும், எதைக் கண்டும் அஞ்சுகின்றவர்களையும் பார்த்து,

     

    வலிமை யற்ற தோளினாய் போ போ போ

    கிலிபிடித்த நெஞ்சினாய் போ போ போ

    (நிகழ்கின்ற ஹிந்துஸ்தானமும் வருகின்ற ஹிந்துஸ்தானமும், போகின்ற பாரதத்தை சபித்தல் - 1)

    (அற்ற = இல்லாத, கிலி = அச்சம்)

    என்று கூறித் துரத்துகிறார். அதே நேரத்தில் வருங்கால பாரத மக்களைப் பார்த்து,

     

    ஒளி படைத்த கண்ணியாய் வா வா வா

    உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா

    (நிகழ்கின்ற ஹிந்துஸ்தானமும் வருகின்ற ஹிந்துஸ்தானமும், வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்-1)
     

    என்றும் அழைக்கின்றார்.

    அஞ்சாமையும் துணிவும் இருந்தால்தான் அந்நியர் ஆட்சியை இந்த நாட்டிலிருந்து அகற்ற முடியும் என முழுமையாக நம்பினார் பாரதியார். அவர் நம்பிக்கை வீண்போகவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் கிடைக்காத விடுதலை அவருக்குப் பின்னாவது கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடையலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:37:33(இந்திய நேரம்)