தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 4.1-தமிழ் இசை

  • 4.1 தமிழ் இசை
     

    E

    இசைக்குத் தமிழ் மொழி பொருந்தாது என்று சொல்லிவிட்டு, தமிழர்கள் பிற மொழியில் இசை பாடுவதைப் பாரதிதாசன் வெறுக்கிறார். மேலும் சிலர், தமிழிசை என்று சொல்லிக் கொண்டு வேற்று மொழியைக் கலந்து பாடுகிறார்கள். இதைக் கண்ட பாரதிதாசன்,
     

    தமிழிசையைப் பிறமொழியால் இசைத்தல் வேண்டாம்
    தமிழிசை பாராட்டிடுவீர்

    (எது இசை?-1)
     

    என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
     

    4.1.1 தமிழ்ப் பற்றும் இசையும்
     

    தமிழ் மொழி மீது பற்று இருந்தால்தான் தமிழ் இசை பாடமுடியும். அடிப்படையில் தமிழ்மொழி மேல் வெறுப்பை வைத்துக் கொண்டு தமிழிசையை வளர்ப்பதாகக் கூறுகிறவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்; பிழைப்புக்காகப் பொய் சொல்கிறார்கள். மேலும் அவர்கள், தமிழிசையை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். இதில் தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதைப் பாரதிதாசன்,
     

    தமிழிசையைத் தவறான வழியில் போக்கித்
    தாங்கரிய பழிதாங்காது இருத்தல் வேண்டும்.
    தமிழுக்குப் பகையானோர் தமிழிசைக்கோ
    தக்க பேராதரவை நல்குவார்கள்?

    (எது இசை-2)
     

    என்று கேள்வி கேட்டுச் சிந்திக்க வைத்துள்ளார்.
     

    4.1.2 எது தமிழ் இசை?
     

    தமிழ் இசையில் சாதியக் கருத்துகளையும் மதச் சிந்தனைகளையும் மூடப்பழக்க வழக்கங்களையும் தருவது என்றால் தமிழ் இசை இல்லாமல் இருப்பதே நன்மை தரும் என்று பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
     

    தமிழ்ப் பாடல் மதம் சாதி மூட எண்ணம்
    தரும்பாட்டாய் இருப்பதினும் இலாமை நன்று

    (எது இசை?-3)
     

    என்று தீவிரமாகத் தெரிவித்துள்ள கருத்து, தமிழ் இசையில் எவை இருக்கக்கூடாதவை என்பதை விளக்கும்.

    தமிழ் மொழியில் இசைப் பாடல்கள் பாடப்பட்டால் அவை தமிழ் இசைப் பாடல்கள் எனப்படும். இந்தத் தமிழ் இசைப் பாடல்கள் மதக்கருத்துகளையும் சாதியச் சிந்தனைகளையும் மூடநம்பிக்கைகளையும் பரப்புவனவாய் இருத்தல் கூடாது. தமிழ் இசைப் பாடல்கள் சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடும் பாடல்களாய் இருத்தல் வேண்டும் என்று பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
     

    4.1.3 எளிய தமிழ் இசை போதும்
     

    பல்லவிகளையும் கீர்த்தனங்களையும் தெரிந்தவர்களின் உதவியுடன்தான் தமிழிசையை வளர்க்க முடியும் என்று சிலர் கூறுகிறார்கள். பல்லவிகள் பற்றியும் கீர்த்தனங்கள் பற்றியும் தெரிந்தவர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். தமிழ்ப் பற்று இல்லாத பிறமொழியாளர்களுக்குப் பல்லவியும் கீர்த்தனமும் தெரியும் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் உதவியை நாம் நாட வேண்டியதில்லை என்று பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
     

    பல்லவிகள் கீர்த்தனங்கள் மற்றும் உள்ள
    பல் நுணுக்கம், இசைவிரிவு தெரிந்துள்ளாரின்
    நல் உதவி பெற்றுத்தான் தமிழ் இசைக்கு
    நாம் ஏற்றம் தேடுவது முடியும் என்று
    சொல்லுகின்றார் சில புலிகள். அவர்க்கு நானும் சொல்லுகின்றேன்; சுண்ணம் இடிப்பார்கள் பாடும்
    பல்வகை இலேசான இசைகள் போதும்;
    பாரதியாரே போதும் . . .

    (எது இசை? - 16)
     

    (பல்லவி - இசைப்பாட்டின் முதல் பகுதி; கீர்த்தனங்கள் - போற்றிப்பாடும் பாடல்கள்)
     

    என்னும் பாடல் வழியாக எளிய நாட்டுப்புற இசைப் பாடல்களைப் பயன்படுத்தலாம் என்றும் பாரதியாரின் பாடல்களைப் பாடலாம் என்றும் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

    இப்பாடலில் தமிழில் இசைபாட வேண்டும் என்றால் பல்லவிகளும் கீர்த்தனங்களும் இருந்தால்தான் முடியும் என்று கூறுவோரைப் புலிகள் என்று ஏளனத்துடன் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

    இசைக் கலை நுட்பம் முழுவதையும் அறிந்தவர்களைப் போல் அவர்கள் ஒன்றும் அறியாமல் இருந்து கொண்டு பேசுவதை இச்சொல்லின் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:01:53(இந்திய நேரம்)