தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2:1-பொருள் இலக்கண அறிமுகம்

 • 2.1 பொருள் இலக்கண அறிமுகம்

  தமிழில் உள்ள மிகவும் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணம் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியம் பொருள் இலக்கணத்தை மிகவும் விரிவாகக் கூறுகிறது. தொல்காப்பியத்தில் உள்ள பொருள் அதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில், ஐந்து இயல்கள் பொருள் இலக்கணத்தைக் கூறுகின்றன. தொல்காப்பியத்தைத் தொடர்ந்து, இறையனார் அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், புறப்பொருள் வெண்பாமாலை, களவியல் காரிகை, நம்பி அகப்பொருள் விளக்கம், மாறன் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்கள் பொருள் இலக்கணம் கூறும் நூல்கள் ஆகும். மேலும் ஐந்திலக்கணத்தையும் தெரிவிக்கும் நூல்களிலும் பொருள் இலக்கணம் இடம்பெற்றுள்ளது.

  பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை. பாடல்களில் வரும் பொருள் எப்படி எல்லாம் இருக்கும் என்று எடுத்துக் கூறும் பொருள் இலக்கணம் தமிழுக்குத் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.

  பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும். அகப்பொருள் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் உணர்ச்சியைப் பற்றிக் கூறுவதாகும். புறப்பொருள் என்பது வீரம், போர், வெற்றி, கொடை, நிலையாமை முதலிய புறப்பொருள்களைக் கூறுவதாகும்.

  2.1.1 அகப்பொருள் இலக்கணம்

  ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக் கொண்டு அகப்பொருள் இலக்கணம் அமைந்துள்ளது. இதில் ஆணைத் தலைவன் என்றும் பெண்ணைத் தலைவி என்றும் கூறுவர். தலைவியின் தோழியும் அகப்பொருள் பாடல்களில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு பாத்திரம் ஆவாள்.  காதல் பற்றிப் பாடும்போது தலைவன் தலைவி என்று பொதுவாகப் பாடுவார்களே தவிர ஒருவருடைய இயற்பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை. காதல் உணர்ச்சி எல்லோருக்கும் பொது என்பதால் தனி ஒருவருடைய பெயரைச் சுட்டிப்பாடுவதில்லை. அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மை கொண்டிருக்கும். எல்லாப் பாடல்களும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்களில் யாராவது ஒருவர் கூறுவதாக அமைந்திருக்கும். ஒரே பாடலில் இருவர் மூவர் உரையாடுவது போல இருக்காது. ஒவ்வொரு பாடலுக்கும் திணை, துறை கூறப்பட்டிருக்கும். திணை, நிலம் சார்ந்த ஒழுக்கத்தைக் குறிக்கும். துறை என்பது பாடப்பெற்ற சூழலைக் குறிக்கும். அகப்பொருள் இலக்கணம் திணை அடிப்படையில் அமைந்ததாகும். அகப்பொருள் திணைகள் ஐந்து. அவை,

  1. குறிஞ்சித் திணை
  2. முல்லைத் திணை
  3. மருதத் திணை
  4. நெய்தல் திணை
  5. பாலைத் திணை

  இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும். அவை,

  1. முதற்பொருள்
  2. கருப்பொருள்
  3. உரிப்பொருள்

  ஆகியன ஆகும்.

  • முதற்பொருள்

  நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் எனப்படும். உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் ஆதாரமாக உள்ளதால் இவற்றை முதற்பொருள் என்பர்.

  நிலம்

  ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு:

  குறிஞ்சி
  -
  மலையும் மலை சார்ந்த இடமும்
  முல்லை
  -
  காடும் காடு சார்ந்த இடமும்
  மருதம்
  -
  வயலும் வயல் சார்ந்த இடமும்
  நெய்தல்
  -
  கடலும் கடல் சார்ந்த இடமும்
  பாலை
  -
  பாலை நிலமும் பாலை நிலம் சார்ந்த இடமும்

  தமிழ்நாட்டில் உள்ள நிலப்பகுதி இவ்வாறு ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  பொழுது

  பொழுது என்பது காலம் என்று பொருள்படும். பொழுது சிறு பொழுது, பெரும்பொழுது என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  சிறு பொழுது

  சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும். சிறுபொழுது பின்வருமாறு அமையும்.

  வைகறை
  -
  விடியற்காலம்
  காலை
  -
  காலை நேரம்
  நண்பகல்
  -
  உச்சி வெயில் நேரம்
  எற்பாடு
  -
  சூரியன் மறையும் நேரம்
  மாலை
  -
  முன்னிரவு நேரம்
  யாமம்
  -
  நள்ளிரவு நேரம்

  சிறுபொழுது ஆறும் ஒரு நாளின் ஆறு கூறுகளாக இருப்பதை அறியலாம்.

  பெரும்பொழுது

  பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும். ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பிரிவுகளாகப் பிரிப்பர். இது நீண்ட காலப் பிரிவாக இருப்பதால் பெரும்பொழுது எனப்படுகிறது. ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும் பொழுதுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  சித்திரை, வைகாசி
  -
  இளவேனில் காலம்
  ஆனி, ஆடி
  -
  முதுவேனில் காலம்
  ஆவணி, புரட்டாசி
  -
  கார் காலம்
  ஐப்பசி, கார்த்திகை
  -
  குளிர்காலம்
  மார்கழி, தை
  -
  முன்பனிக் காலம்
  மாசி, பங்குனி
  -
  பின்பனிக் காலம்

  சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவற்றை இவை இவை இந்தத் திணைகளுக்கு உரியவை என்று பிரித்து வைத்துள்ளனர்.

  திணை
  பெரும்பொழுது
  சிறுபொழுது
  குறிஞ்சி
  குளிர்காலம், முன்பனிக்காலம்
  யாமம்
  முல்லை
  கார்காலம்
  மாலை
  மருதம்
  ஆறு காலமும்
  வைகறை
  நெய்தல்
  ஆறு காலமும்
  எற்பாடு
  பாலை
  முதுவேனில், பின்பனி
  நண்பகல்

  ஒவ்வொரு நிலத்திற்கும் மேலே குறிப்பிட்ட காலங்கள் சிறந்தனவாக இருக்கும் என்பதால் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • கருப்பொருள்

  நிலமும் பொழுதும் ஆகிய இரண்டு முதற்பொருள்கள் அத்திணையில் உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன. இவற்றின் காரணமாக ஒவ்வொரு திணையிலும் சூழல் வேறுபட்டுள்ளது. ஒவ்வொரு திணையிலும் வாழும் மக்கள், அவர்களின் தொழில், உணவு, பொழுதுபோக்கு, அந்த நிலத்தில் உள்ள மரங்கள், பறவைகள், விலங்குகள், நீர்நிலை முதலியவற்றைக் கருப்பொருள் என்கின்றனர். கருப்பொருள், பாடல்களில் பின்னணியாகச் செயல்படுகின்றது. எடுத்துக்காட்டாகக் குறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

  குறிஞ்சித் திணையின் கருப்பொருள்கள்
  1
  தெய்வம்
  -
  முருகன்
  2
  தலைமக்கள்
  -
  வெற்பன், கொடிச்சி
  3
  மக்கள்
  -
  குறவர், குறத்தியர்
  4
  பறவை
  -
  கிளி, மயில்
  5
  விலங்கு
  -
  புலி, யானை
  6
  ஊர்
  -
  சிறுகுடி
  7
  நீர்நிலை
  -
  அருவி, சுனை
  8
  பூ
  -
  வேங்கை, குறிஞ்சி
  9
  மரம்
  -
  தேக்கு, அகில்
  10
  உணவு
  -
  மலைநெல், தினை
  11
  பறை
  -
  தொண்டகம்
  12
  யாழ்
  -
  குறிஞ்சி யாழ்
  13
  பண்
  -
  குறிஞ்சிப் பண்
  14
  தொழில்
  -
  தேன் எடுத்தல், வெறியாடல்

  இவ்வாறே ஏனைய திணைகளுக்கும் கருப்பொருள்கள் சொல்லப் பட்டுள்ளன.

  • உரிப்பொருள்

  ஒவ்வொரு திணைக்கும் உரிய பொருளை உரிப்பொருள் என்பர். உரிப்பொருள் திணைக்கு உரிய முக்கிய உணர்ச்சியைக் குறிக்கிறது. ஐந்து திணைகளுக்கும் உரிப்பொருள் பின்வருமாறு:

  குறிஞ்சி
  -
  புணர்தல்
  -
  தலைவனும் தலைவியும் ஒன்று சேர்தல்.
  முல்லை
  -
  இருத்தல்
  -
  தலைவி, பிரிவைப் பொறுத்துக் கொள்ளுதல்.
  மருதம்
  -
  ஊடல்
  -
  தலைவனிடம் தலைவி பிணக்குக் கொள்ளுதல்.
  நெய்தல்
  -
  இரங்கல்
  -
  தலைவி பிரிவுக் காலத்தில் வருந்துதல்.
  பாலை
  -
  பிரிவு
  -
  தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல்.

  இவ்வாறு எல்லாத் திணைக்கும் முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் சொல்லப்பட்டிருக்கின்றன. திணை, நிலத்தை அடிப்படையாகக் கொண்டது. மற்றபடி உள்ள காலம், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவை அந்தந்த நிலங்களுக்குச் சிறப்பாக அமையக் கூடியவை ஆகும். எல்லா நிலங்களுக்கும் சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவை பொதுவானவையே. ஆயினும் ஒவ்வொரு திணைக்கும் உரியதாகச் சொல்லப்பட்டவை அந்தந்தத் திணைக்குச் சிறப்பானவை ஆகும். பறவைகளும் விலங்குகளும் மரங்களும் பூக்களும் மற்ற நிலங்களிலும் இருக்கக்கூடும். எனினும் அந்தந்த நிலங்களுக்கு அவை சிறப்பு வாய்ந்தவை என்பதால் ஒரு திணைக்கு உரியதாக அவை சொல்லப்பட்டுள்ளன. உரிப்பொருள்களும் அவ்வாறே சிறப்புக் கருதிச் சொல்லப்பட்டுள்ளன. அகப்பொருள் இலக்கணம் களவு, கற்பு என்று இரண்டு கூறாகப் பிரிக்கப் பட்டுள்ளது. தலைவன், தலைவி இருவரும் ஒருவரை ஒருவர் பிறர் காணாதவாறு சந்தித்துக் காதல் கொள்ளுவது களவு எனப்படும். திருமணத்திற்குப் பின் உள்ள காதல் வாழ்க்கை, கற்பு எனப்படும். களவிலும் கற்பிலும் தலைவன் தலைவி இவர்களின் உணர்வுகள் எவ்வாறு இருக்கும் என்று விரிவாக இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. பொருள் இலக்கண அமைப்பைப் பின்வருமாறு காட்டலாம்.

  அகப்பொருள் திணைகள் ஐந்துடன் கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டையும் சேர்த்துச் சொல்லுவது உண்டு. கைக்கிளை என்பது ஆண், பெண் ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே காதல் கொள்ளும் ஒருபக்கக் காதல் ஆகும். பெருந்திணை என்பது பொருந்தாத காதல் ஒழுக்கம் ஆகும். கைக்கிளை, பெருந்திணை இரண்டையும் அகப்புறத்திணை என்றும் கூறுவர். கைக்கிளை, பெருந்திணை இரண்டையும் புறப்பொருள் திணைகளாகவும் குறிப்பிடுவர்.

  2.1.2 புறப்பொருள் இலக்கணம்

  புறப்பொருள் என்பது வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும். ஒரு குறிப்பிட்ட அரசனையோ வள்ளலையோ குறுநில மன்னனையோ பெயரைச் சுட்டி அவனுடைய வீரம், வெற்றி, கொடை முதலியவற்றைப் பாடுவது புறப்பொருள் மரபு ஆகும். இவ்வாறு அன்றி ஒருவருக்கு அறிவுரை சொல்லுவது போலவோ யாரையும் சுட்டிக் கூறாமலோ புறப்பொருள் பாடல் அமைவதும் உண்டு. அகப்பொருள் பாடல் போலவே புறப்பொருள் பாடல்களும் திணை, துறை அடிப்படையில் அமைந்துள்ளன. ஆனால் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் போன்ற இலக்கணங்கள் புறப்பொருளுக்கு இல்லை. புறப்பொருள் திணைகள் போரை அடிப்படையாகக் கொண்டவை. போர் செய்யச் செல்லும் அரசனும் படைகளும் போரிடும் முறைக்கு ஏற்ப வெவ்வேறு பூக்களை அணிந்து சென்று போரிடுவர். அவர்கள் அணிந்து செல்லும் பூக்களின் பெயர்களே திணைகளுக்குப் பெயர்களாக அமைந்துள்ளன. பின்வரும் புறத்திணைகள் யாவும் பூக்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவையே.

  புறப்பொருள் திணைகள்

  வெட்சித் திணை
  கரந்தைத் திணை
  வஞ்சித் திணை
  காஞ்சித் திணை
  நொச்சித் திணை
  உழிஞைத் திணை
  தும்பைத் திணை
  வாகைத் திணை

  ஆகியவை புறப்பொருள் திணைகள் ஆகும். இந்த எட்டுத் திணைகளும் போரை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திணைகளுக்கான விளக்கமும் பிற திணைகளான

  பாடாண் திணை
  பொதுவியல்
  கைக்கிளை
  பெருந்திணை

  ஆகியவற்றின் விளக்கமும் பின்வருமாறு:

  வெட்சித் திணை:

  பழைய காலத்தில் பகை அரசனிடம் போர் செய்ய நினைக்கும் ஒருவன் போரின் முதல் கட்டமாகப் பகை அரசனது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வான். இது வெட்சித் திணை எனப்படும். வெட்சி வீரன் வெட்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

  கரந்தைத் திணை:

  பகை அரசன் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை அவற்றிற்கு உரியவன் மீட்டுவரச் செய்யும் போர், கரந்தைத் திணை எனப்படும். கரந்தை வீரன் கரந்தைப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

  வஞ்சித் திணை:

  பகை அரசன் நாட்டைப் பிடிப்பதற்காக அந்த நாட்டின் மேல் படை எடுத்துச் செல்லுதல் வஞ்சித் திணை எனப்படும்.  வஞ்சி வீரன், வஞ்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

  காஞ்சித் திணை:

  படை எடுத்து வரும் பகை அரசனைத் தடுத்துத் தன் நாட்டைக் காக்க நினைக்கும் அரசன் போருக்குச் செல்லுதல் காஞ்சித் திணை எனப்படும். காஞ்சி வீரன் காஞ்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

  நொச்சித் திணை:

  பகை அரசன் படை எடுத்து வந்து கோட்டை மதிலைச் சூழ்ந்து கொண்டபோது, தன்னுடைய கோட்டையைக் காத்துக் கொள்ள அரசன் போர் செய்தல் நொச்சித் திணை எனப்படும். நொச்சி வீரன் நொச்சிப் பூச் சூடி, போருக்குச் செல்வான்.

  உழிஞைத் திணை:

  பகை அரசனுடைய கோட்டையை வெல்லக் கருதிய அரசன் தன் படைகளோடு மதிலைச் சுற்றி முற்றுகை இடுதல் உழிஞைத் திணை எனப்படும். உழிஞை வீரன் உழிஞைப்பூச் சூடி, போருக்குச் செல்வான்.

  தும்பைத் திணை:

  பகை அரசர்கள் இருவரும் போர்க் களத்தில் எதிர் எதிர் நின்று போரிடுதல் தும்பைத் திணை எனப்படும். தும்பை வீரன் தும்பைப் பூச் சூடி, போருக்குச் செல்வான். இந்தத் திணைகளுடன் வாகைத் திணை, பாடாண் திணை, பொதுவியல் திணை ஆகிய மூன்று புறத்திணைகளும் உள்ளன. இவற்றையும் சேர்த்து, பத்துப் புறத்திணைகள் என்று கூறுவர். கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டையும் சேர்த்து, பன்னிரண்டு புறத்திணை என்றும் கூறுவர்.

  வாகைத் திணை:

  போரில் வெற்றி பெற்ற அரசனைப் புகழ்ந்து பாடுதல் வாகைத் திணை எனப்படும். வெற்றி பெற்றவர்கள் வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவார்கள்.

  பாடாண் திணை:

  இதுவரை சொன்ன புறத்திணைகள் போர் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. பாடாண் திணையில் கொடை, கடவுள் வாழ்த்து, அரசனை வாழ்த்துதல் முதலியவை இடம்பெறும்.

  பொதுவியல் திணை:

  போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடுதல், போரில் இறந்த வீரர்களின் மனைவியர் இரங்கல், நிலையாமை முதலியவை பொதுவியல் திணையில் இடம்பெறும்.

  கைக்கிளைத் திணை:

  தன்னை விரும்பாத ஒரு பெண்ணிடம் ஒருவன் காதல் கொள்வது கைக்கிளைத் திணை எனப்படும். இதை ஒருதலைக்காதல் என்று கூறுவர்.

  பெருந்திணை:

  தன்னை விட வயதில் மிகவும் மூத்த பெண் ஒருத்தியிடம் ஒருவன் காதல் கொள்வது பெருந்திணை எனப்படும். இதைப் பொருந்தாக் காதல் என்று கூறுவர். கைக்கிளை, பெருந்திணை என்னும் இவ்விரண்டு திணைகளையும் அகப்பொருள் திணையாகவும் கூறுவர்.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - I
  1.

  பொருள் இலக்கணம் என்றால் என்ன?

  2.

  அகப்பொருள் திணைகள் யாவை?

  3.

  முதற்பொருள் என்றால் என்ன?

  4.

  கருப்பொருள்கள் யாவை?

  5.

  புறத்திணைகளின் பெயர்களைத் தருக.

  6.

  வஞ்சித் திணையைப் பற்றி விளக்குக.

புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2017 10:03:49(இந்திய நேரம்)