தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2:2-யாப்பு இலக்கண அறிமுகம்

 • 2.2 யாப்பு இலக்கண அறிமுகம்

  இலக்கியங்களை இயற்றும் போது இரண்டு வகையான ஊடகங்களில் இயற்றுவார்கள். அவற்றில் ஒன்று செய்யுள், மற்றது உரைநடை. பழைய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் யாவும் செய்யுளிலேயே இயற்றப்பட்டன. செய்யுளில் இயற்றப்பட்ட இலக்கியங்களுக்கும் இலக்கணங்களுக்கும் விளக்கம் கூறுவதற்கே உரைநடை பயன்படுத்தப்பட்டது. இலக்கியம் இயற்றப்பட்ட செய்யுள்களின் அமைப்புப் பற்றிப் படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும்.

  செய்யுள்களில் பல வகைகள் உள்ளன. செய்யுளின் முக்கியக் கூறாக இருப்பது ஓசை. வெவ்வேறு விதமான ஓசைகளை அடிப்படையாகக் கொண்டு பலவிதமான செய்யுள்கள் உருவாகியுள்ளன. பழைய காலத்தில் இருந்த முக்கியமான செய்யுள் வகைகள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவை ஆகும். இவற்றுடன் கலித்துறையும் பழைய காலத்தில் சிறப்பாக விளங்கியது. பக்தி இலக்கியமும் காப்பியங்களும் தோன்றிய காலத்தில் விருத்தம் என்ற செய்யுள் வகை பரவியது. பிற்காலத்தில் சிந்து, கும்மி முதலிய இசைப்பாடல் யாப்புகளிலும் செய்யுள்கள் இயற்றப்பட்டன. யாப்பு இலக்கணத்தில் செய்யுள் பற்றியும் செய்யுளின் உறுப்புகள் பற்றியும் கூறப்படும். அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் ஆகும். இந்த உறுப்புகளைப் பற்றியும் ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகிய பாக்களையும் அவற்றின் வகைகளையும் பற்றியும் படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும்.

  அசை

  எழுத்துகள் சேர்ந்து அசையாக வருகின்றன. அசை நேர் அசை, நிரை அசை என்று இரண்டு வகைப்படும். ஒரு குறில் எழுத்து அல்லது நெடில் எழுத்து, தனியாகவோ மெய் எழுத்துடன் சேர்ந்தோ வருவது நேர் அசை எனப்படும்.

  -
  குறில் எழுத்து
  கல்
  -
  குறில் + மெய் எழுத்து
  கா
  -
  நெடில் எழுத்து
  கால்
  -
  நெடில் + மெய் எழுத்து

  குறில், நெடில் ஆகிய இரண்டும் தொடர்ந்து வருவதும் இரண்டு குறில் எழுத்துகள் தொடர்ந்து வருவதும் நிரை அசை ஆகும். இவற்றுக்குப் பின் மெய் எழுத்து வந்தாலும் நிரை அசை ஆகும்.

  கிளி
  -
  இரண்டு குறில் எழுத்துகள்
  மயில்
  -
  இரண்டு குறில் + மெய் எழுத்து
  புறா
  -
  குறில் நெடில் எழுத்துகள்
  இறால்
  -
  குறில் நெடில் +  மெய் எழுத்து

  மெய் எழுத்தைத் தவிர்த்துப் பார்த்தால் நிரை அசையில் இரண்டு எழுத்துகள் இருக்கும்.

  சீர்:

  அசைகள் இணைந்து வருவது சீர் ஆகும். ஒரே அசை சீராக இருப்பதும் உண்டு. இரண்டு, மூன்று, நான்கு அசைகள் சேர்ந்து சீராக அமைவதும் உண்டு. சீர்கள் பின்வருமாறு அமையும்:

  ஓர் அசைச் சீர்

  ஓர் அசை மட்டுமே வருவது ஓர் அசைச் சீர் ஆகும்.

  க, கல், கா, கால்
  -
  நேர் அசை
  கடு, கடல், பலா, வரால்
  -
  நிரை அசை

  ஈர் அசைச் சீர்

  இரண்டு அசைகள் சேர்ந்து வருவது ஈரசைச் சீர்ஆகும்.
  நேர் நேர் நிரை
  நேர் நேர் நிரை
  நிரை நிரை

  இவ்வாறு ஈர் அசைச் சீர்கள் நான்கு ஆகும்.

  மூவசைச் சீர்

  மூன்று அசைகள் சேர்ந்து வருவது மூவசைச் சீர் ஆகும்.

  நேர் நேர் நேர்
  நிரை நேர் நேர்
  நேர் நிரை நேர்
  நிரை நிரை நேர்
  நேர் நேர் நிரை
  நிரை நேர் நிரை
  நேர் நிரை நிரை
  நிரை நிரை நிரை

  நேர் அசையில் முடியும் மூவசைச் சீர்கள்நான்கும், நிரை அசையில் முடியும் மூவசைச் சீர்கள் நான்கும் ஆக மூவசைச் சீர்கள் எட்டு ஆகும்.

  நாலசைச் சீர்

  நான்கு அசைகள் சேர்ந்து வருவது நாலசைச் சீர்எனப்படும்.

  நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நிரை நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நிரை நேர் நிரை நிரை நேர் நிரை நிரை நிரை நிரை நிரை நிரை நிரை

  நேர் அசையில் முடியும் நாலசைச் சீர் எட்டும், நிரை அசையில் முடியும் நாலசைச் சீர் எட்டும் ஆக நாலசைச் சீர்கள் பதினாறு ஆகும்.

  சீர்களைப் பற்றிக் கூறும்போது அவற்றை எளிமையாக நினைவில் வைக்கும் பொருட்டு அவற்றுக்கு வாய்பாடு கூறப்பட்டுள்ளது. சீர் வாய்பாடுகள் பின்வருமாறு அமையும்: ஓரசைச் சீர்களில் நேர் அசைவரும் சீர் நாள் என்றும், நிரை அசை வரும் சீர் மலர் என்றும் கூறப்படும்.

  ஈரசைச் சீர் வாய்பாடு பின்வருமாறு அமையும்.

  நேர் நேர்
  -
  தேமா
  நிரை நேர்
  -
  புளிமா
  நேர் நிரை
  -
  கூவிளம்
  நிரை நிரை
  -
  கருவிளம்

  நேர் ஈற்றுச் சீர்களை மாச்சீர் என்றும் நிரை ஈற்றுச் சீர்களை விளச்சீர் என்றும் கூறுவர். மூவசைச் சீர்களில் நேர் ஈற்றுச் சீர்களுக்கு மேற்கண்ட வாய்பாடுகளுடன் இறுதியில் காய் என்பதும் நிரை ஈற்றுச் சீர்களுக்கு இறுதியில் கனி என்பதும் வாய்பாடாக வரும்.

  நேர் நேர் நேர்
  தேமாங்காய்
  நிரை நேர் நேர்
  புளிமாங்காய்
  நேர் நிரை நேர்
  கூவிளங்காய்
  நிரை நிரை நேர்
  கருவிளங்காய்
  நேர் நேர் நிரை
  தேமாங்கனி
  நிரை நேர் நிரை
  புளிமாங்கனி
  நேர் நிரை நிரை
  கூவிளங்கனி
  நிரை நிரை நிரை
  கருவிளங்கனி

  நாலசைச் சீர்களுக்கு வாய்பாடு கூறும்போது இறுதியில் நேர் வந்தால் தண் பூ, நறும் பூ என்றும் இறுதியில் நிரைவந்தால் தண்ணிழல், நறு நிழல் என்றும் வாய்பாடு கூறுவர்.

  நேர் நேர் நேர் நேர்
  தேமாந் தண்பூ
  நிரை நேர் நிரை நேர்
  புளிமா நறும்பூ
  நேர் நிரை நேர் நிரை
  கூவிளந் தண்ணிழல்
  நிரை நிரை நிரை நிரை
  கருவிள நறுநிழல்

  சீர்களை எளிதில் நினைவில் வைத்திருக்க உதவியாக இருக்கும் என்பதால் வாய்பாடு கூறப்படுகிறது.

  தளை

  இரண்டு சீர்கள் இணையும் விதம் தளை என்று கூறப்படுகிறது. தளை என்பதற்குக் கட்டு என்பது பொருள். சீர்கள் எவ்வாறு இணைந்து தளையாக வருகிறது என்பது கீழே காட்டப்படுகிறது.

  கற்
  கச
  டறக்
  கற்
  பவை
  கற்
  றபின்
  நேர்
  நேர்
  நிரை
  நிரை
  நேர்
  நிரை
  நேர்
  நிரை
  தேமா
  கருவிளம்
  கூவிளம்
  கூவிளம்

  இந்த அடியில் நான்கு சீர்கள் உள்ளன. நான்கு சீர்களுமேஈரசைச் சீர்கள் ஆகும். கற்க என்ற சீர் நேர் அசையில் முடிகிறது. இதற்குப் பின் வரும் கசடறக் என்ற சீரில் முதல் அசை நிரை அசையாக உள்ளது. நேர் அசைக்குப் பின் நிரை அசை வந்துள்ளது. இதற்குப் பின் வரும் கற்பவை என்ற சீரில் முதல் அசை நேர் அசையாக உள்ளது. கற்றபின் என்ற சீரிலும் முதல்அசை நேர் அசையாக உள்ளது. இந்த அடியில் நேர் அசைக்குப்பின் நிரை அசையும், நிரை அசைக்குப் பின் நேர் அசையும் வந்து தளை கொண்டுள்ளன. முரண்பட்ட இந்தத்தளைக்கு இயற்சீர் வெண்டளை என்று பெயர் ஆகும். இந்தத்தளை வெண்பாவில் மிகுதியும் வரும். இதேபோல வெவ்வேறு அமைப்புகளில் ஏழுவகைத் தளைகள் உள்ளன.

  அடி

  செய்யுளின் அடுத்த உறுப்பு அடி என்பதாகும். அடிஎன்பது செய்யுளில் இடம்பெறும் ஒரு வரியைக் குறிக்கும். பல அடிகள் சேர்ந்து ஒரு செய்யுளாக வரும். அடிகளே செய்யுளை வகைப்படுத்துவதில் முக்கிய இடம் வகிக்கின்றன. அடியில் வரும்சீரின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிகள் பல வகைப்படும்.

  இரண்டு சீர் அடி
  -
  குறள் அடி
  மூன்று சீர் அடி
  -
  சிந்து அடி
  நான்கு சீர் அடி
  -
  அளவு அடி
  ஐந்து சீர் அடி
  -
  நெடில் அடி
  ஆறு சீர் அடி
  -
  கழிநெடில் அடி

  ஆறு சீர்களுக்கு மேலும் ஓர் அடியில் வருவது உண்டு. அவையும் கழிநெடில் அடி என்றே கூறப்படும்.

  தொடை

  தொடுக்கப்படுவது தொடை எனப்படும். இரண்டு அடிகள் தொடர்ந்து வரும்போது அவற்றில் முதல் எழுத்து இரண்டாம் எழுத்து முதலியவை ஒத்து வரும்படி இருப்பது தொடை என்று கூறப்படும். முதல் எழுத்து ஒத்து வருவது மோனை எனப்படும். இரண்டாம் எழுத்து ஒத்து வருவது எதுகை எனப்படும்.

  செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
  செல்வத்துள் எல்லாம் தலை (திருக்குறள் -411)

  இந்தச் செய்யுளில் முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் முதல் எழுத்து செ என்றே வந்துள்ளது. இதுவே மோனைத் தொடை எனப்படும்.

  கற்க கசடறக் கற்பவை
  கற்றபின் நிற்க அதற்குத் தக (திருக்குறள்-391)

  இந்தச் செய்யுளில் இரண்டு அடிகளிலும் இரண்டாம் எழுத்தாக ற் என்ற மெய் எழுத்து வந்துள்ளது. இதுவே எதுகை எனப்படும். இவைபோலவே வேறுபல தொடைகளும் உள்ளன.

  பா

  பா என்பது செய்யுளின் வகை ஆகும். பாக்கள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப்படும். ஒவ்வொரு பாவிலும் வரும் சீர், தளை, அடி ஆகியவை கூறப்பட்டுள்ளன. நான்கு பாக்களுக்கும் தனித்தனி ஓசை உண்டு. ஓசையை அடிப்படையாகக் கொண்டே பாக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாவிலும் பல வகைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, வெண்பாவின் வகைகள் பின்வருமாறு.

  குறள் வெண்பா
  -
  இரண்டு அடிகள் கொண்டது.
  சிந்தியல் வெண்பா
  -
  மூன்று அடிகள் கொண்டது.
  இன்னிசை வெண்பா
  -
  நான்கு அடிகள் கொண்டது. (தனிச்சொல் வராது)
  நேரிசை வெண்பா
  -
  நான்கு அடிகள் கொண்டது. (தனிச்சொல் வரும்)
  பஃறொடை வெண்பா
  -
  ஐந்து அடிகளும் அதற்கு மேலும் வருவது.

  ஒவ்வொரு பாவிற்கும் தனி ஓசை உண்டு. வெண்பாவின் ஓசை செப்பல் ஓசை எப்படும். இவ்வாறே மற்ற பாக்களுக்கும் ஓசைகளும் வகைகளும் உள்ளன.

  பாவினம்

  பாவினம் என்பது பாக்களை ஒட்டி வருவதாகும். பாக்களின் ஓசையை ஒட்டி வருவதால் இவற்றைப் பாவினம் என்று கூறுகின்றனர். தாழிசை, துறை, விருத்தம் ஆகிய மூன்றும் பாவினம் என்று கூறப்படும். இந்தப் பாவினங்கள் நான்கு பாக்களுக்கும் உள்ளன. ஆசிரியப் பாவிற்குரிய பாவினங்கள் பின்வருமாறு.

  ஆசிரியத் துறை
  ஆசிரியத் தாழிசை
  ஆசிரிய விருத்தம்

  இந்தப் பாவினங்களுக்குத் தனியே இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. இதைப் போலவே மற்ற பாக்களுக்கும் பாவினங்கள் உள்ளன.

  2.2.1 பாட்டியல் இலக்கணம்

  இலக்கியங்கள் பலவகைப்படும். அவை பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி, உலா, தூது, பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு முதலியனவாகும். இவை பிற்காலத்தில் தோன்றிய இலக்கிய வகைகள் ஆகும். இத்தகைய இலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறுவது பாட்டியல் இலக்கணம் எனப்படும். பாட்டியல் நூல்கள் இலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுவதுடன் பொருத்த இலக்கணமும் கூறுகின்றன. செய்யுளில் அமைய வேண்டிய பொருத்தங்கள் பத்து என்று பாட்டியல்கள் கூறுகின்றன. ஒருநூலின் தொடக்கம் நன்றாக இருந்தால்தான் நூல் நன்றாக அமையும் என்பது அக்கால நம்பிக்கை. இந்த நம்பிக்கையை ஒட்டியே பொருத்தங்கள் அமைகின்றன.

  பொருத்தங்கள்

  1 மங்கலம் 2 எழுத்து 3 சொல் 4 தானம் 5 பால் 6 உண்டி 7 வருணம் 8 கதி 9 நாள் 10 கணம்

  எடுத்துக்காட்டாக செய்யுளின் முதல் சொல் மங்கலமாக இருக்க வேண்டும் என்பது மங்கலப் பொருத்தம் ஆகும். பாட்டியல் நூல்கள் இதை வற்புறுத்திக் கூறுகின்றன. மங்கலச் சொற்கள் இவை என்ற ஒரு பட்டியலும் பாட்டியல் நூல்களில் தரப்பட்டுள்ளன. சீர், உலகம், மணி, பொன், பூ, திங்கள், கடல், மலை முதலியன மங்கலச் சொற்கள் ஆகும். இவற்றை முதல் சொல்லாகக் கொண்டே நூல் இயற்ற வேண்டும் என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 18:19:15(இந்திய நேரம்)