தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3:4-போலி

 • 3.4 போலி

  சொற்களில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு ஓர் எழுத்து வருவதைப் போலி என்று கூறுவர். அப்படி வேறு எழுத்து வரும்போது பொருள் மாறாமல் இருக்க வேண்டும். போலி எழுத்துகள் சொல்லின் முதலிலும், இடையிலும், இறுதியிலும் வரும். இவற்றை முறையே முதற்போலி, இடைப்போலி, இறுதிப்போலி என்று கூறுவர்.

  3.4.1 முதற்போலி

  ஒரு சொல்லின் முதல் எழுத்து, போலியாக வருவதை முதற்போலி என்று கூறுவர்.

  பசல்    பைசல்
  மயல்   மையல்
  மஞ்சு   மைஞ்சு

  இந்தச் சொற்களில் அகரம் வரவேண்டிய இடங்களில் ஐகாரம் வந்துள்ளது.

  3.4.2 இடைப்போலி

  சொல்லுக்கு இடையில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வருவது இடைப்போலி ஆகும்.

  அரயர்     அரையர்
  இலஞ்சி   இலைஞ்சி

  இந்தச் சொற்களில் அகரம் வரவேண்டிய இடங்களில் ஐகாரம் வந்துள்ளது. இவை சொல்லுக்கு இடையில் வந்துள்ளதால் இடைப்போலி எனப்படும்.

  3.4.3 இறுதிப்போலி

  சொல்லின் இறுதியில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வருவது இறுதிப் போலி எனப்படும். இதைக் கடைப் போலி எனவும் கூறுவர்.

  முகம்
  முகன்
  அகம்
  அகன்
  நலம்
  நலன்
  நிலம்
  நிலன்
  சாம்பல்
  சாம்பர்
  பந்தல்
  பந்தர்

  இந்தச் சொற்களின் இறுதியில் மகர ஒற்று வரவேண்டிய இடத்தில் னகர ஒற்றும், லகர ஒற்று வரவேண்டிய இடத்தில் ரகர ஒற்றும் வந்துள்ளன. இவ்வாறு வருவது இறுதிப் போலி எனப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2017 12:17:33(இந்திய நேரம்)