Primary tabs
-
2.8 உயிர்எழுத்துகள் பிறப்பு - இலக்கண நூல்களும் மொழியியலும்.
எழுத்துகளின் பொதுவான பிறப்பியல் குறித்து இலக்கண நூல்களும் மொழியியலாரும் தெரிவித்த கருத்துகளை முந்தைய பாடத்தில் தெரிந்து கொண்டீர்கள். இந்தப் பாடத்தில் உயிர்எழுத்துகளின் பிறப்புப் பற்றி இலக்கண நூல்கள் தெரிவித்த கருத்துகள் மொழியியல் கருத்துகளோடு ஒத்திருக்கும் தன்மையைக் காணலாம்.
(1)தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இரு இலக்கண ஆசிரியர்களும் தமிழில் உள்ள உயிர்எழுத்துகள் பன்னிரண்டை மூன்று பிரிவாகப் பிரித்துள்ளனர்.
அவை,
(1).அ, ஆ,(2).இ, ஈ, எ, ஏ, ஐ,(3).உ, ஊ, ஒ, ஓ, ஒள - ஆகியன.மொழிநூல் அறிஞர்களும் தமிழிலுள்ள உயிர்ஒலிகளை மேற்கண்ட பகுப்பின்படியே பிரித்துக் காட்டியுள்ளனர். மொழிநூல் அறிஞர்கள் உயிர்எழுத்துகளை பின்வரும் பகுப்பின்படி பிரிக்கின்றனர்.
அவை,
(1)முன் அண்ண உயிர்(2)இடை அண்ண உயிர்(3)பின் அண்ண உயிர் என்பன.இந்த மூன்று பகுப்பின் கீழ், தமிழில் காணப்படும் உயிர்எழுத்துகளை அமைத்துக் காட்டுகின்றனர். அவ்வாறு அமைக்குமிடத்து,
அவை,
(1)முன் அண்ண உயிர்கள் : இ, ஈ, எ, ஏ(2)இடை அண்ண உயிர்கள் : அ, ஆ(3)பின் அண்ண உயிர்கள் : உ, ஊ, ஒ, ஓஎன்று வருவதைக் காணலாம். எனவே, தமிழ் இலக்கண நூல்கள், மொழியை, மொழிநூல் அறிஞர்கள் காணும் அறிவியல் நோக்கில் கண்டு ஆய்ந்துள்ளன என்பதையும் நாம் இங்குத் தெரிந்து கொள்ளலாம்.
மேலே கண்ட மூன்று பகுப்பில் எதிலும் ‘ஐ, ஒள’ ஆகிய இரண்டு உயிர்எழுத்துகளும் இடம் பெறவில்லை என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். தமிழ் இலக்கண நூல்கள் உயிர்எழுத்துகள் பன்னிரண்டு என்று குறிப்பிட்டாலும், மொழிநூல் அறிஞர்கள் உயிர்ஒலிகளைப் பத்து என்றே வகுத்துள்ளனர்.
‘ஐ, ஒள’ ஆகியவை தனியொலிகள் அல்ல என்பது மொழிநூலார் கருத்து; ஐ என்பது அகரமும், யகர மெய்யும் சேர்ந்த கூட்டொலி; ஒள என்பது அகரமும் வகர மெய்யும் இணைந்த கூட்டொலி என்று மொழியியல் விளக்குகின்றது. எனவே ‘கூட்டொலிகள்’ என்று தாம் கருதுகின்ற ஐ, ஒள ஆகிய இரண்டையும் தவிர்த்துவிட்டு உயிர்ஒலிகள் பத்து என்று மட்டும் மொழியியலார் தெரிவிக்கின்றனர்.
‘ஐ’ காரத்தைத் தொல்காப்பியர் உயிர்எழுத்தாகக் கூறியிருப்பினும் ஒலி அமைப்பினை விளக்குமிடத்து அது ‘கூட்டொலி’ என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்.
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ‘ஐ’ யென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் (எழுத்து. 56)என்னும் தொல்காப்பிய நூற்பாவில், அகர உயிர் யகர மெய்யுடன் இணைந்து ஐ காரம் தோன்றுகிறது என்று விளக்குகின்றார். எனவே பிற்காலத்தில் மொழிநூல் அறிஞர்கள் ஆய்ந்து கண்ட ‘கூட்டொலி’ பற்றிய கருத்தினைத் தொல்காப்பியர் எண்ணிப் பார்த்து விளக்க முற்பட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.