தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

    தமிழ் மொழியில் உள்ள ஐந்து இலக்கணங்களில் முதலாவது எழுத்து இலக்கணம் ஆகும். இதனைப் பற்றி ஏற்கெனவே படித்துள்ளோம். இனியும் தொடர்ந்து படிக்க இருக்கிறோம். எழுத்துகளின் வகை, எண்ணிக்கை, பெயர், மாத்திரை பற்றியும், மொழிக்கு முதலிலும், இறுதியிலும், இடையிலும் வரும் எழுத்துகள் பற்றியும், போலி பற்றியும், எழுத்துகளின் பிறப்புப் பற்றியும், எழுத்துகள் பொருள் நோக்கில் சேர்ந்து வரும் பகாப்பதம், பகுபதம் என்னும் இருவகைப் பதங்கள் பற்றியும் இதற்கு முந்தைய பாடங்களில் விரிவாகப் படித்துள்ளோம். இனி இப்பாடத்திலும், இதனைத் தொடர்ந்து வரும் பாடங்களிலும் பகாப்பதம், பகுபதம் என்னும் இருவகைப் பதங்களும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வருகின்ற புணர்ச்சி இலக்கணம் பற்றி விரிவாகப் படிக்க இருக்கிறோம்.

    இந்தப் பாடத்தில் தொல்காப்பியரும், நன்னூலாரும் எழுத்து இலக்கணத்தில் புணர்ச்சிக்கு எந்த அளவு முக்கிய இடம் தந்துள்ளனர் என்பது விளக்கிக் காட்டப்படுகிறது. புணர்ச்சி பற்றி நன்னூலார் தரும் விளக்கம் குறிப்பிடப்படுகிறது. நன்னூலார் புணர்ச்சியை எழுத்துகள், பதங்கள், பொருள், எழுத்து மாற்றம் என்னும் நால்வகை அடிப்படையில் பாகுபடுத்திக் கூறியிருப்பது தக்க சான்றுகளுடன் விளக்கிக் காட்டப்படுகிறது. தமிழில் புணர்ச்சி இலக்கணம் ஓசை இனிமையும், பொருள் நோக்கும் கொண்டது என்னும் கருத்துச் சுட்டிக் காட்டப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2017 15:09:57(இந்திய நேரம்)