தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செய்யுள் விகாரங்கள்

  • 1.7 செய்யுள் விகாரங்கள்

    தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூவகை விகாரங்களும் செய்யுள் வழக்கிலும், உலக வழக்கிலும் (பேச்சு வழக்கிலும்) ஒருங்கே வரும். இவை அல்லாமல் செய்யுளில் மட்டுமே வரும் விகாரங்களைப் பற்றியும் நன்னூலார் குறிப்பிடுகிறார். அவற்றைப் பற்றி இனிக் காண்போம்.

    செய்யுளில் அசை, சீர், தளை, அடி, தொடை முதலியவற்றின் இலக்கணம் நோக்கிச் சில இடங்களில் சொற்கள் விகாரப்படுவது உண்டு. இவ்விகாரங்கள் செய்யுள் இலக்கணத்தை நிறைவு செய்தற்பொருட்டு வருவதால் செய்யுள் விகாரங்கள் எனப்பட்டன.

    செய்யுள் விகாரங்கள் மொத்தம் ஒன்பது வகைப்படும். அவை வலித்தல் விகாரம், மெலித்தல் விகாரம், நீட்டல் விகாரம், குறுக்கல் விகாரம், விரித்தல் விகாரம், தொகுத்தல் விகாரம், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்பனவாம்.

    வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல்,
    விரித்தல், தொகுத்தல் வரும்செய்யுள் வேண்டுழி (நன்னூல், 155)

    ஒருமொழி மூவழிக் குறைதலும் அனைத்தே (நன்னூல், 156)

    (மூவழி = சொல்லின் முதல், இடை, கடை என்ற மூன்று இடத்திலும்)

    • வலித்தல் விகாரம்

    மெல்லின எழுத்தை வல்லின எழுத்து ஆக்குதல்.

    சான்று :

    சிலப்பதிகாரம்

    இதில் சிலம்பு என்பதில் உள்ள ம் என்ற மெல்லின எழுத்து ப் என்ற வல்லின எழுத்தாகியது.

    • மெலித்தல் விகாரம்

    வல்லின எழுத்தை மெல்லின எழுத்து ஆக்குதல்.

    சான்று:

    தண்டையின் இனக்கிளி கடிவோள்

    (தினைப்புனத்தைக் காவல் காக்கும் தலைவி, தினைக்கதிர்களை உண்ணவரும் கிளிகளை, தென்னை, பனை ஆகியவற்றின் மட்டையை மூன்று அல்லது நான்காகப் பிளந்து செய்த தட்டை என்ற கருவியை அடித்து ஒலி எழுப்பி விரட்டுவாள்.)

    இதில் தட்டை என்பது தண்டை என்றாகியது. ட் என்ற வல்லின எழுத்து ண் என்ற மெல்லின எழுத்தாகியது.

    • நீட்டல் விகாரம்

    குற்றெழுத்தை நெட்டெழுத்து ஆக்குதல்.

    சான்று:

    ஈசன் எந்தை இணையடி நீழலே

    இதில் நிழல் என வரவேண்டியது, நீழல் என்று நீண்டது.

    • குறுக்கல் விகாரம்
      • நெட்டெழுத்தைக் குற்றெழுத்து ஆக்குதல்.

        சான்று:

        ..............................................................................யானை
        எருத்தத்து இருந்த இலங்கிலைவேல் தென்னன்
        திருத்தார் நன்றென்றேன் தியேன்

        (யானையின் பிடரியில் வீற்றிருந்த ஒளி வீசும் வேலை ஏந்திய பாண்டியன் மார்பில் கிடந்த அழகிய மாலை நன்று என்று சொன்னேன் தீயவளாகிய நான் - இது தலைவி தன் தோழியரிடம் கூறியது.)

        இதில் தீயேன் என வரவேண்டியது தியேன் என்று குறுகியது.

        • விரித்தல் விகாரம்

        ஒரு சொல்லில் இல்லாத எழுத்தை வருவித்தல்.

        சான்று :

        சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே

        (வெதிரின் = மூங்கிலின்)

        இதில் விளையுமே என்று வரவேண்டிய இடத்தில், விளையும்மே என்று மகரமெய் வந்துள்ளது.

        • தொகுத்தல் விகாரம்

        ஒரு சொல்லில் உள்ள எழுத்தை நீக்குதல்.

        சான்று :

        சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே

        சிறிய+இலை என்பதில். இடையில் உள்ள அகர உயிரை (சிறி+(ய்)+இலை-ய் என்பது உடம்படுமெய்) நீக்கியிருப்பதால் தொகுத்தல் விகாரம்.

        • முதற் குறை

        ஒரு சொல்லில் முதல் எழுத்துக் குறைந்து வருவது.

        சான்று :

        மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி

        (தாமரை இதழைப் போன்ற அழகிய சிவந்த சிறிய பாதங்கள்)

        இதில் தாமரை என்ற சொல்லில் முதல் எழுத்துக் குறைந்து வந்துள்ளதால் முதற்குறை.

        • இடைக்குறை

        ஒரு சொல்லில் இடையில் உள்ள எழுத்துக் குறைந்து வருவது.

        சான்று :

        வேதின வெரிநின் ஓதி முதுபோத்து

        (வேதினம் = கருக்கரிவாள்; கருக்கரிவாளைப் போன்ற முதுகினைப் பெற்ற ஓந்தி; வெரிந் = முதுகு முதுபோத்து = முதிய ஆண்.)

        இதில் ஓந்தி (ஓணான்) என்ற சொல்லின் இடையில் உள்ள நகர மெய் குறைந்து வந்துள்ளதால் இடைக்குறை.

        • கடைக்குறை

        ஒரு சொல்லில் இறுதி எழுத்துக் குறைந்து வருவது.

        சான்று:

        நீல் உண் துகிலிகை கடுப்ப

        (நீலம் உண்ட வெண்மையான ஆடையைப் போன்று)

        இதில் நீலம் என்ற சொல்லின் இறுதியில் உள்ள அகர உயிரும், மகர மெய்யும் குறைந்து வந்துள்ளதால் கடைக்குறை.

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 15:55:54(இந்திய நேரம்)