தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.2 இசுலாம்

 • 6.2 இசுலாம்

  Image

  இறைவனுக்கு அடிபணிவதையும், இறைவன் ஒருவனுக்கே எல்லாப் புகழும் உரியன என்பதிலும் இசுலாமியர் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தனர். நபிகள் பெருமான் இசுலாம் மதத்தின் அடிப்படைச் செய்திகளைக் கூறியுள்ளார். இறைவன், வானவர், வேதம், தூதர், இறுதித் தீர்ப்பு ஆகிய ஐந்தின் மீது நம்பிக்கைக் கொள்ளுதல், நன்மை தீமைகளை எந்நிலையிலும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய ஆறும் இசுலாம் மதத்தின் அடிப்படைச் செய்திகளாகும்.

  இசுலாம் மதத்திற்கு ஐந்து அடிப்படைக் கடமைகள் உள்ளன.

  • இறைவனை ஏற்று முகமதை தூதராகக் கொள்ளுதல் (கலிமா)

  • தொழுகை

  • நோன்பு

  • தான் ஈட்டும் வருவாயில் 2½ விழுக்காடு ஏழை எளியவர்களுக்கு வழங்குதல்.

  • புண்ணியப் பயணம் மேற்கொள்ளுதல்

  ஆகிய ஐந்தும் மேற்கூறிய கடமைகளாகும். மேற்கூறிய ஆறு அடிப்படைச் செய்திகளும், ஐந்து அடிப்படைக் கடமைகளும் இசுலாம் மதத்தில் இன்றியமையாதன. இசுலாம் மதத்தைத் தழுவிய தமிழர், இந்நெறிகளைத் தவறாது கைக்கொண்டனர்.

  6.2.1 தமிழகத்தில் இசுலாம்

  பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே இசுலாம் மதத்தைப் பற்றிய செய்திகள் தமிழகத்தில் அறியப்பட்டிருந்தன. இசுலாம் மார்க்கத்தைப் பற்றிய சிந்தனை பலருக்கு இருந்தது. சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் ஆகிய பாண்டிய அரசர்கள் தங்களுக்குள் போராடிக் கொண்டு வடஇந்தியாவிலிருந்து மாலிக்காபூரை அழைத்தனர். மாலிக்காபூரின் வரவு தமிழகத்தில் இசுலாமிய ஆட்சிக்கு வழி வகுத்தது. இதன் விளைவாக இசுலாம் தமிழகத்தின் தென் மாநிலங்களில் ஓங்கிப் பரவியது. மதுரையை ஆண்ட சுல்தான் இபுராகிம், தமிழர்கள் இசுலாம் மதத்தில் சேரப் பெரிதும் வழி வகுத்தான். காயல்பட்டினம், கீழக்கரை, இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் வணிகம் செய்து கொண்டிருந்த பலர் இசுலாம் மதத்தைத் தழுவினர். படிப்படியாக இசுலாம் தமிழகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சமயமாக மாறியது.

  6.2.2 இசுலாமியத் தமிழர்

  இசுலாம் மதத்தின் உயர் கொள்கைகள் சமத்துவம், சகோதரத்துவம் என்பன. வைதிக சமயத்தின் பல சமயக் கடவுட் கோட்பாடு, பிற சமய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக் கொடுமை ஆகியன தமிழர்களுடைய உள்ளத்தில் வருத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தபோது சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதித்த இசுலாம் தமிழர்களைக் கவர்ந்தது. தமிழர்களே இசுலாமியர்களாக மாறியதால் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஒரு புதிய மதமாக இல்லாமல் ஒரு மார்க்கமாகவே திகழ்ந்தது என்றும் கூறுவர். மஸ்தான் சாகிபு பாடல்களும், தாயுமானவர் பாடல்களும் பொது நிலையிலும் வேறுபாடு காண இயலாது.

  "குணங்குடியான் தனைப் பரவினார்க்குப்
  பவப் பிணி நீங்கும்"

  அதாவது, குணங்குடி மஸ்தான் சாகிபை வழிபட்டவர்க்குப் பிறவியாகிய நோய் நீங்கும் என்று இந்து சமயத்தைச் சார்ந்த சரவணப்பெருமாள் ஐயர் பாடுகின்றார். "குருவினொடு தெய்வம் நீயே" என வேங்கடராய பிள்ளைக் கவிராயர் போற்றுகின்றார். குணங்குடி மஸ்தான் சாகிபு போன்ற இசுலாமியத் தமிழர் பலர் வாழ்ந்த பெருமைக்குரியதாகத் தமிழ்நாடு திகழ்ந்தது.

  6.2.3 இசுலாமியர் பணிகள்

  தமிழில் காப்பியங்கள், மெய்ஞ்ஞான இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பலவகையான படைப்புகளை இசுலாமியர் படைத்தனர். பல புதிய வகையான இலக்கியங்களையும் உருவாக்கினர். இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் எண்ணிக்கையில் பல நூறாகத் திகழ்கின்றன. அரபு, பாரசீக, உருதுச் சொற்கள் தமிழில் நிறையக் கலந்ததற்கு இசுலாமே காரணமாகும். கிஸ்தி, மகசூல், பசலி, பட்டா, மிராசு, தாசில்தார், மனு, கஜானா, ஜமாபந்தி, வாரிசு, நமுனா போன்ற நிர்வாகச் சொற்கள் பல தமிழில் வந்து கலந்ததற்கு இசுலாமிய சமயம் தழுவிய ஆட்சிகள் காரணமாகும்.

  • காப்பியங்கள்

  இசுலாமியக் காப்பியங்களில் மிகவும் புகழ்பெற்றது சீறாப்புராணம்கும். இதனை இயற்றியவர் உமறுப்புலவர் ஆவார். வள்ளல் சீதக்காதியின் தூண்டுதலால் உமறுப்புலவர் இந்தக் காப்பியத்தை இயற்றினார். தமிழிலக்கிய வரலாற்றில் பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரை பெரும் காப்பியங்கள் தோன்றவில்லை. இந்தக் குறையை நீக்கும் வகையில் பதினேழாம் நூற்றாண்டில் சீறாப்புராணம் தோன்றியது. இந்நூல் 5027 பாடல்களைக் கொண்டது. சீறாப்புராணத்தைத் தவிர குத்துபநாயகம், திருக்காரணப்புராணம், தருமணிமாலை ஆகிய காப்பியங்களும் தமிழில் தோன்றின.

  • சிற்றிலக்கியங்கள்

  தமிழில் அந்தாதி, உலா, கலம்பகம், கோவை, மாலை, பரணி, தூது போன்ற சிற்றிலக்கியங்கள் உள்ளன. இந்தச் சிற்றிலக்கியங்களுக்குரிய மரபைத் தழுவி இசுலாமியரும் பலப்பல சிற்றிலக்கியங்களைத் தந்துள்ளனர். மக்காக் கலம்பகம், மதினாக் கலம்பகம், நாகூர்க் கலம்பகம் போன்ற கலம்பகங்களும், நபிநாயகம் பிள்ளைத் தமிழ், முகைதீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் போன்ற பிள்ளைத்தமிழ் நூல்களும், நாகை அந்தாதி, மதீனத்து அந்தாதி, திரு மக்கா திரிபு அந்தாதி ஆகிய அந்தாதிகளும், இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள் படைத்த சிற்றிலக்கியச் செல்வங்களாகும். இவற்றைத் தவிர கிஸ்ஸா, படைப்போர், மசலா, முனா ஜாத்து, நாமா என்ற புதிய வகைச் சிற்றிலக்கியங்களையும் இசுலாமியத் தமிழர் படைத்தனர். கிஸ்ஸா என்பது கதை சொல்லுதல் என்ற பொருள் கொண்டதாகும். படைப்போர் என்பது வீரப்போர்ப்பாட்டு ஆகும். மசலா என்பது வினா விடை வடிவமான இலக்கியமாகும். முனாஜாத்து என்பது இறைவனோடு இரகசியமாகப் பேசுதல் என்ற பொருள் உடையதாகும். நாமா என்பது இறைவனின் பெருமையைப் பலபடப் பாடுவதாகும்.

  6.2.4 பண்பாட்டு நெறிகள்

  கொள்ளை, களவு, பாலியல் கேடு, கையூட்டு, பொய், புறங்கூறுதல், பொறாமை, செருக்கு, பிறர் உள்ளத்தைப் புண்படுத்துதல், முறைகேடாகப் பொருள் ஈட்டுதல், பிறர் பொருளைக் கவர்தல், அளவுகளில் குறைத்து விற்றல், பண்டங்களைப் பதுக்குதல் ஆகியவற்றைத் தீய ஒழுக்கங்களாக இசுலாம் கருதுகின்றது. தமிழ் அற நூல்களும் இவற்றையெல்லாம் கடிந்து கூறி இருக்கின்றன. பெற்றோரைப் பேணிக் காத்தல், குடும்பப் பொறுப்பை மனைவியே ஏற்றல், ஆணுக்குச் சமமாகப் பெண்ணைக் கருதுதல் போன்றவை நற்குணங்களாக இசுலாம் மதத்தில் எடுத்துரைக்கப்படுகின்றன. இவை பழந்தமிழ் நெறிக்கும் ஒத்தனவாகும். இசுலாம் தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு தமிழ்நாட்டிற்குரிய சடங்குகள், பழக்கவழக்கங்கள் பல இசுலாமிய சமயத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. திருமணத்தில் தாலி கட்டுதல், குத்து விளக்கு ஏற்றுதல், பாட்டன் பெயரைப் பேரனுக்கு இடுதல், சகுனம் பார்த்தல், நல்ல நேரம் பார்த்தல், வாண வேடிக்கை ஆகியன இசுலாமியத் தமிழர்களின் வாழ்வியல் நிகழ்ச்சிகளிலும் இடம் பெற்றன.

  நல்லவை யார் கூறினும், நல்லவை எத்திக்கிலிருந்து வரினும் அவற்றின் மெய்யுணர்ந்து ஏற்கும் பரந்த நோக்கும் விரிந்த பார்வையும் தமிழ்ப் பண்பாட்டுக்கு உரியது. இப்பண்பு இருந்திராவிட்டால் வேற்று நில, வேற்றுநாட்டுச் சமயங்கள் இம்மண்ணில் காலூன்றி இருக்க முடியாது. இச்சமயங்கள் இம்மண்ணில் நிலை கொள்ளவிட்டது மட்டுமன்றி, தம் சமயக் கருத்துகளைப் பற்றியும், தம் சமயப் பெரியோர்களைப் பற்றியும் இம்மண்ணின் மொழியிலேயே இலக்கியங்களைப் படைக்கும் அளவிற்கு, அவற்றிற்கு உரிமையும் வளமையும் சேர்த்துப் பேணியது தமிழ்ப் பண்பாடு.

  எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

  மெய்ப்பொருள் காண்பது அறிவு       குறள்; 365)

  என்று வள்ளுவர் கூறிய அறிவு இலக்கணத்தைப் பின்பற்றி வாழ்ந்த தமிழர் மெய்ப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அதன் வெளிப்பாடு எத்தன்மைத்து ஆயினும், ஏற்றுப் போற்றியவர் என்பது தெளிவு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-10-2017 15:31:54(இந்திய நேரம்)