தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.4 இசுலாம் மதத்தின் தாக்கம்

 • 6.4 இசுலாம் மதத்தின் தாக்கம்

  AudioE

  முன்பே பல மதங்கள் நிலவிய தமிழகத்தில் இசுலாம் என்ற சமயமும் புகுந்தது. ஒவ்வொரு மதமும் பல புதிய கூறுகளைத் தமிழகத்தின் பழைய பண்பாட்டில் கலக்கச் செய்தது; பல புதிய கூறுகளைத் தமிழர் பண்பாட்டிலிருந்து இம்மதங்களும் பெற்றன. இப்படிக் கொள்ளவும் கொடுக்கவும் ஆக அமைந்த ஒரு பண்பாடாக அமைந்தது தமிழர் பண்பாடு. இந்து அரசர்கள் இசுலாமிய சமயத்தைப் புறக்கணிக்கவில்லை. திப்புசுல்தான் இந்துக் கோயில்களுக்கு வழங்கிய மானியங்களைக் காந்தியடிகள் பாராட்டி உள்ளார். அதே போலத் தமிழக அரசர்களும் இசுலாமியப் பள்ளி வாசல்களைப் பாதுகாத்துள்ளனர். பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து இசுலாம் மதத்தின் ஈர்ப்பு தமிழகத்தில் ஏற்பட்டது. கடிகை முத்துப்புலவர் என்பவரிடம் கல்வி பயின்று உமறுப் புலவர் சீறாப்புராணம் பாடினார். பழந்தமிழ்க் காப்பிய நிலையிலேயே சீறாப்புராணத்தின் நாடு, நகர்ப் படலங்கள் இயற்றப் பெற்றுள்ளன. படிக்காசுத் தம்பிரான், நமச்சிவாயப் புலவர் போன்றோர் கீழக்கரையில் வாழ்ந்த மெய்ஞ்ஞானி சதக்கத்துல்லா அப்பாவிடம் நெருக்கமான அன்பு கொண்டிருந்தனர். இவ்வாறு தமிழக வரலாற்றில் இசுலாம் ஒரு நீக்க முடியாத இடத்தைப் பெற்றிருந்தது.

  6.4.1 வியக்கத்தக்க ஒற்றுமைகள்

  இசுலாம் மதத்தின் நுழைவால் தமிழகப் பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடுமையான சாதிப்பிரிவுகளின் கட்டு, வருணாச்சிரமத்தில் ஏற்பட்ட இறுக்கம் ஆகியவை இசுலாம் மதத்தின் நுழைவால் தமிழகத்தில் தளர்ந்தன. இசுலாமிய ஞானிகளாகிய சூஃபிகளுக்கும் தமிழ்ச் சித்தர்களுக்கும் இடையே ஒரு நெருக்கமான ஒற்றுமை காணப்படுகிறது. ஞான நூல்கள் என்ற வகையில் தாயுமானவர், பட்டினத்தார், சிவவாக்கியர் ஆகியோருடைய பாடல்களுக்கும், பீரப்பா, பீர் முகம்மது வலியுல்லா, சின்ன ஆலிம் அப்பா ஆகியோருடைய பாடல்களுக்கும் நிரம்ப வேறுபாடு இல்லை. இராமலிங்கர் போதித்த சமரச ஞான நெறி அவர்களுடைய பாடல்களில் எதிரொலிக்கக் காணலாம்.

  "மஸ்தான் சாகிபின் பாடல்களில் காணப்படும் இந்து சமயக் கோட்பாடுகள், கொள்கைகள், தத்துவங்கள் இவற்றைக் கொண்டு பார்த்தால் மஸ்தான் சாகிபு இசுலாமிய வழி செல்லும் ஒரு சூஃபியா? அல்லது இந்து யோக நெறி செல்லும் ஒரு சித்தரா? அதுவுமின்றேல் சமய சமரசத்தை விரும்பும் சன்மார்க்க வாதியா? என அறிய வேண்டியுள்ளது"

  என அறிஞர் அ.ச. அப்துல் சமது குறிப்பிடுவது நோக்கத்தக்கதாகும்.

  "அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய்
  ஆனந்த பூர்த்தியாய்"

  எனத் தாயுமானவர் பாடுகிறார். இதனையும்,

  "அங்கு இங்கு என ஒண்ணா அகண்ட பரிபூரணமாய்
  எங்கும் நிறைந்த இறையே"

  என்று மஸ்தான் சாகிபு பாடுவதையும் நாம் கருத்தில் கொண்டால் இரு சமய ஞானிகளின் அணுகுமுறையிலும் உள்ள ஒற்றுமை புலனாகும்.

  6.4.2 நல்லிணக்கம்

  செய்குத் தம்பிப் பாவலர்

  இசுலாமும் சைவ வைதிக சமயங்களும் நல்லிணக்கம் பூண்டு தமிழ்ப் பண்பாட்டை வளமைப்படுத்தியுள்ளன. கோட்டாற்றுச் செய்குத் தம்பிப் பாவலர் இராமாயண மகாபாரதங்களை நுணுகிக் கற்றவராக விளங்கியிருக்கிறார். வெள்ளிக்கிழமையில் இசுலாமியர் ஒரு சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம். அப்போது குத்பா என்ற சிறப்புச் சொற்பொழிவு நடத்தப்படும். அதனைத் தமிழில் நடத்தலாமா எனக் கேட்டபோது கல்வத்துநாயகம் அவர்கள் ஏழாவது வானத்திலும் தமிழ் மொழியிலேயேதான் பேசுகிறார்கள் என்று கூறினார்கள்.

  திருமால் துருக்க நாச்சியாரை மணந்து கொண்டார் என்ற கதையும், இந்துக்கள் பலர் நாகூர் தர்க்காவில் நேர்த்திக் கடன் நேர்ந்து கொள்வதும், பள்ளி வாசல்கள் கட்டுவதற்கு இந்துக்கள் நிலம் உதவியதும், தமிழகச் சிற்றூர்களில் மாமன் மைத்துனன் உறவோடு இந்துக்களும் இசுலாமியரும் பழகிக் கொள்வதும், இரு சமயங்களுக்கு இடையே இருந்த நல்லிணக்கத்தைக் காட்டும் எடுத்துக்காட்டுகளாகும்.

  6.4.3 இசுலாமும் இன்பத் தமிழும்

  பழந்தமிழ் மரபுகளை இசுலாம் புறக்கணிக்காமல் பேணியது. காப்பியங்கள் கலம்பகம், அந்தாதி, உலா, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், மாலை போன்ற நூல்களை எல்லாம் மரபு பிறழாமல் பாடிய பெருமை இசுலாமியரையே சாரும். காசிப்புலவர், திருப்புகழ் ஒன்று பாடியுள்ளார்.

  "சித்தர் தடர் துட்டக் குபிரரை
  வெட்டிச்சிறை யிட்டுப் புவிமகள்
  தக்கத்து நெளிக்கர் தகுதகு- திகுதாதோ
  தித்தித்திமி தித்தித் திமிதிமி
  தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு வெனவாடி
  திக்குத்திகு திக்குத் திகுதிகு"

  d00200ad.gif (1750 bytes)

  என்று போர்க்கள வருணனையை அருணகிரிநாதரைப் போலவே பாடக் காணலாம்.

  "அரசியல் இயற்கை நீத்தான்; அன்னையைப் பிதாவை நீத்தான்;
  சரதநண் பினரை நீத்தான்; தன்குலத் தினரை நீத்தான்;
  பரிசனம் எவையும் நீத்தான்;பரிகரி சிவிகை நீத்தான்;
  விரைசெறி குழலி னாள்தன் வேட்கையை நீத்தி லானே;"

  என்று ராஜநாயகக் காப்பியத்தில் வரும் பாடல், கம்பராமாயணத்தில் சீதையிடத்து மட்டும் ஆசையை விட்டுவிடாமல் துன்புற்ற இராவணனைக் குறித்துக் கம்பர் பாடும் பாடலோடு அப்படியே ஒத்துச் செல்வதைப் பார்க்கலாம். பல புதிய வருணனைகள், உவமைகள், அணிநலன்கள் ஆகியன தமிழில் தோன்றுவதற்கு இசுலாம் வழிவகுத்தது.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-10-2017 14:49:27(இந்திய நேரம்)