தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.5 கிறித்துவத் தாக்கம்

 • 6.5 கிறித்துவத் தாக்கம்

  AudioE

  கிறித்துவம் தமிழுக்குச் சேர்த்த வளம் பற்றிப் பார்க்கலாம்.

  6.5.1 புதுமைகள

  தமிழகத்தில் கிறித்துவம் பல புதுமைகளைக் கொண்டு வந்தது. அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. பாதிரியார் குடுமி வைத்துக் கொண்டு மத போதனை செய்ய, தமிழ் மக்கள் குடுமி நீக்கிக் 'கிராப்' வெட்டிக் கொண்டனர். ஐரோப்பிய உடை பலரை அணி செய்தது. நகரப் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொண்டு உதட்டுச் சாயம் பூசிக் கொண்டனர். மதுப்பழக்கம் பலரைத் தொற்றிக் கொண்டது. சிகரட் புகைக்கும் பழக்கம் பரவியது. கிளாரினெட், பாண்டு வாத்தியம் ஆகியவை பல இடங்களில் ஒலித்தன. மேல்நாட்டுக் காய்கறிகள் நம் உணவுப் பட்டியலில் சேர்ந்தன. ஆங்கில ஆண்டு எல்லோருக்கும் பழக்கமாகிவிட்டது.

  ஆங்கில மொழியமைப்பில் தமிழில் உரைநடை எழுதுவோர் பெருகினர். ஆங்கிலத் திறனாய்வு நெறி தமிழ்நூல்களில் புகுந்து அலசியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற நிலை பரவலாகியது. ஆங்கிலம் கலந்து பேசுதல் இயல்பாகியது. இயேசுநாதரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் பலர்க்கு அறிமுகமாயின. ஆண் பெண் சமம் என்ற கருத்துநிலை பரவலாகியது.

  6.5.2 நல்லிணக்கம்

  இந்துக்களும் கிறித்துவர்களும் நல்லிணக்கமாய்த் தமிழ்நாட்டில் வாழ்ந்தனர். கிறித்துவப் பாதிரியார் தங்களை 'ஐயர்' என்று கூறிக் கொண்டனர். எளிய மக்கள் பலர்க்கு அலுவலக வேலை கிடைத்தது. 'மாதா'வின் வழிபாடு பொதுவானதாகக் கருதப்பட்டது. வேளாங்கண்ணி மாதாவுக்கு வேண்டுதல்கள் இந்துக்களாலும் செய்யப்பட்டன. கிறித்துவக் கல்வி நிலையங்களில் இந்துக்கள் பாகுபாடின்றிச் சேர்ந்து படித்தனர். கிறித்துவத் தொண்டு நிறுவனங்கள் தமிழகத்தில் துன்பப்பட்ட பலரை அரவணைத்தன. மிஷின் ஆஸ்பத்திரிகள் செய்த தொண்டு பலரை அடைந்தது. அந்தோணி, மேரியம்மா, சூசை, பாத்திமா போன்ற பெயர்கள் வேறுபாடின்றிப் பலர்க்குத் தெரிந்தவை ஆகின. துரை என்ற பெயர் பெருவழக்குப் பெற்றது. கிறித்துவப் பாதிரியாரும், தமிழ்த் துறவியரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தைப் போதித்தனர்.

  6.5.3 கிறித்துவர் வளர்த்த தமிழ்

  தமிழ் வளர்ச்சியில் கிறித்துவர் பங்கு அளவற்றது. உரைநடை வளர்ச்சியில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டது கிறித்துவர்களாலேயே ஆகும். பைபிள், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. திருக்குறள், புறநானூறு, நாலடியார் ஆகிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலக அரங்கில் அறிமுகமாயின. திராவிட மொழிகளைக் குறித்துச் சிந்தனைகள் தொடங்கின. அறிவியல் ஆராய்ச்சி முறை தமிழில் கால் கொண்டது. அகராதிகளைக் கொண்டு மொழியை அணுகும் முறை தமிழ்நாட்டில் பரவியது. ஒப்பிலக்கிய முயற்சிகள் உருவாயின. தேம்பாவணி போன்ற காப்பியங்களும், திருக்காவலூர்க் கலம்பகம், சுகுணசுந்தரி கதை போன்ற கதைகளும், கீர்த்தனை நூல்களும், பெத்லேகம் குறவஞ்சி போன்ற நூல்களும், இரட்சணிய யாத்ரிகம் போன்ற செய்யுள் படைப்புகளும் தமிழுக்குப் பெருமை சேர்த்தன. மேலை இலக்கியப் பாங்கு தமிழில் குடியேறியது. தமிழ், பல துறைகளில் வளர்வதற்குக் கிறித்துவர் அடித்தளம் அமைத்தனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:57:02(இந்திய நேரம்)