தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.3 கிறித்துவம்

 • 6.3 கிறித்துவம்

  வணிகத்திற்காகத் தமிழகம் வந்த ஐரோப்பியர்கள் இந்தியாவில் தங்கள் மதத்தைப் பரப்பினர். பாதிரிமார் பலர் ஐரோப்பியாவில் இருந்து தமிழகம் வந்தனர். மதத்தைப் பரப்புவதற்குத் தமிழறிவு தேவையாக இருந்தது. பாதிரிமார்கள் தமிழைக் கற்றுப் பேசவும், எழுதவும், நூல்கள் இயற்றவும் தொடங்கினார்கள். தமிழகத்தில் நிலவிய சாதிக் கொடுமையும், வருணாச்சிரமத்தின் கொடும்பிடியும், கீழ்த்தட்டு மக்கள் கிறித்துவராகக் காரணமாயின. கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டும் வேறுபாடின்றி எல்லாருக்கும் வழங்கப்பட்ட நிலையைக் கண்டு தமிழர் பலர் கிறித்துவ சமயத்தைச் சார்ந்தனர். கிறித்துவம் தமிழகம் புகுந்த பிறகு பல கிறித்துவ சமய நூல்கள் அச்சிடப்பட்டன. படிப்பறிவு வளர்ந்தது. உணவு உடை போன்றவற்றில் சில மாற்றங்களைக் கிறித்துவப் பாதிரிமார் செய்து கொண்டது போலவே கிறித்துவம் தழுவிய தமிழரும் தங்கள் உணவிலும் உடையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டனர். பல இடங்களில் கிறித்துவக் கோயில்கள் கட்டப்பட்டன. பள்ளிகள், கல்லூரிகள் பல இச்சமயத்தினரால் உருவாக்கப்பட்டன.

  6.3.1 தமிழகத்தில் கிறித்துவம்

  தமிழ்நாட்டில் நுழைந்த கிறித்துவம் தமிழில் பலப்பல புதுமைகளைக் கொணர்ந்தது. தமிழ் நூல்களை அச்சிடுதல், செய்தித்தாள் வெளியிடுதல், ஒப்பிலக்கண ஆராய்ச்சி, அறிவியல் நூல்களைத் தமிழில் ஆக்குதல், பயண நூல்கள் படைத்தல் போன்ற பல புதுமைகளுக்குக் கிறித்துவர்களே அடிப்படை வகுத்தனர். ராபர்ட் டி நொபிலி என்ற இத்தாலியப் பாதிரியார் தம்முடைய பெயரைத் தத்துவ போதக சுவாமி என்று மாற்றிக் கொண்டார். இவர் சந்தனம் அணிதல், பூணூல் போட்டுக் கொள்ளுதல், குடுமி வைத்துக் கொள்ளுதல் போன்ற இந்து ஐயர்களுக்கு உள்ள பழக்கங்களை எல்லாம் கடைப்பிடித்தார். இவர் எழுதிய நூல்களில் தமிழ் - போர்ச்சுகீச அகராதி என்ற நூல் ஒன்று ஆகும்.

  வீரமாமுனிவர்

  இத்தாலியில் பிறந்த மற்றொருவர் சி.ஜெ. பெஸ்கி என்பவர். இவர் தமிழகம் வந்து வீரமாமுனிவர் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். இவரே தேம்பாவணி என்ற புகழ்மிக்க கிறித்துவத் தமிழ்க் காப்பியத்தைப் படைத்துத் தந்தவர். இவர்களைப் போன்ற பலரால் தமிழகத்தில் கிறித்துவம் தழைக்கத் தொடங்கியது. இரண்டு நூற்றாண்டுக் காலத்தில் பல கிறித்துவத் திருத்தலங்கள் தமிழ்நாட்டில் நிலை பெற்றன. இதோ நாகைக் கடற்கரையில் அமைந்துள்ள வேளாங்கண்ணித் திருக்கோயிலைக் காணுங்கள்!

  Velankanni
  வேளாங்கண்ணி
  திருக்கோயில்

  பல சமயத்தவரும் வந்து வழிபடும் இதன் திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். இதே போல் பூண்டி மாதா கோயில் விழாக் கோலம் கொண்டு விளங்கும் காட்சியும் பலரைக் கவர்வது ஆகும். தமிழகத்தில் வேளாங்கண்ணி, பூண்டி, தரங்கம்பாடி ஆகிய வழிபாட்டிடங்கள் இன்று கிறித்துவ சமயப் பண்பாட்டின் சின்னங்களாகத் திகழ்கின்றன.

  6.3.2 கிறித்துவத் தமிழர்

  தமிழ்நாட்டுக் கிறித்துவர்களில் அந்தோணிக் குட்டி அண்ணாவியார், அரிகிருஷ்ண பிள்ளை, கனகசபைப்புலவர், குமாரகுலசிங்க முதலியார், சாமிநாத பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர். இவர்களில் வேதநாயகம் பிள்ளை தமிழில் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர். தமிழ் உரைநடையின் வளர்ச்சிக்கு இவர் செய்த தொண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது. இவர் எழுதிய சர்வ சமய சமரசக் கீர்த்தனை சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகும். ஜான் பனியன் எழுதிய Pilgrims Progress என்னும் நூலைத் தழுவி, கிருஷ்ண பிள்ளை இரட்சணிய யாத்திரிகம் என்ற சிறந்த காப்பியத்தைப் படைத்தார். குறிப்பிடத்தக்க மற்றொருவர் வேதநாயக சாஸ்திரி ஆவார். இவர் பாடிய நூல்களில் பெத்தலேகம் குறவஞ்சி மிகச் சிறந்த குறவஞ்சி நூலாகும். தமிழ்நாட்டுக் கிறித்துவர்கள் பல வகையிலும் தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர்கள் ஆவர். நாவல், சிறுகதை, நாடகம் என்ற மூன்று துறைகளிலும் இவர்களின் பணிகள் தொடர்கின்றன.

  6.3.3 மிகச் சிறந்த பணிகள்

  தமிழில் எ, ஏ என்ற இரு எழுத்துகளுக்கும் ஒ, ஓ என்ற இரு எழுத்துகளுக்கும் வரிவடிவில் பெரிய வேறுபாடு இல்லாமல் இருந்தது. பல நேரங்களில் அவற்றைப் படிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனை நீக்க வீரமாமுனிவரே முதலில் வழிவகுத்தார். ஏ, ஓ என்ற புதிய எழுத்து வடிவங்களை இவர் உருவாக்கினார்.

  d00206po
  போப் ஐயர்

  இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த போப் ஐயர் திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலக மக்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தினார். அயர்லாந்தில் இருந்து வந்த கால்டுவெல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய திராவிட மொழிகளை ஆராய்ந்து அவற்றை ஓர் இன மொழிகள் என உலகத்திற்கு முதலில் அறிவித்தார். ஐரோப்பிய அறிஞர்களாலேயே தமிழ் அகராதிகள் முதலில் உருவாகத் தொடங்கின. நாட்டுப் பாடல்களையும் பழமொழிகளையும் தொகுத்த பணியும் ஐரோப்பியர் ஆற்றியதே ஆகும்.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - I

  1. தமிழகம் வந்த புதிய இரு மார்க்கங்கள் எவை?

  2. இசுலாம் என்பதன் பொருள் யாது?

  3. தமிழகத்தில் இசுலாம் எப்போது நுழைந்தது?

  4. இசுலாமியக் காப்பியங்களில் குறிப்பிடத்தக்கது எது?

  5. இசுலாமியச் சிற்றிலக்கியக்களில் புதிய வகைச் சிற்றிலக்கியங்கள் யாவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-10-2017 15:57:31(இந்திய நேரம்)