தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்-6.4 இழப்பும் ஆக்கமும்

  • 6.4 இழப்பும் ஆக்கமும்

    Audio Button

    கோவலன் மனைவியை விட்டுப் பிரிந்து திரிந்தான்; ஊரெங்கும் உலாவினான். மாதவியைச் சார்ந்து மயங்கினான். உதயகுமரன் மணிமேகலையைக் கவர்ந்து கொள்ள அலைந்தான். சாதுவன் சூதாடிப் பொருளையெல்லாம் தோற்றான். இவையெல்லாம் பழந்தமிழ் நாட்டில் நடக்கவில்லையா? நடந்தன. ஆனால் இவர்கள் ஒரு நிலையில் திருந்தினர். இனி இவ்வாறு வாழக் கூடாது எனக் கருதினர். இன்றைய சமூகத்தில் திருந்துதல் குறைவு; திருத்தும் சாதனங்களும் குறைவு. மேலே கழிந்தன என்று சொன்னோமே; அவையெல்லாம் இழப்புகள்.

    தமிழன் இழந்தவற்றுள் பெரும் வருத்தம் தருவது எது? அவன் மெல்ல மெல்லத் தமிழன் என்ற அடையாளத்தை மறந்ததுதான்! அவனுடைய வாழ்க்கையிலிருந்து பல கட்டங்களில் தமிழ் விலக்கி வைக்கப்பட்டிருப்பதுதான். பல மொழிப் பண்டிதனாக அவன் மாறிவிட்டானா? அப்படி ஒன்றும் இல்லை!

    வணக்கம் பலமுறை சொன்னேன் தமிழ்மகள் கண்ணே!


    என்ற திரைப்படப் பாடல் நீங்கள் கேட்க வில்லையா? எத்தனை பேர் வணக்கம் கூறக் கேட்கிறோம். குட் மார்னிங் என்பது எவ்வளவு இயல்பாக வருகின்றது! சீனர்கள் தங்கள் மொழியை இழக்கவில்லை; பிரெஞ்சுக்காரர் தம் மொழியை இழக்கவில்லை. தமிழன் தன் மொழியை இழந்து நிற்கிறான். பண்பாட்டில் ஏற்பட்ட மாபெரும் இழப்பு இது.

    ஆக்கங்களே இல்லையா எனக் கேட்கலாம். ஏன் இல்லை? இதோ, நோக்குங்கள்!

    1. கல்வி நீரோடை போல எல்லார்க்கும் உரியதாகிவிட்டது. நூற்றுக்கு நூறு விழுக்காடு கற்ற சமூகம் உருவாகிவிட்டது.

    2. புதுமைகள் பலப்பல வீட்டிலும் நாட்டிலும் தோன்றியுள்ளன.

    3. மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்நுட்பத் துறைகள் பெருக வளர்ந்து நாட்டு மக்களின் வாழ்க்கை நலன்களைக் கூட்டியிருக்கிறது.

    4. தமிழ்நாடு உலகனைத்தையும் உற்றுப் பார்க்கிறது; உலகெங்கினும் தமிழர்கள் பரந்துள்ளனர்; உலகம் தமிழ்நாட்டை உற்றுப் பார்க்கிறது. திருக்குறளை இசையோடு படிக்கிறது. திருவாசகம் கேட்டு அழுகிறது.

    5. தமிழன் அமெரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறி ஆங்கிலத்தைத் தாய்மொழி போல் ஆங்கிலேயர் வியக்கப் பேசி, ஜப்பானில் கருவிகள் வாங்கி உலகச் சந்தையில் வணிகம் செய்து, வீட்டுக்கு வந்து தன் அம்மா இறந்த செய்தி கேட்டு அழுது கலங்கிக் குழந்தை போலாகிச் சடங்குகளிலும், பழக்கவழக்கங்களிலும்தான் தமிழன் என்பதை நினைந்து வாழ்கிறான்.

    6. குடும்பம் மனைவி, குழந்தை, தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, தாய்மாமன், மைத்துனன் எனத் தலைமுறைகளுக்கு உறவு வலை பின்னிக்கொண்டு வாழ்கிறான்.

    7. விமானத்தில் பறக்கும்போது வயது மிகுந்து வருதல் உணர்ந்து பட்டினத்தார் பாடலை மெல்ல மனம் அசை போட மூதாதையர்கள் வாழ்ந்த சுவட்டை மறக்காமல் பற்றிக் கொள்கிறான்.

    இப்படி எத்தனையோ? தமிழனுடைய தாய் பாசத்தையும், தங்கை பாசத்தையும் மையமாக வைத்து எத்தனையோ திரைப்படங்கள் காசு பண்ணிவிட வில்லையா?



புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:08:07(இந்திய நேரம்)