தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D01121-1.0 பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை
     

    தமிழுலகிற்குக் கிடைத்த பழமையான முழுமையான இலக்கியம் சங்க இலக்கியம் ஆகும். சங்க இலக்கியம் என்ற தொகுப்பில் பாட்டும் தொகையும் எனப் பதினெட்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன. இவை மேல்கணக்கு என்றும் குறிக்கப்படும். நெடும்பாடல்கள் பத்து பத்துப்பாட்டு எனவும், குறும்பாடல்கள் எட்டு நூல்களாகத் தொகுக்கப்பட்டு அவை எட்டுத்தொகை எனவும் வழங்கப்பட்டன. பத்துப்பாட்டு நூல்களை,

    முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
    பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
    கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
    பாலை கடாஅத்தொடும் பத்து.

    என்ற பழம்பாடலும், எட்டுத் தொகை நூல்களை,

    நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
    ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
    கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று
    இத்திறத்த எட்டுத் தொகை.

    என்ற பழம்பாடலும் பட்டியலிட்டுள்ளன. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான ஐங்குறுநூற்றின் ஆசிரியர்கள், நூல் அமைப்பு, படைப்பு ஆகியன பற்றி இப்பாடம் எடுத்துரைக்கிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:23:57(இந்திய நேரம்)