தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

D01121-1.5 பாலை

  • 1.5 பாலை

    தலைவன், தலைவியை உடன் கொண்டு தமரை (உறவினரை)ப் பிரிதலும் தலைவியைப் பிரிதலும் என இருவகையான பிரிவு நிகழ்வுகளை ஒழுக்கமாகக் கொண்டது பாலைத்திணை. இத்திணைக்கு முல்லை நிலமோ, குறிஞ்சி நிலமோ தன்னியல்பு அழிந்து உருவாகும் நீர் வறண்ட வெப்ப நிலம் முதற்பொருளாகும். இந்நிலத்தில் வாழும் மக்களும், விலங்குகளும், பறவைகளும், பிறவும் கருப்பொருளாய் இத்திணைப் பாடல்களை நடத்திச் செல்லும்.

    1.5.1 பாடல்கள்
     

    இங்கு, பாலைத்திணைப் பாடல்களைப் பகுப்பு முறையில் காணலாம்.

    • செலவு அழுங்குவித்த பத்து

    பிரிவிற்குரிய காரணங்களில் ஒன்றான பொருளீட்டுதல் பொருட்டு, தலைவன், தலைவியைப் பிரியக் கருதுவான். அங்ஙனம் பிரியக் கருதுபவனைப் பிரியாமல் தோழி தடுப்பாள். இங்ஙனம் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி செலவழுங்குவித்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. செலவு - பிரிவு; அழுங்குவித்தல் - தடுத்தல். இது பாலை ஒழுக்கம்.

    • செலவுப் பத்து

    தலைவன், தலைவியைப் பிரிந்து சென்றமையை மையமாகக் கொண்டுள்ள பத்துப் பாடல்களின் தொகுதி செலவுப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

    • இடைச்சுரத்துப் பத்து

    தலைவியைப் பிரிந்து தலைவன் செல்லும் வழியில் தலைவியின் குணநலன்களையும் அவள் வருந்துவதையும் நினைவுகூர்வான். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி இடைச்சுரத்துப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

    உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை
    அலறுதலை ஓமை அம்கவட்டு ஏறிப்
    புலம்புகொள விளிக்கும் நிலங்காய் கானத்து
    மொழிபெயர் பன்மலை இறப்பினும்
    ஒழிதல் செல்லாது ஒண்டொடி குணனே
    - (321)
    (உலறுதலை = காய்ந்த தலை; இறப்பினும் = கடந்தாலும்; உளிவாய் = உளியைப் போன்ற வாயினை உடைய; அலறுதலை ஓமை = விரிந்த தலையினையுடைய ஓமை மரம்; அம்கவட்டு = அழகிய கிளையில்; புலம்பு = தனிமை; மொழிபெயர் பன்மலை = வேற்றுமொழி மக்கள் வாழும் பல மலைகள்)

    என்ற பாடலில் தலைவன் தலைவியைப் பிரிந்து பல மலைகளைக் கடந்து வந்திருப்பினும் தலைவியின் சிறந்த குணங்கள் மனத்தை விட்டு நீங்காதவையாக இருக்கின்றன என்று நினைக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.

    • தலைவி இரங்கு பத்து

    தலைவன் ஏதேனும் ஒரு காரணம் குறித்துப் பிரிந்து செல்வான். அவன் செல்லும் கொடிய பாதை குறித்துத் தலைவி அஞ்சுவாள். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி தலைவி இரங்கு பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. தலைவன் சென்ற காட்டுநெறி இன்னாதது என்று தலைவி இரங்கும் (அஞ்சும்) செய்தி பாடல் 331இல் இடம் பெற்றுள்ளது.

    • இளவேனிற் பத்து

    இளவேனிற் பருவம் என்பது பாலைத் திணையின் முதற்பொருளில் பெரும்பொழுது. இளவேனில் பருவத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் அந்தக் காலம் வந்தும் அவன் வாராமையால் வருந்திக் கூறுவது பாலையின் உரிப்பொருள். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி இளவேனிற் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. இளவேனிற் காலம் வந்த பொழுதும் அவரோ வாரார் எனத் தலைவி வருந்தும் செய்தி இப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.

    • வரவுரைத்த பத்து

    பலவேறு காரணங்களில் ஒன்று குறித்துப் பிரிந்து சென்ற தலைமகன் மீண்டு வருதலை மையமாகக் கொண்டு அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி வரவுரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. காடு பின்னொழியத் தலைவன் திரும்பி விட்டான் நீ உன் கவலைகளை ஒழிப்பாயாக என்று தோழி, தலைவியிடம் கூறும் செய்தி இடம் பெற்றுள்ளது.

    • முன்னிலைப் பத்து

    தலைவன், தலைவி, தோழி ஆகியோர் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் முன்னிலைப்படுத்திக் கூற்று நிகழ்த்துவர். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி முன்னிலைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

    • மகட்போக்கியவழித் தாய் இரங்கு பத்து

    களவில் புணர்ந்த தலைமகன், தலைவியை மணங்கொள்ள உடன் கொண்டு (அழைத்துச்) செல்வான். அப்போது மகளைப் பிரிந்த தாய் வருந்திப் பேசுவாள். இவ்வகையில் அமைந்த பாடல்களின் தொகுதி மகட்போக்கியவழித் தாய் இரங்கு பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. இப்பகுதியில் தலைவனுடன் தலைவி செல்லும் காட்டு நெறி மழை பொழிந்து இனிதாக வேண்டும் என நற்றாய் வேண்டும் செய்தி இடம் பெற்றுள்ளது.

    • உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

    உடன்போக்கு நிகழ்கையில் தலைவன், தலைவி தங்களுக்குள்ளும் இவர்களிடத்துக் காண்போரும் பிறரும் கூற்றுக்கள் (உரையாடல்) நிகழ்த்துவர். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி உடன்போக்கின்கண் இடைச்சுரத்து உரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

    பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து
    செங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர்
    யார்கொல் அளியர் தாமே வார்சிறைக்
    குறுங்கால் மகன்றில் அன்ன
    உடன்புணர் கொள்கைக் காத லோரே?
    - (381)
    (பைங்காய் நெல்லி = பசிய நெல்லிக்காய்; மிசைந்து = தின்று; மராஅத்த = மரத்தின்; குறுங்கால் = குறுகிய கால்களை உடைய; மகன்றில் = இணைபிரியாத ஒருவகைப் பறவை) அளியர் = இரக்கத்துக்குரியவர்)

    என்ற பாடலில் இடைச்சுரத்தில் தலைவனையும் தலைவியையும், கண்டோர் வியந்து கூறும் செய்தி இடம் பெற்றுள்ளது.

    • மறுதரவுப் பத்து

    உடன்போக்கில் ஈடுபட்ட தலைவனும் தலைவியும் மீண்டு வருதலும் மீண்டு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தலும் உண்டு. இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி மறுதரவுப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

    மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
    அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்
    பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
    பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
    வெஞ்சின விறல்வேல் காளையொடு
    அஞ்சில் ஓதியை வரக்கரைந் தீமே!
    - (391)
    (மறுவில் தூவி = குற்றமற்ற இறகு; கிளை = சுற்றம்; ஆர = உண்ண; பச்சூன் பெய்த பைந்நிண வல்சி = இறைச்சி கலந்த உணவு)

    என்ற பாடலில், உடன்போன தலைவனும் தலைவியும் மீண்டு வர வேண்டும்; அதை அறிவிக்கக் காக்கை கரைய வேண்டும் எனச் செவிலி பராவும் (வேண்டும்) செய்தி இடம் பெற்றுள்ளது. பாலைத் திணைப் பகுப்பில் அமைந்த பத்துப் பெயரமைப்பும் உரிப்பொருளை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன. ஒரு பகுப்பு மட்டும் பெரும்பொழுது ஒன்றால் குறிக்கப்பட்டாலும் அதன் மையம் உரிப்பொருளாகவே அமைந்துள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:24:13(இந்திய நேரம்)