தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.2 மருதம்

  • 1.2 மருதம்
     

    தலைவனின் பரத்தையர் பிரிவை மையமாகக் கொண்டு தலைவி கொள்ளும் ஊடலையும் ஊடல் சார்ந்த நிகழ்வுகளையும் ஒழுக்கமாகக் கொண்டது மருதத்திணை. இத்திணைக்கு வயலும் வயல் சார்ந்த இடங்களும் முதற்பொருள் ஆகும். இப்பகுதி வாழ் மக்களும் விலங்குகளும் பறவைகளும் பிறவும் கருப்பொருளாய் அமைந்து இத்திணைப் பாடல்களை நடத்திச் செல்லும். இங்கு மருதத் திணைப் பாடல்களைப் பகுப்புவழிக் காணலாம்.

    1.2.1 பாடல்கள்
     

    வேட்கைப் பத்து, வேழப் பத்து, களவன் பத்து, தோழிக்கு உரைத்த பத்து, புலவிப் பத்து, தோழி கூற்றுப் பத்து, கிழத்தி கூற்றுப் பத்து, புனலாட்டுப் பத்து, புலவி விராய பத்து, எருமைப் பத்து ஆகிய பத்துப் பகுதிகள் இந்த மருதம் பகுதியில் உள்ளன.

    • வேட்கைப் பத்து

    வேட்கை = விருப்பம், பத்து = பத்துப் பாடல்கள். களவிலோ, கற்பிலோ தலைவியைப் பிரிந்திருந்த தலைமகன் தான் பிரிந்திருந்த காலத்துத் தலைமகள் எவ்வாறு ஆற்றியிருந்தாள் என்பதை அறிய விரும்புவான். அப்போது தோழி, தலைவி விரும்பிய திறத்தையும் (வகையையும்) தான் விரும்பிய திறத்தையும் எடுத்துக் கூறுவாள். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி வேட்கைப் பத்து என அமைக்கப்பட்டுள்ளது.

    வாழி ஆதன், வாழி அவினி
    நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!
    எனவேட் டோளே யாயே; யாமே
    நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
    யாணர் ஊரன் வாழ்க
    பாணனும் வாழ்க! எனவேட் டேமே!
    - (21)

    (வேட்டோள் = விரும்பினாள்; யாய் = தாய்; யாணர் = புது நீர்வரவு ; ஊரன் = ஊரை உடையவன், தலைவன்)

    என்ற பாடல் தலைவி, அரசன் சிறந்து வாழ வேண்டும். நாட்டில் வளம் சிறக்க வேண்டும் என்று விரும்பி வேண்டி வாழ்ந்தாள். தோழி தலைவனின் பரத்தமையை நினைந்து அவன் மீள வரவேண்டும் என்று விரும்பி வேண்டி வாழ்ந்தாள் என்ற செய்தியைத் தருகிறது. இது பரத்தையர் பிரிவு குறித்து அமைந்திருப்பதால் கற்பு வாழ்க்கை, கற்பு என்ற கைகோள் குறித்த பாடலாகிறது.

    • வேழப் பத்து

    மருத நிலத்துக் கருப்பொருள்களில் ஒன்று வேழம் எனக் குறிக்கப்படும் வேழக் கரும்பு. இவ்வேழக் கரும்பு இடம் பெறும் பத்துப் பாடல்களின் தொகுதி வேழப் பத்து என்று குறிக்கப்படுகிறது.

    மனைநடு வயலை வேழம் சுற்றும்
    துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
    நல்லன் என்னும் யாமே;
    அல்லன் என்னும்என் தடமென் தோளே!
    - (11)

    (வயலை = பசலைக்கொடி; வேழம் = வேழக் கரும்பு; சுற்றும் = படரும்)

    என்ற பாடலில் வீட்டில் நட்ட பசலைக்கொடி வெளியே வேழக்கரும்பில் சுற்றிப் படர்வது சுட்டப்பட்டுள்ளது. தலைவன் பரத்தையை நாடிச் சென்றதை இது குறிக்கிறது. இதையே கொடுமை என்று தலைவி குறிப்பிடுகிறாள். என்றாலும் தலைவன் நல்லவன் என்று நாங்கள் கூறுகிறோம்; ஆனால் பிரிவால் மெலிந்துள்ள என் தோள்கள் அவன் நல்லவனல்லன் என்று சுட்டுகின்றன என்று கூறுகிறாள்.

    • களவன் பத்து

    களவன் என்பது மருத நிலத்துக் கருப்பொருள்களில் ஒன்றான நண்டைக் குறிக்கும். நண்டு இடம் பெற்ற பத்துப் பாடல்களின் தொகுதி களவன் பத்து என்று குறிக்கப்படுகிறது. இதனைக் கள்வன் பத்து என்றும் குறிப்பதுண்டு.

    முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
    புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்
    தண்துறை ஊரன் தெளிப்பவும்
    உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய்!
    - (21)

    (முள்ளி = முள்ளிச்செடி; கள்வன் = களவன் = நண்டு; தெளிப்ப = தெளிவுபடுத்த; பசப்பது = மாறுபடுவது; எவன்கொல் = ஏன்)

    என்ற பாடலில் ஆம்பல் தண்டினை அறுக்கும் நண்டு உள்ளுறைக்காக இடம் பெற்றுள்ளது. தலைவன் தனக்குப் பரத்தைத் தொடர்பு இல்லை என்று தெளிவுபடுத்தியும் உன் கண் ஏன் சிவக்கிறது என்று தோழி தலைவியைக் கேட்கிறாள். இவ்வாறே, மருதம் பகுதியில் பிற பத்துக்களும் மருதத் திணைக்கு உரிய செய்திகளை வெளிப்படுத்துகின்றன.

    • தோழிக்கு உரைத்த பத்து

    அக இலக்கியத்தில் இன்றியமையாத இடம் வகிப்பவள் தோழி. தோழியே தலைவிக்கு உற்ற துணையாவாள். தலைவி, தோழியிடம் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கூற்றுகள் (பேச்சு) நிகழ்த்திய பாடல்களின் தொகுதி தோழிக்கு உரைத்த பத்து என்று குறிக்கப்படுகிறது.

    • புலவிப் பத்து

    மருதத்திணைக்குரிய உரிப்பொருள் ஊடல். ஊடலின் வேறு பெயர் புலவி. புலவியை மையமாகக் கொண்டு அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி புலவிப் பத்து என்று வழங்கப்படுகிறது.

    • தோழி கூற்றுப் பத்து

    அகத்திணையில் இரு கைகோளிலும் தோழி கூற்று இன்றியமையாதது ஆகும். தோழி கூற்று அமைந்த பாடல்களே மிகுதி. ஐங்குறுநூற்றில் தோழி கூற்றில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி தோழி கூற்றுப் பத்து என்று குறிக்கப்படுகிறது.

    • கிழத்தி கூற்றுப் பத்து

    தலைவனின் புறத்தொழுக்கம் (பரத்தையர் ஒழுக்கம்) கண்ட தலைவி, அவனோடு புலந்து உரைக்கும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி கிழத்தி கூற்றுப் பத்து என்று குறிக்கப்படுகிறது.

    • புனலாட்டுப் பத்து

    ஆற்று நீரில் விளையாடுதல் என்பது மருத நிலத்துக் கருப்பொருளாகும் விளையாட்டில் ஒன்று. ஆற்று நீரில் விளையாடுதலே புனலாட்டு என்பதாகும். புனலாட்டு இடம் பெறும் பத்துப் பாடல்களின் தொகுதி புலனாட்டுப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

    • புலவி விராய பத்து

    புலவி குறித்துத் தலைவி, தோழி, பரத்தை ஆகியோர் கூறுவதும் வாயில் மறுத்துக் கூறுவதும் விரவி (கலந்து) வரும் பத்துப் பாடல்களின் தொகுதி புலவி விராய பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

    குருகுடைத் துண்ட வெள்ள கட்டியாமை
    அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்
    மலரணி வாயில் பொய்கை ஊரநீ
    என்னை நயந்தனென் என்றி ! நின்
    மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே.
    - (81)

    (குருகு = நாரை; அகடு = வயிறு; யாமை = ஆமை; அல்குமிசை = உண்ணும் உணவு; என்றி = என்றாய்)

    என்ற பாடலில் பரத்தை, தலைவியையும் தலைவனையும் ஒருசேரப் பழிக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.

    • எருமைப் பத்து

    மருத நிலத்தின் கருப்பொருள்களில் ஒன்று எருமை. எருமை இடம் பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி எருமைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

    நெறிமருப்பு எருமை நீல இரும்போத்து
    வெறிமலர்ப் பொய்கை, ஆம்பல் மயக்கும்
    கழனி ஊரன் மகளிவள்
    பழன வெதிரின் கொடிப் பிணையலளே!
    - (91)

    (இரும்போத்து = பெரிய ஆண் விலங்கு; மயக்கும் = சிதைக்கும்)

    என்ற பாடலில் எருமை ஆம்பல் மலரின் நன்மையை நுகராது அதனைச் சிதைப்பது போல, தலைவனின் தன்மையை நினையாமல் ஊர் அல்லல் படுத்தும் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

    மருதத்திணைப் பகுப்பு, வேட்கை, புலவி, புனலாட்டு, புலவி விராயது என நான்கு உரிப்பொருளை மையமாகக் கொண்டும், வேழம், கள்வன், எருமை என மூன்று கருப்பொருள்களை மையமாகக் கொண்டும், கிழவி கூற்று, தோழி கூற்று, தோழிக்கு உரைத்தது என மூன்று இயலை மையமாகக் கொண்டும் பெயர் பெற்றுள்ளது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1

    சங்கத் தொகை நூல்கள் எத்தனை?

    2

    நானூறு என முடியும் சங்க நூல்கள் எவை?

    3

    கபிலருக்குரிய அடை (சிறப்பு) என்ன?

    4

    வேட்கை என்பதன் பொருள் என்ன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2017 11:31:49(இந்திய நேரம்)