Primary tabs
- 2.1 முப்பொருள்
அகத்திணைப் பாடல்களின் அடிப்படை முப்பொருள். அவை முதல், கரு, உரிப்பொருள் என்பனவாகும்.
முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுள் பயின்றவை நாடுங் காலை(பொருள். அகத்திணை இயல் - 3)என்று முப்பொருள் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது. இம்முப்பொருள்கள் ஐங்குறுநூற்றில் பெறும் இடத்தை இனிக் காணலாம்.
• முதற்பொருள்
முதற்பொருள் நிலம், பொழுது என இருவகைப்படும். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என நிலம் ஐந்து ஆகும். நிலத்தின் பெயரே திணைக்கு ஆகி வந்துள்ளதெனக் கூறலாம். பெரும்பொழுது, சிறுபொழுது எனப் பொழுது இரண்டு வகைப்படும். ஓர் ஆண்டின் ஆறு பெரும் பருவங்கள் பெரும் பொழுதாகும். ஒரு நாளின் ஆறு கூறுகள் சிறுபொழுதாகும். கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக் காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம் என்ற ஆறும் பெரும் பொழுதுகளாகும். இவை ஆவணியில் தொடங்கிப் பருவத்திற்கு இருமாதங்கள் வீதம் ஆடியில் முடிவடையும். வைகறை, விடியல், எற்பாடு, நண்பகல், மாலை, யாமம் என்பவை சிறுபொழுதுகள் ஆகும். பத்து நாழிகை / நான்குமணி காலஅளவு கொண்டதாகச் சிறுபொழுது அமையும். இனி ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள முதற் பொருள்களைக் காண்போம்.
ஐங்குறுநூற்றின் முதல் திணை மருதம் ஆகும். மருதத்தை முதலாகக் கொண்டது ஐங்குறுநூறு மட்டுமே. மருதத் திணையின் நிலம் மருத நிலம். அதாவது வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகும். பாடல்களில் இடம்பெறும் நிலம், சில இடங்களில் வெளிப்படையாகவும், சில இடங்களில் பொருள்களைக் கொண்டு அடையாளம் காணும் வகையிலும் இடம் பெறும். கழனி (பாடல் 4, 25, 29.....), செறு (26, 27, 57......), பழனம் (53, 60.....) என்ற சொற்கள் வயலைக் குறிப்பவை ஆகும். இச்சொற்களோடு வயல் (85) என்ற சொல்லும் இடம் பெற்றுள்ளது.
• பொழுது
திணைகளுக்குப் பொழுது வகுத்த தொல்காப்பியம் ‘வைகறை விடியல் மருதம்’ என்று குறிப்பிடுகிறது. சிறுபொழுது மட்டும் வரையறுத்துள்ளதால் பெரும்பொழுது ஆறும் மருதத்திற்கு உரியதாகின்றன. மருதத்திணைப் பாடல்களில் கூதிர் (45), வேனில் (45, 54) ஆகிய பெரும்பொழுதுகள் இடம் பெற்றுள்ளன. சிறுபொழுது உய்த்துணரவே கிடக்கின்றது. சிறு பொழுதைக் குறிக்கும் சொற்கள் இடம் பெறவில்லை என்றே கூறலாம்.
• கருப்பொருள்
திணைக்குரிய கருப்பொருள்களாகச் சிலவற்றைத் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது.
தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப(பொருள். அகத்திணை - 20)என்பது தொல்காப்பிய நூற்பா. தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், பண் என்ற எட்டைத் தொல்காப்பியம் கூற, இளம்பூரணர் அவ்வகை பிறவும் என்பதனால் பூ, நீர் நிலை ஆகியவற்றையும் குறிப்பிடுவார். தொல்காப்பியர் திணை மக்களைத் தனித்துக்கூற, பிற்கால அக இலக்கணங்கள் மக்களைக் கருப்பொருளில் அடக்கிக் கூறுகின்றன.
ஐங்குறுநூற்று மருதத்திணைப் பாடல்களில் ஊரன் (1, 2,... ) எனத் திணை மாந்தரும், உழவர் (3,....) என நில மக்களும், வெண்ணெல் (48, 49, 58....) போன்ற உணவும், மருதம் (31, 70, 74.....) போன்ற மரங்களும், எருமை (91 - 100), நீர்நாய் (63) போன்ற விலங்குகளும், அரிப்பறை (81....) என்ற பறையும், தாமரை (53, 68.....) என்ற பூவும், பொய்கை (34, 41, 44....), ஆறு (45) போன்ற நீர்நிலைகளும் இடம் பெற்றுள்ளன. இவை மருதத் திணைக்கு உரிய கருப்பொருள்கள் என இலக்கண நூல்கள் வரையறுத்தவை ஆகும்.
• உரிப்பொருள்
ஒவ்வொரு திணைக்கும் உரிய ஒழுக்கம் உரிப்பொருள் எனப்படும். இதனை மையமாகக் கொண்டே பாடல்கள் அமையும். ஒவ்வொரு திணைக்கும் உரிய உரிப்பொருளை,
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குஉரிப் பொருளே(பொருள். அகத்திணை - 16)என்று தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது.
மருதத் திணையின் உரிப்பொருள், தலைவன் மீது தலைவி ஊடல் கொள்வதாகும். மேலும் ஊடல் கொள்வதற்கான காரணங்கள் மற்றும் ஊடல் தீர்க்கும் முயற்சிகள் ஆகியனவும் இப்பகுதியைச் சேர்ந்தவையே. புலவிப் பத்து என்று உரிப்பொருள் பெயராலேயே ஒரு பத்தின் தொகுப்பு இத்திணையில் அமைந்துள்ளது.
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர
தஞ்சம் அருளாய் நீயேநின்
நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே.(50)என்ற பாடலில் தலைவன் பரத்தையர் மாட்டுப் பிரிந்து சென்றமையால் தலைவி ஊடியும் வருந்தியும் இருப்பதையும் அதனால் இல்லத்திற்குத் திரும்ப வேண்டும் எனத் தோழி வலியுறுத்துவதையும் காணலாம்.
ஐங்குறுநூற்றின் இரண்டாவது திணை நெய்தல் திணை. இதற்கு நிலம் நெய்தல் நிலம். அதாவது கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் ஆகும். கடல் (101, 105...), பௌவம் (121) என நெய்தல் முதற்பொருளான நிலம் பாடல்களில் இடம் பெற்றுள்ளது.
• பொழுது
நெய்தற்குரிய பொழுதை ‘எற்பாடு நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்’ என்று தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது. சிறுபொழுது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதால் பெரும்பொழுது ஆறும் நெய்தல் திணைக்கு உரியதாகிறது.
பெரும்பொழுதைக் குறிக்கும் சொற்கள் இத்திணைப் பாடல்களில் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. மாலை (197) என்று எற்பாடு - சிறுபொழுது இடம் பெற்றுள்ளது. பலர்மடி பொழுது (104) என்ற சொல் சிறுபொழுதைக் குறிப்பதாக அமைந்துள்ளது. இதற்கு, பலரும் உறங்கும் யாமம் என்றும், பலரும் வருந்துகின்ற பொழுது என்றும் பொருள் கொள்ளலாம். பலரும் வருந்தும் பொழுது என்கின்ற நிலையில் அது நெய்தற்குரியது எனலாம்.
• கருப்பொருள்கள்
சேர்ப்பன் (112, 117), புலம்பன் (120, 133), கொண்கன் (124, 125...) என நெய்தல் திணைத் தலைவன் பாடல்களில் இடம் பெறுகின்றான். பரதவர் (195) என நிலமக்களும், கயல் (111), இறால் (188) என உணவுப் பொருள்களும், புன்னை (103, 110...), முண்டகம் (108, 121..) போன்ற மரங்களும், காக்கை (166) போன்ற பறவைகளும், முத்துவிற்றல் (195) போன்ற தொழில்களும், நெய்தல் (101, 109....) போன்ற பூக்களும், கடல்நீர் (105, 107) போன்ற நீர் ஆதாரங்களும் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. இவை இலக்கணங்கள் வரையறுத்த கருப்பொருள்கள் ஆகும். இவை அல்லாது வேறு திணைக்குரிய கருப்பொருள்களும் இத்திணைப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
ஞாழல், வெள்ளாங்குருகு, சிறுவெண்காக்கை, நெய்தல், வாளை ஆகிய கருப்பொருள்கள் இத்திணைப் பாடல்களின் பகுப்பிலேயே இடம் பெற்றுள்ளன.
• உரிப்பொருள்
களவிலோ கற்பிலோ பிரிந்திருக்கும் தலைவனை, நினைந்து தலைவி வருந்துவதும், அது தொடர்பான நிகழ்வுகளும் நெய்தல் திணையின் உரிப்பொருள் ஆகும்.
தோளும் கூந்தலும் பலபா ராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்
குட்டுவன் தொண்டி அன்ன
எற்கண்டு நயந்துநீ நல்காக் காலே(178)என்ற பாடல், களவில் தலைவியை அடையாது வருந்துகின்ற தலைவன் தன் வருத்தத்தைத் தோழியிடம் முறையிடும் உரிப்பொருளைக் கொண்டு அமைந்துள்ளது.
ஐங்குறுநூற்றில் மூன்றாவதாக இடம் பெற்றிருப்பது குறிஞ்சித் திணை ஆகும். இதற்குரிய முப்பொருள்கள் பற்றி இனிக் காண்போம்.
• முதற்பொருள்
நிலம்
இதற்குரிய நிலம் மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும். ‘சேயோன் மேய மைவரை உலகம்’ எனத் தொல்காப்பியம் குறிப்பிடும். வரை(204, 208,.....), குன்றம் (207, 209, 210), சிலம்பு (211), வெற்பு (214, 231), பெருங்கல் (218), மலை (219) எனப் பல பெயர்களில் குறிஞ்சி நிலம் ஐங்குறுநூற்றுப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது.
பொழுது
இத்திணைக்குரிய பெரும்பொழுது கூதிர்காலம் ஆகும். முன்பனிக்காலமும் இதற்குரிய காலம் என்று தொல்காப்பியர் குறிப்பிடுவார். கூதிர்ப் பெருந்தண்வாடை (252), அற்சிரம் (முன்பனி) (223) எனப் பெரும்பொழுது பாடல்களில் இடம் பெற்றுள்ளது. சிறுபொழுது குறிக்கும் சொற்கள் இடம் பெறவில்லை எனினும் நிகழ்வுகளால் அறியக் கிடக்கின்றது.
• கருப்பொருள்
இத்திணைக்குரிய தெய்வமான முருகன் முருகு (245, 247....), விறல்வேள் (250), கறிவளர் சிலம்பின் கடவுள் (243) என இடம் பெற்றுள்ளான். நாடன் (214, 215....) எனத் திணை மக்கள் இடம் பெற்றுள்ளனர். கானவர் (208, 213), புனவர் (246), கொடிச்சி (260, 298), குறமகள் (285) என நிலமக்கள் இடம் பெற்றுள்ளனர். தினை (207, 230....), ஐவனம் (267, 285), வெதிர்நெல் (278) என உணவுப்பொருள்களும், புலி (216, 218....), யானை (239, 218) போன்ற விலங்குகளும், வேங்கை (208, 217...), சந்தனம் (212, 240), அகில் (212) போன்ற மரங்களும், மயில் (250, 292), கிள்ளை போன்ற பறவைகளும், தேன் எடுத்தல் (214, 216), வள்ளிக்கிழங்கு தோண்டுதல் (208) போன்ற தொழில்களும், காந்தள் (26,.....) போன்ற மலர்களும், சுனைநீர் (225) போன்ற நீர் ஆதாரங்களும் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. இவை தவிர வேறு பொருள்களும் பிறதிணைக் கருப்பொருள்களும் இடம் பெற்றுள்ளன. குறவன், கேழல், குரங்கு, கிள்ளை, மஞ்ஞை ஆகிய கருப்பொருள்கள் பகுப்பிற்குத் துணைநின்று பெயர் பெற்றுள்ளன.
• உரிப்பொருள்
இத்திணைக்குரிய உரிப்பொருள் புணர்தலும் புணர்தல் தொடர்பான முன்பின் நிகழ்வுகளும் ஆகும்.
சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை அன்ன
நலம்பெறு கையின்என் கண்புதைத் தோயே
பாயல் இன்துணை யாகிய பணைத்தோள்
தோகை மாட்சிய மடந்தை
நீயல துளரோஎன் நெஞ்சமர்ந் தோரே?(293)என்ற பாடல் தலைவியைக் கூடுவதற்குப் பகற்பொழுதில், பகற்குறியில் வந்த தலைமகன் பின்னால், அவன் அறியாமல் வந்து அவள் கைகளால் கண்களைப் பொத்தியபோது தலைவன் பேசும் நிகழ்வை உரிப்பொருளாகக் கொண்டு அமைந்துள்ளது. வெறிப்பத்து என உரிப்பொருளால் ஒரு பகுப்பு அமைந்துள்ளது.
ஐங்குறுநூற்றின் நான்காவது திணை பாலைத் திணை ஆகும். இத்திணைப் பாடல்களில் முப்பொருள் அமைந்துள்ள திறத்தை இனிக் காணலாம்.
• கருப்பொருள்
நிலம்
பாலைத் திணைக்கு எனத் தனியாக நிலம் கிடையாது. முல்லை அல்லது குறிஞ்சி தன் இயல்பு அழிந்து, வறண்டு, மிக்குத்துயர் செய்யும் நிலை அடையும் போது அப்பகுதி பாலை என்ற பெயரை ஏற்கும் என்பது சிலப்பதிகாரம். காடு (311), பாலை வெங்காடு (317), அருஞ்சுரம் (301, 303) என, பாலை நிலம் பாடல்களில் இடம் பெற்றுள்ளது.
பொழுது
இத்திணைக்குரிய பெரும்பொழுதுகளாக இளவேனில், முதுவேனில், பின்பனி ஆகியவற்றைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. வேனில் (309, 322, 325) எனவும், எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுது (349) எனவும் பெரும் பொழுது பாடல்களில் இடம் பெற்றுள்ளது. சிறு பொழுது நண்பகல் ஆகும். கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் (322) என்று நண்பகல் இடம் பெற்றுள்ளது. இளவேனிற் பத்து எனப் பெரும்பொழுதால் ஒரு பகுப்பு அமைந்துள்ளது.
• கருப்பொருள்கள்
புலம்பன் (302), குரிசில் (306), விடலை (364) எனத் திணை மக்களும், எயினர் (363, 364), எயிற்றி (364, 360) என நில மக்களும், யானை (304, 314, 327), புலி (307, 316), செந்நாய் (323, 354) போன்ற விலங்குகளும், ஒத்திமரம் (301), இலவம் (324, 338), கடம்பு (331), ஈந்து போன்ற மரங்களும், பருந்து (321), கழுகு (314, 315) எனப் பறவைகளும் இத்திணைப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
• உரிப்பொருள்
பாலைத் திணையின் உரிப்பொருள் பிரிதலும் பிரிதலுக்குக் காரணமான நிகழ்வுகளும் ஆகும். பாலைப்பிரிவு இரு வகைப்படும். (1) தலைவன் தலைமகளைப் பிரிதல், (2) தலைவன் தலைமகளை உடன் அழைத்துக் கொண்டுபோக, அவள் தமரைப் பிரிதல். இரண்டாவது பிரிவை உடன்போக்கு என்பர்.
பொன்செய் பாண்டில் பொலங்கலம் நந்தத்
தேரகல் அல்குல் அவ்வரி வாட
இறந்தோர் மன்ற தாமே பிறங்குமலைப்
புல்லரை ஓமை நீடிய
புலிவழங்கு அதர கானத் தானே(316)என்ற பாடல் தலைவன், தலைவியைப் பிரிந்து பாலைப் பெருவழி சென்ற நிகழ்வைக் கொண்டுள்ளது.
புன்கண் யானையொடு புலிவழங்கு அத்தம்
நயந்த காதலன் புணர்ந்து சென்றனளே
நெடுஞ்சுவர் நல்லில் மருண்ட
இடும்பை உறுவிநின் கடுஞ்சூல் மகளே !(386)என்ற பாடல் தலைவன் தலைவியை உடன் கொண்டு செல்லும் செயலைப் பொருளாகக் கொண்டு அமைந்துள்ளது. பாலைத் திணையில் அமைந்த பத்துப் பகுப்புகளில் எட்டுப் பகுப்புகள் உரிப்பொருளால் பகுக்கப்பட்டுப் பெயரிடப்பட்டவை ஆகும்.
ஐங்குறுநூற்றின் இறுதிப் பகுதி முல்லைத் திணைப் பாடல்களாகும். முல்லைத் திணைப் பாடல்களில் முப்பொருள் அமைந்துள்ள திறத்தை இனிக் காணலாம்.
• முதற்பொருள்
நிலம்
இத்திணைக்குரிய நிலம் முல்லை நிலம். அதாவது காடும் காடு சார்ந்த இடமும் ஆகும். புறவு (405, 406) என முல்லை நிலம் பாடல்களில் பயின்றுள்ளது.
பொழுது
முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது கார்காலம். சிறுபொழுது மாலைக்காலம் ஆகும். பொழுதுகளை வரையறுத்துள்ள தொல்காப்பியத்தின் முதல் நூற்பா ‘காரும் மாலையும் முல்லை’ என்பதாகும். கார் (411, 413...) எனப் பெரும் பொழுது பாடல்களில் பயின்றுள்ளது.
கருவி வானம் கார்சிறந் தார்ப்ப,
பருவம் செய்தன பைங்கொடி முல்லை(476)எனக் கார்காலம் பேசப்படுகிறது. சிறு பொழுதான மாலை, மாலை (421, 445) என்ற சொல்லாலேயே பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘முல்லை மலரும் மாலை (489) எனவும் பேசப்பட்டுள்ளது. இரண்டு பகுப்புகள் பருவத்தை, பெரும்பொழுதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. (கிழவன் பருவங்கண்டு பாராட்டுப் பத்து, பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து)
• கருப்பொருள்
குரிசில் (471, 473, ....) எனத் திணை மாந்தரும், கோவலர் (476) ஆகிய நில மாந்தரும் பாடல்களில் இடம் பெற்றுள்ளனர். மேலும் மான் (401), முயல் (421) ஆகிய விலங்குகளும், கொன்றை (412, 420) போன்ற மரங்களும், புறா (425) போன்ற பறவைகளும், நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை (445) என நிரைமேய்த்தலாகிய தொழிலும், கொன்றை (412, 420), தளவம் (422, 454.....) பிடவம் (412, 461), தோன்றி (420), காயா (412, 420) ஆகிய பூக்களும் முல்லைத் திணைப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
• உரிப்பொருள்
வேந்தன் பொருட்டுத் தலைவன் பிரிவதும், அவன் குறித்துச் சென்ற காலம் (கார்காலம்) வரும் வரை தலைவி ஆற்றியிருப்பதும் இல்லிருத்தல் என்ற பெயரால் உரிப்பொருளாகக் குறிக்கப்படுகிறது.
பிணிவீடு பெறுக, மன்னவன் தொழிலே !
பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை
ஆடுசிறை வண்டு அவிழ்ப்ப,
பாடல் சான்ற ; காண்கம், வாணுதலே(447)என்ற பாடல், வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் அவன் வினை முற்றி மீளும் வேட்கையுடையவனாய்ப் பருவ வரவின்கண் தலைமகளை நினைத்துச் சொல்லியது ஆகும்.
ஒவ்வொரு திணைக்கும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற முப்பொருள்கள் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. இருப்பினும் முதற்பொருளில் பொழுதும், கருப்பொருள்களும் ஒருதிணைக்குரியவை, மற்றொரு திணைப் பாடலில் சில சமயங்களில் இடம் பெறும். இதனைத் திணை மயக்கம் என்பர். இவ்வாறு மயங்கி வந்துள்ளமையை இனிக் காணலாம்.
• கால மயக்கம்
குறிஞ்சித் திணைக்குரிய சிறு பொழுது யாமம் ஆகும். இது
பரியுடை நன்மான் பொங்குளை அன்ன
அடைகரை வேழம் வெண்பூப் பகரும்
தண்டுறை ஊரன் பெண்டிர்
துஞ்சூர் ; யாமத்தும், துயிலறி யலரே(13)என மருதத் திணைப் பாடலில் இடம் பெற்றுள்ளது.
காலைப் பொழுது மருதத் திணைக்கு உரியது. என்று இலக்கணங்கள் கூறுகின்றன. இக்காலைப் பொழுது
அம்ம வாழி தோழி ! நாம்அழ
நீல இருங்கழி நீலம் கூம்பும்
மாலை வந்தன்று மன்ற
காலை அன்ன காலை முந்துறுத்தே(116)(காலை அன்ன = காலனைப் போன்ற; கால் = காற்று, தென்றல்; முந்துறுத்து = முன் இட்டுக் கொண்டு)என்ற நெய்தற் திணைப் பாடலில் பயின்று முதற்பொருளில் காலம் மயங்கிய திணை மயக்கமாகிறது.
• கருப்பொருள் மயக்கம்
முருகன் குறிஞ்சி நிலக் கடவுள். இம் முருகன்,
பல்லிருங் கூந்தல் மெல்லியலோள் வயின்
பிரியாய் ஆயினும் நன்றே ; விரியிணர்க்
காலெறுழ் ஒள்வீ தாஅய
முருகமர் மாமலை பிரிந்தெனப் பிரிமே(308)(முருகு = முருகன்; எறுழ் ஒள்வீ = ஒளிபொருந்திய எறுழ மலர்)என்ற பாலைத் திணைப் பாடலில் இடம் பெற்றுள்ளான். கருப்பொருளின் முதற்பொருளான தெய்வம் மயங்கி வந்துள்ளது. இப்பாடலில் குறிப்பிடத்தக்க வேறு ஒன்றும் உள்ளது.
திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே
நிலனொருங்கு மயங்குதல் இல்லென மொழிப
புலன் நன்குணர்ந்த புலமை யோரே.(பொருள். அகத்திணை. 14)என்பது தொல்காப்பியம். இதன் அடிப்படையில் முதற்பொருளில் காலம்/ பொழுது மட்டுமே மயங்கும். நிலம் மயங்காது. ஆனால் இப்பாடலில் மாமலை எனக் குறிஞ்சி நிலம் பாலையில் மயங்கி வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கருப்பொருள்களில் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் இடம் பெறுபவர் நில மக்கள் ஆவர். கோவலர் என்ற முல்லை வாழ் மக்கள்,
கல்லாக் கோவலர் கோலித் தோண்டிய
ஆனீர்ப் பத்தல் யானை வௌவும்
கல்லதர்க் கவலை செல்லின் மெல்லியல்
புயல்நெடுங் கூந்தல் புலம்பும் ;
வயமான் தோன்றல் வல்லா தீமே(304)(கல்லா = கல்வியறிவில்லாத; கோவலர் = ஆநிரை மேய்ப்போர்; கோலித் தோண்டிய = கோலால் தோண்டிய; பத்தல் = பள்ளம்; வல்லாதீமே = மாட்டேன் என்று சொல்வாயாக)என்ற பாலைத் திணைப் பாடலில் இடம் பெற்றுள்ளனர். இது கருப்பொருள் வழிவந்த திணை மயக்கம்.
முல்லைத் திணைக்குரிய விலங்கினமாகக் கூறப்படும் மான்,
அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பைத்
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலைக் கூவல் கீழ
மான்உண்டு எஞ்சிய கலிழி நீரே(203)(படப்பைத்தேன் = தோட்டத்திலுள்ள தேன்; உவலை = தழை; கூவல் = கிணறு; கீழ = கீழேஉள்ள; கலிழி = கலங்கல் நீர்)என்ற குறிஞ்சித் திணைப் பாடலில் பயின்றுள்ளது. இது மட்டுமன்றிப் பாலைக்குரிய நீர் ஆதாரமான கூவல் (சிறுகேணி) இக்குறிஞ்சித் திணைப் பாடலில் இடம் பெற்றுள்ளது.
இவை போல் பல பாடல்களில் திணை மயக்கம் அமைந்துள்ளது.