Primary tabs
-
2.2 உவமை
அகத்திணையில் இடம் பெறும் உவமைகளை இரண்டாகப் பிரிப்பர். ஒன்று உள்ளுறை உவமம். மற்றொன்று ஏனை உவமம் ஆகும். அகத்திணை மரபாகவே உள்ளுறை உவமம் போற்றப்படுகிறது. அகம் - அகஉணர்வு வெளிப்படையாகப் பேச முடியாதது. வெளிப்படையாகப் பேசமுடியாத இந்த அக உணர்வைக் குறிப்பால் பொருளுணரச் செய்ய உள்ளுறை பெரும்பாலும் பயன்படுகிறது. இவ்வகை உவமைகளில் ‘அதுபோல இது’ என்ற எடுத்துக்காட்டு இருக்காது. உவம உருபுகள் இடம் பெறா.
உள்ளுறுத்து இதனொடு ஒத்துப்பொருள் முடிகென
உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம்.(பொருள். அகத்திணை. 51)என்பது தொல்காப்பியம் .குறிப்பால் பொருள் கொள்ளக் கிடப்பது உள்ளுறை உவமம் என்பது இதன் சுருக்க விளக்கம். தெய்வம் அல்லாத கருப்பொருள்களைக் கொண்டு உள்ளுறை உவமம் அமைக்கப்படும். ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள சில உள்ளுறை உவமைகளைத் திணைக்கு ஒன்றாகக் காண்போம்.
• மருதம்
பரத்தையர் பிரிவு மேற்கொண்டு பின்திருந்தி, திரும்பிய தலைவன், நீவிர் எப்படி வாழ்ந்தீர் எனக் கேட்க, அப்பொழுது தோழி பதிலிறுக்கின்றாள்.
வாழி யாதன், வாழி அவினி
பகைவர் புல்லார்க ! பார்ப்பார் ஓதுக !
எனவேட் டோளே யாயே ; யாமே
பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்
கழனி ஊரன் மார்பு
பழன மாகற்க எனவேட் டேமே.- (4)(முதலிரண்டு வரிகள் வாழ்த்து; வேட்டோள் = விரும்பினாள்; யாய் = தாய்; இங்குத் தலைவியைக் குறித்தது)என்பது பதிலிறுக்கும் பாடல். தலைவி நாட்டு நலனை நினைந்து வாழ்ந்தாள். நான் (தோழி) மலர்ந்து விளங்கும் கரும்பும் விளைந்து சிறக்கும் நெல்லும் உடைய கழனியூரனின் மார்பு எல்லாருக்கும் உரிய வயலாய் ஆகாது ஒழிக என்று வேண்டிக் கொண்டேன் என்பது பாடலின் பொருள்.
‘கழனி ஊரன் மார்பு பழனமாகற்க’ என்பது எல்லாரும் இறங்கும் வயல்போல் எல்லாரும் தழுவும் மார்பாக ஆகக் கூடாது என்ற ஒரு குறிப்பைத் தருகிறது.
பூத்த கரும்பின், காய்த்த நெல்லின் என்பது, கழனிக்கு அடைமொழியாக இல்லாமல், பூத்தாலும் காய்க்காத, பயன்படாத கரும்பு - மகப்பேறு இல்லாத பரத்தை. காய்த்துப் பயன்படும் நெல் - மகப்பேற்றுக்குத் தகுதி உடைய தலைவி ஆகிய செய்திகளைக் குறிப்பால் உள்ளுறையாக உணர்த்தி, இருப்பினும் இவ்விருவரையும் ஒன்றாகக் கருதும் தலைவனின் குணத்தையும் சுட்டுகிறது. இல்லறத்தின் பயன் மகப்பேறு ஆகும். மகப்பேறு இல்லாத பரத்தையால் பயனில்லை என்பதாகப் பாடல் அமைந்துள்ளது.
கழனி, பழனம் ஆகிய மருத முதற்பொருளும், கரும்பு, நெல் ஆகிய மருதக் கருப்பொருளும் இங்கு, உள்ளுறைக்கு உதவின.
• நெய்தல்
அன்னை வாழி வேண்டன்னை உதுக்காண்
ஏர்கொடிப் பாசடும்பு பரிய ஊர்புஇழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள்
பூப்போல் உண்கண் மரீஇய
நோய்க்கு மருந்தாகிய கொண்கன் தேரே-(101)(பாசடும்பு = பசுமையான அடம்பங்கொடி; பரிய = வருந்த; ஊர்பு இழிபு = ஏறியிறங்கி; வந்தன்று = வந்தது; உதுக்காண் = அதோ பார்)என்ற பாடல் நெய்தல் திணையைச் சார்ந்தது. ‘நின்மகளின் நீலநிறம் வாய்ந்த மலரைப் போன்ற மை பூசப் பெற்ற கண்ணில் பரவிய பசலை நோயானது அகல்வதற்குரிய மருந்தான தலைவனின் பெரிய தேர் நீண்ட கொடிகளையுடைய பசுமையான அடம்பங்கொடி சிதையும்படி நெய்தல் கொடிகளையும் சிதைத்துக் கொண்டு வருகிறது’ என்று செவிலியிடம் தோழி கூறும் செய்தி இடம் பெற்றுள்ளது. இது வெளிப்படைப் பொருள்.
ஏர்கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு நெய்தல் மயக்கி வந்தன்று..... கொண்கன் தேரே என்பது தேர்ச்சக்கரத்தின் அடியில் சிக்கி அடம்பங்கொடி அறுபடுவதுபோல் தலைவனின் வரவால் அம்பலும் அலரும் அறுபடும் என்ற உள்ளுறையைத் தருகிறது. இதில் அடம்பங்கொடி, நெய்தல் ஆகிய நெய்தல் திணைக் கருப்பொருள்கள் இடம் பெற்றுள்ளன.
• குறிஞ்சி
சிறுக்கண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு
குறுக்கை இரும்புலி பொரூஉம் நாட !
நனிநா ணுடைமைய மன்ற
பனிப்பயந் தனநீ நயந்தோள் கண்ணே !(266)(பன்றி ஒருத்தல் = ஆண் பன்றி; பொரூஉம் = போரிடும்; நனி = மிகவும்; நாண் உடைமைய(ம்) = நாணம் உடையோம்)என்ற பாடல் குறிஞ்சித் திணை ஆகும். இதில் தோழி, தலைவனிடம், ‘சிறிய கண்களையுடைய ஆண் பன்றியோடு குறுகிய முன் கால்களையுடைய பெரிய புலி போரிடுகின்ற நாடனே ! நீ விரும்பிய இவளுடைய கண்கள் தெளிவாக மிக்க நாணுடையவை. ஆதலால் பசலை கொண்டு நீர் சொரியலாயின’ என்று கூறி, வரைவு கடாஅவும் செய்தி இடம் பெற்றுள்ளது.
இதில் பன்றியோடு புலி போரிடும் நாடு என்பது இயற்கை வருணனை அன்று; உள்ளுறை தருவது ஆகும். தன்னால் எளிதில் வீழ்த்தப்படுவதற்குரிய ஆண் பன்றியோடு இரும்புலி நாணாது பொரும் என்றது அயல்வரைவு வருதல் கண்டும் நாணாது களவே விரும்பி ஒழுகும் தலைவனின் தவற்றைச் சுட்டிக்காட்டுவதாகும். அதன்வழி வரைவு கடாவுவதும் ஆகும். உள்ளுறைக்குக் குறிஞ்சிக் கருப்பொருள்கள் உதவியுள்ளன.
• முல்லை
மாலை வெண்காழ் காவலர் வீச
நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும்
புன்புல நாடன் மடமகள்
நலங்கிளர் பணைத்தோள் விலங்கின செலவே- 421இப்பாடல் முல்லைத் திணைப் பாடலாகும். பல பிரிவுகள் மேற்கொண்ட தலைவன் தற்பொழுது பிரியாதிருக்கும் காதலை, உணர்ந்தோர் சொல்லியதாகப் பாடல் அமைந்துள்ளது.
‘புனத்தைக் காப்பவர் தம் கையில் உள்ள குறுந்தடியை மாலை நேரத்தில் எறிவர். அதனால் நறுமணப் பூக்கள் நிறைந்த காட்டில் மறைந்திருக்கும் முயல்கள் ஓசை கேட்டு ஓடும் புன்புலங்களையுடைய நாடனின் மடப்பம் பொருந்திய தலைவியின் மூங்கில் போன்ற தோள்களே தலைவனின் செயலை, பிரிவைத் தடுத்தன’ என்பது பாடல் தரும் பொருள்.
மாலை வெண்காழ் காவலர் வீச
நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும்.என்பது குறிப்பால் வேறொரு பொருளைத் தந்து நிற்கிறது. காவலர் வறிதே தம் கையில் உள்ள குறுந்தடியை வீசியபோது புதரில் மறைந்திருக்கும் முயல் அஞ்சி ஓடும் என்பது தலைவன் பிரிவை எண்ணிய போதே இல்லத்தில் தங்கிய தலைவியின் மேனி நலம் வாடும்’ என்ற பொருளைத் தந்து நிற்கிறது.
ஐங்குறுநூற்றில் மருதத் திணைப் பாடல்களில் மிக அதிக அளவிலும் முல்லைத் திணைப் பாடல்களில் மிகக் குறைந்த அளவிலும் உள்ளுறை உவமைகள் அமைந்துள்ளன.
உள்ளுறை போன்றே அகப்பாடல்களில் தனிச்சிறப்புடையது இறைச்சி. இதுவும் உள்ளுறை போன்றதே. ‘இறைச்சியில் பிறக்கும் பொருளுமார் உளவே’ (226) என்றும், ‘இறைச்சி தானே பொருள் புறத்ததுவே’ (225) என்றும் தொல்காப்பியம் (பொருள். பொருளியல்) குறிப்பிட்டுள்ளது. ஐங்குறுநூற்றில் இறைச்சிப் பொருள் அமைந்த பாடல் ஒன்றைக் காண்போம்.
அன்னாய் வாழி வேண்டன்னை என்னை
தானும் மலைந்தான் எமக்கும் தழையாயின
பொன்வீ மணியரும் பினவே
என்ன மரங்கொல் அவர்சார லவ்வே- 201(என்னை = என்+ ஐ = என் தலைவன்; மலைந்தான் = அணிந்தான்)இது ஒரு குறிஞ்சித் திணைப் பாடல். தலைவி ஒருத்தி தலைவன் ஒருவனுடன் காதல் கொண்டிருக்கிறாள். இவள் காதலை உணராத பெற்றோர் அவளுக்கு வேறு ஒரு இடத்தில் மணம் பேசுகின்றனர். இந்தச் சூழலில் தனது காதலை மறைமுகமாக வெளிப்படுத்தி வேற்று வரைவைத் தடுக்க, செவிலி கேட்கும்படி, தோழியிடம் கூறும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.
“தோழியே வாழ்க. அந்த நம்பியின் மலைச் சாரலில் உள்ள மணி போல் ஒளிவிடும் பூக்களை உடைய மரங்கள் என்ன மரங்கள் என்று தெரியவில்லை. அவனும் அவற்றின் தளிரையும் பூவையும் சூடிக் கொண்டுள்ளான். எனக்கும் அவை தழை உடை ஆகி இருக்கின்றன” என்று தலைவி தோழியிடம் கூறுவதாக இப்பாடலின் பொருள் அமைந்துள்ளது.
தலைவி தான் உணர்த்த வேண்டிய செய்தியைச் செவிலிக்கு உணர்த்திவிட்டாள். உணர்த்திய செய்தியே இறைச்சிப் பொருள் ஆகும். தலைவி உணர்த்த வந்த பொருள், ‘அன்னையே நான் ஒரு நம்பியைக் காதலித்து விட்டேன். ஆதலின் என்னை மணக்கக் கருதிப் பெண் வேண்டி வரும் புதியவருக்கு எனது தந்தை பெண் கொடுக்காமல் தடுத்து விடுக. நான் (தற்போது) காதலிக்கும் அத்தலைவனுக்கே என்னை மணம் செய்விக்க இப்பொழுதே ஏற்பாடு செய்க’ என்பதாகும். இப்பொருள் தலைவி கூறிய செய்தியாக இருந்தும் அவள் பயன்படுத்திய சொற்களில், மொழியில் வெளிப்படையாகத் தொடர்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் அமையும் செய்தி இறைச்சி என்று போற்றப்படுகிறது.
உள்ளுறை அல்லாத உவமம் ஏனை உவமம் எனப்படுகிறது. ‘ஏனை உவமம் தானுணர் வகைத்தே’ என்று தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது. தான் உணரும் வகையாவது, வண்ணத்தால், வடிவால், பயனால், அல்லது தொழிலால் உவமிக்கப்படும் பொருளோடு எடுத்துக் கூறுதல் என்று இளம்பூரணர் விளக்கம் அளித்துள்ளார். ஆக எல்லாரும் பொருள் உணரும் வகையில் உவமையும் பொருளும் சேர்ந்து இடம்பெறும் உவமை ஏனை உவமம் என்பது தெளிவாகிறது. உவமைகள் இருவகை நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. சொல்ல வந்த கருத்தை விளக்குவதற்காகவும், சொல்லும் பொருளுக்கு அழகு சேர்ப்பதற்காகவும் அவை வருகின்றன. எனவே கருத்து விளக்க உவமைகள், அணி உவமைகள் என்ற பெயரில் ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள சில ஏனை உவமங்களைக் காண்போம்.
• கருத்து விளக்க உவமைகள்
தெரிந்த ஒன்றைக் கொண்டு தெரியாத ஒன்றை விளக்குவதாகக் கருத்து விளக்க உவமைகள் அமையும்.
• குடும்பம்
ஒரு தலைவன் தலைவியைப் பிரிந்து அவளுக்கு எந்த உதவியும் செய்யாமல் இருக்கிறான். இருப்பினும் அவள், அவன் மார்பை நினைந்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தலைவியின் இந்த நிலை, தாய் தங்களைக் கவனிக்காவிடினும் தாயின் முகம் நோக்கி வாழும் வளரும் ஆமைக் குஞ்சுகளின் நிலையால் விளக்கப்படுகிறது.
தீம்பெரும் பொய்கை ஆமை இளம்பார்ப்புத்
தாய்முகம் நோக்கி வளர்ந்திசி னாஅங்கு
அதுவே ஐயநின் மார்பே. ... ... ...- 44என்பது மேற்கூறிய கருத்தை விளக்கும் பாடற்பகுதி.
தலைவனின் இல்லத்திற்குச் சென்று தலைவியின் இல்வாழ்க்கைச் சிறப்புப் பற்றி அறிந்து அதனை நற்றாயிடம் கூறுகிறாள் செவிலி.
இல்லறத்தில் எந்தக் குற்றங்களும் நெருங்காமல் இல்லற தர்மங்களைத் தலைவி மேற்கொண்டு சிறப்பாக வாழ்கிறாள் என்று செவிலி கூற நினைக்கிறாள். காற்றால் அணைக்க முடியாத பெரிய திரிகளை உடைய பாண்டில் என்ற விளக்கை உவமை ஆக்குகிறாள்.
ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல
மனைவிளக் காயினள் மன்ற- 405என்பது மேற்கூறிய செய்தியைத் தரும் பாடற்பகுதி ஆகும்.
தலைவி, தன் கணவனோடும் புதல்வனோடும் வாழும் வாழ்க்கைத் திறத்தை அறிந்த செவிலி அதனை மான் இனத்தோடு உவமித்துச் சொல்கிறாள்.
மறியிடைப் படுத்த மான்பிணை போலப்
புதல்வன் நடுவ ணாக நன்றும்
இனிது மன்றஅவர் கிடக்கை- 401என்பது பாடற்பகுதி. தலைவன், தலைவி, புதல்வன் ஆகிய மூவரும் ஒரே படுக்கையில் இருக்கும் காட்சி மான்பிணை தன் குட்டியோடும் ஆண் மானோடும் இருக்கும் காட்சியால் விளக்கப்பட்டுள்ளது. இந்நிலையின் இனிமை,
புதல்வற் கவைஇய தாய்புற முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
நரம்புளர் முரற்கை போல
இனிதால் அம்ம பண்புமார் உடைத்தே- 402என யாழ், நரம்பு, இசை ஆகியவற்றாலும் விளக்கப்பட்டுள்ளது.
• பிற
குடும்ப நிகழ்வுகளை விளக்குவதற்கு மட்டுமல்லாமல் பிற நிகழ்வுகளை விளக்குவதற்கும் உவமைகள் இந்த அகப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. அது கிள்ளிவளவனுக்கு உரிமையான யானை பகைவரின் மதிலை அழிப்பதைப்போல விரைந்து வந்து கரையை அழிக்கிறது என உவமை அமைந்துள்ளது.
கதிரிலை நெடுவேல் கடுமான் கிள்ளி
மதில்கொல் யானையின் கதழ்பு நெறிவந்த
சிறையழி புதுப்புனல் ஆடுகம்- 78(கதழ்பு = விரைந்து)என்பது பாடல் பகுதி.
மலை நீர் வழிந்து வழுவழுப்பாகக் காட்சியளிக்கிறது. இவ்வழுவழுப்பை அளக்க இரு உவமைகள் இடம் பெற்றுள்ளன.
நிணம்பொதி வழுக்கின் தோன்றும்
மழைதலை வைத்து- 207என்ற பகுதியில் கொழுப்பின் வழுவழுப்பு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன
வயலையம் சிலம்பு- 211என்ற பாடற்பகுதியில் நெய்யும் உளுத்தமாவும் கலந்த கலவையின் வழுவழுப்பு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
குளத்தில் எருமை நீராடிக் கொண்டிருக்கிறது. அது பாதி உடல் நீருக்குள்ளும் பாதி உடல் நீருக்கு வெளியிலும் இருக்கும்படி நீராடுகிறது. இதற்குக் கட்டப்பட்டிருக்கும் சிறு ஓடம் உவமையாக்கப் பட்டுள்ளது.
தண்புன லாடும் தடங்கோட்டு எருமை
திண்பிணி அம்பியின் தோன்றும் ஊர- 98(அம்பி = ஓடம்; திண்பிணி = வலிமையாகக் கட்டப்பட்ட)என்ற பாடற் பகுதி எருமைக்கு ஓடத்தை உவமையாக்கியுள்ளது.
பொருளுக்குச் சிறப்புச் சேர்ப்பதற்காகச் சொல்லப்படும் உவமைகள் அணி உவமைகள் ஆகும்.
தலைவனின் மார்புக்குச் சிறப்புச் சேர்க்க உவமை அமைகிறது. பெருவரை அன்ன திருவிறல் வியன்மார்பு (220), காவிரி மலர்நிலை அன்ன நின் மார்பு (42) என்ற பாடல் பகுதிகளில் வரையும் (மலையும்) காவிரிப் பரப்பும் உவமையாக வந்துள்ளன.
தலைவியின் அழகுக்கு, கொல்லிப் பாவையின் அழகு உவமையாகிப் பாவை அன்ன என் ஆய்கவின் (221) எனவும் அவளின் நெற்றிக்குப் பிறை உவமையாகி,
இலங்கு நிலவின் இளம்பிறை போலக்
காண்குவெம் தில்லஅவள் கவின்பெறு சுடர்நுதல்- 443எனவும் பாடல் பகுதிகள் அமைந்துள்ளன.
உவமையாக வருவதைப் பொருளாக்கி, பொருளாய் வருவதை உவமையாக்கி உரைப்பது என்பது விபரீத உவமை அணி ஆகும்.
எரிமருள் வேங்கை இருந்த தோகை
இழையணி மடந்தையின் தோன்றும்- 294என்ற பாடற்பகுதி, பெண் போல மயில் காட்சி தருகிறது என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. மயில் போலப் பெண் இருக்கிறாள் என்பது மரபு. இம்மரபை மாற்றி இப்பகுதியில் விபரீத உவமை அமைந்துள்ளது.
கொடிச்சி கூந்தல் போலத் தோகை
அஞ்சிறை விரிக்கும்- 300என்ற பாடற்பகுதியில் கூந்தல் போல மயில் தோகை காட்சி தருகிறது. இதுவும் மேற்காட்டிய உவமையே.
உவமையைக் காட்டிலும் பொருளுக்குச் சிறப்புத் தோன்ற உரைப்பது நிந்தையுவமை என்னும் உவமை அணி ஆகும்.
பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்
அஞ்சில் ஓதி அசைநடைக் கொடிச்சி
கண்போல் மலர்தலும் அரிது;இவள்
தன்போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே- 299என்ற பாடற் பகுதியில் வழக்கமாகக் கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும் குவளை மலரைக் காட்டிலும் கண்ணுக்குச் சிறப்புத் தோன்றக் கூறுவதாலும் சாயலுக்கு உவமையாக வரும் மயிலைக் காட்டிலும் தலைவிக்குச் சிறப்புத் தோன்றக் கூறுவதாலும் நிந்தை உவமை அணி ஆயிற்று.