Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
2. வரைபோல் இஞ்சி கூறும் செல்வக் கடுங்கோவின் சிறப்பை எடுத்துரைக்க.
பொன்னோடை, பொன்னரிமாலை என அணிபல பூண்டு எழுகின்ற யானைகளின் பெரிய படையும்; மழைமேகம் திரண்டு வந்தது போலத் தோன்றும் கரிய பெரிய கேடயங்களையும், வேலையும் வாளையும் ஏந்திய வீரரின் பெரும் படையும்; நறுக்கிய பிடரிமயிர் கொண்ட குதிரைப் படையும் என்ற இம்மூன்றும் கொண்ட உனது சேனை பகைவரின் மதிலை நெருங்க வளைத்து மதிலின் புறத்தே தங்கி இருக்கும். அப்போது; நீர் மிகுந்து மதிலை மோதும் அலைகளை உடைய அகழியையும், மலைத்தொடர் போன்ற மதிலையும், பிறரை அழிக்கும் ஆற்றல்மிக்க பெரிய கையையும் உடைய அரசர் உன்னிடம் வந்து, வணங்கிய மொழிகளைக் கூறி உனக்குப் பணிந்து திறை செலுத்தினால், அந்தப் பகைவர் நாடு அழிவு அடையாது. மாறாக, கள் உண்டு மகிழும் வலிமையான கைகள் கொண்ட உழவர்கள்; புல்நிறைந்த அகன்ற இடத்தில் ஆநிரைகளை மிகுதியாக மேயவிடுவர். வயலின் கதிர்களிலிருந்து உதிர்ந்த, களத்தில் தூற்றப்படாத நெற்குவியலைக் காஞ்சி மரத்தின் அடியிலே சேரத் தொகுப்பர். கிடைத்தற்கரிய ஆம்பல் மலரைத் தலையில் சூடுவர். வண்டுகள் சிறகு விரித்துப் பறந்து அந்த ஆம்பல் மலர்களை மொய்க்கும். அவற்றை ஓட்டிப் பாடுவர். இவ்வாறு விரிந்த இடத்தையுடைய அந்தப் பகைவர் நாடுகள் மகிழ்ச்சிப் பாடல்கள் மிக்கனவாக ஆகும். இவ்வாறு கபிலர் செல்வக்கடுங்கோவின் சிறப்பைப் புகழ்கிறார்.