தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

நொச்சிப் படலம்

  • 6.1 நொச்சிப் படலம்

    படலம் என்பது நூலின் உட்பிரிவு. நொச்சித் திணையின் இலக்கணத்தைத் தரும் பகுதி நொச்சிப் படலம் ஆகும்.

    • நொச்சி - குறியீடு

    நொச்சி என்பது ஒருவகைச் செடி. அதனுடைய பூவினை எயில் (மதில்) காக்கும் மறவர் சூடிக் கொள்வர். ஆதலின், எயில்காக்கும் ஒழுக்கத்தை நொச்சித் திணை என நம்மனோர் குறியீடு செய்தனர்.

    • எயில் காத்தல் - பின் நிகழ்வு

    பகை அரசனால் வளைத்துக் கொள்ளப்பட்ட மதிலை, அம் மதிலுக்குரிய மன்னன் பகை அரசனிடமிருந்து காத்துக் கொள்வது எயில் காத்தல் எனப் பெறும். அதனால், எயில் காத்தல் பின் நிகழ்வு. எயில் வளைத்தலாகிய முற்றுகை முன் நிகழ்வு என்பன தெளிவு. பழம் பாடலொன்று,

    . . . . . . . எயில்காத்தல் நொச்சி
    அதுவளைத்தல் ஆகும் உழிஞை.

    என்று கூறியிருப்பதால் நொச்சித் திணை உழிஞைக்குமுன் வைக்கப்பட்டுள்ளது என்று கொள்ளலாம்.

    6.1.1 நொச்சி - பெயர்க்காரணம்

    நொச்சிப் பூவைச் சூடிக்கொண்டு மேற்கொள்ளும் போர் நிகழ்ச்சி ஆதலின் நொச்சி என்னும் பெயரைப் பெற்றது.

    • கொளுப் பொருளும் கொளுவும்

    அம்பினை எய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் துளைகளையுடைய அரணைக் காக்கும் மறவர்கள் சூடிய நொச்சிப் பூவினைப் புகழ்ந்தது நொச்சியாம். பூவினைப் புகழ்ந்தது எனப்பட்டாலும் அதனைச் சூடி எயிலைப் பாதுகாத்தல் நொச்சித் திணை எனக் கொள்ளல் வேண்டும்.

    ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம்
    காப்போர் சூடிய பூப்புகழ்ந் தன்று.

    (ஏ = அம்பு)

    எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    கூரிய நுனியை உடைய வேலினை உடையவர்கள் நொச்சி மறவர்கள். அவர்கள், பாம்பை அணிந்த சிவபெருமானார், தீ உண்ணும் வண்ணம் தமது நெற்றிக் கண்ணால் சினந்த போது, திரிபுரங்களைக் காக்கும் அவுணர் கூட்டம் தம்முள் கூடியதை ஒப்ப, மதிலின் உச்சிமேல் மதிலைக் காப்பதற்காக, நொச்சிப் பூவைச் சூடினார்கள்.

    மதில் காத்தலும், ‘நொச்சி சூடினார்’ என்பதில் பூவைப் புகழ்தலும் அமைகின்றன. அதனால் திணைப் பொருள் பொருந்தி வருதல் தெளிவாகின்றது.

    6.1.2 நொச்சியும் மருதமும்

    உழிஞைத் திணை அகத்திணைகள் ஏழனுள் ஒன்றான மருதத் திணையின் புறன் என்றார் தொல்காப்பியர். உழிஞையின் மறுதலை நொச்சி என்று கருதியதனால் நொச்சித் திணையெனத் தனியொரு திணையைக் கொள்ளவில்லை. ஆகையால், மருதமே நொச்சித் திணைக்கும் புறம் எனக் கொள்ள வேண்டியுள்ளது.

    மருதத்தின் உரிப்பொருள் ஊடல். ஊடல் தோன்றற்குக் காரணம் தலைவனின் பரத்தமை. பரத்தையைக் கண்டு பழகிய பிறகு வீடு திரும்பும் தலைவன், நேரே உள்ளே புகாமல், வீட்டின் புறத்தே காத்துக் கிடக்கின்றான். இவ்வாறே முற்றுகையிடும் உழிஞை வேந்தனும் திறை முதலிய பொருள் காரணமாக நொச்சி வேந்தன் உறையும் அரண்மனையின் புறத்தே முற்றுகை செய்து கிடக்கின்றான். ஆதலால், புறம் எனலாம்.

    தலைவனின் பரத்தமை காரணமாக மாறுபட்டு உள்ளிருக்கும் தலைவி, ஊடல் கொள்வாள். அதுபோல, உள்ளிருக்கும் நொச்சி மன்னன் எயில் காத்தலில் ஈடுபடுவான். ஆகையால், புறம் எனலாம். பிற காரணங்களை மேல் வகுப்புகளில் பயிலலாம்.

    இனி, ஆசிரியர் ஐயனாரிதனார் வழி, நொச்சித் திணை, அதன் துறைகள் என்பவற்றைக் காண்போம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 06-11-2017 18:34:18(இந்திய நேரம்)