தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிறப்பில்லாத வேறு சில எதுகை மோனைகள்

  • 6.3 சிறப்பில்லாத வேறு சில எதுகை மோனைகள்

    எதுகைகளில் உயிர் எதுகை, ஆசு எதுகை, இடையிட்டு எதுகை,இரண்டடி எதுகை, மூன்றாம் எழுத்து ஒன்று எதுகை எனச் சிறப்பில்லாத வேறு ஐந்து வகை எதுகைகளைக்காரிகை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இவற்றுடன் உரையாசிரியர் விட்டிசை வல்லொற்று எதுகை, இரண்டடிமோனை, விட்டிசை மோனை எனும் மூன்று தொடைகளையும் குறிப்பிடுகிறார். இனி, அவற்றைத் தனித்தனியே காண்போம்.

    6.3.1 உயிர்எதுகை

    இரண்டாம் எழுத்து ஒன்றாதாயினும் இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர் ஒன்றி வருவது உயிர் எதுகை எனப்படும்.

    (எ.டு)

    சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
    நீரோர் அன்ன சாயல்
    தீயோர் அன்னவென் உரனவித் தன்றே

                     (குறுந்தொகை, 95)

    மேற்காட்டிய குறுந்தொகை அடிகளில் 'ரோ' என்பதற்கு 'யோ' என்பது எதுகையாகி     வந்துள்ளது. இரண்டாம் எழுத்து ஒன்றவில்லை. ஆனால் மெய்யின்மேல் ஏறிய 'ஓ' எனும் உயிர்மட்டும் ஒன்றி வந்துள்ளது. ஆகவே இது உயிர்எதுகை ஆகும்.

    6.3.2 ஆசு எதுகை

    மாணவர்களே! ஆசு என்னும் சொல்லைச் செய்யுளியலில் அறிந்திருக்கிறீர்கள்.ஆசிடை நேரிசை வெண்பா என்பது நேரிசை வெண்பாவின் ஓர் உட்பிரிவு. அங்கே ஆசு என்பது பற்றாசு (உலோகத் துண்டுகளைப் பற்றவைக்கப் பயன்படுத்தும் பொருள்) போலச் சீர்களை இணைக்கும் ஒன்று அல்லது இரண்டு அசைகளைக் குறிக்கும்.இங்கு நாம் காணவிருக்கும் ஆசு என்பது ய,ர,ல,ழ எனும் இடையின மெய்களைக் குறிக்கும். இந்த மெய்கள் சில சமயம் பேச்சு வழக்கில் ஒலிப்பில்லாமல் மறைவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். காய்கறி > காகறி, கால்கிலோ > காகிலோ, பார்த்து > பாத்து எனும் வழக்குகள் உண்டு. இம்மெய்கள் ஒலிப்பில் மறையக் கூடிய தன்மையைக் கொண்டு, எதுகை அமைப்பில் இவை வரும்போது இவைஇல்லாதது போலக்கருதி, அடுத்து வரும் எழுத்தோடு எதுகை ஒப்புமை கொள்வதுண்டு. இது ஆசு எதுகை எனப்படும்.

    (எ.டு)

    காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்
    பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து.....
                     
    (சீவகசிந்தாமணி, 31)

    (கமுகு = பாக்கு; தொடை = தேனடை; வருக்கை = பலா)

    (எ.டு)

    மாக்கொடி மாலையும் மௌவல் பந்தரும்
    கார்க்கொடி முல்லையும் கலந்து மல்லிகை....
            
    (யாப்பருங்கலக்காரிகை, உரைமேற்கோள்)

    (மௌவல் = மல்லிகை)

    (எ.டு)

    ஆவே றுருவின ஆயினும் ஆபயந்த
    பால்வே றுருவின அல்லவாம் - பால்போல் ......

                      (நாலடியார். 118)

    (ஆ பயந்த = பசு கொடுத்த)

    (எ.டு

    வாழ்கின்றேம் என்று மகிழன்மின் வாழ்நாளும்
    போகின்ற பூளையே போன்று

             (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

    (மகிழன்மின் = மகிழாதீர்)

    மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள். அவற்றில் உண்மையாக எதுகையாய் வருவன முறையே, மா-மா, க்-க், வே-வே, கி-கி என்னும் எழுத்துகளே ஆகும். இடையே வருகின்ற ய், ர், ல், ழ் எனும் ஆசு எழுத்துகளாகிய மெய்கள் ஒலிப்பில்லாதவை போல நிற்கின்றன. எதுகைக்குக் கணக்கில் கொள்ளப்படவில்லை. ஆகவே இவை ஆசு எதுகைகள் அல்லது ஆசிடை எதுகைகள் எனப்படும்.

    6.3.3 இடையிட்டு எதுகை

    அடுத்தடுத்த அடிகளில் அமையாமல் இடையே ஓரடி விட்டு அடுத்த அடியில் எதுகை அமைவது இடையிட்டு எதுகை எனப்படும்.

    (எ.டு)

    தோடார் எல்வளை நெகிழ நாளும்
    நெய்தல் உண்கண் பைதல் கலுழ
    வாடா அவ்வரி புதைஇப் பசலையும்
    வைகல் தோறும் பைபயப் பெருகின ........
             
    (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

    (தோடார் எல்வளை = நன்கு அமைக்கப்பட்ட ஒளிமிக்க வளையல்; நெய்தல் = நெய்தல்பூ ; கலுழ = கலங்க; புதைஇ = நிறைந்து)

    மேற்காட்டிய பாடல் அடிகளில் ஓரடி இடை விட்டு எதுகை அமைந்திருப்பதால் இது இடையிட்டு எதுகை.

    6.3.4 இரண்டடி எதுகை

    முன்னிரண்டடி ஓர் எதுகையாகவும் பின்னிரண்டடி மற்றோர் எதுகையாகவும் வருவது இரண்டடி எதுகை. நான்கடியாக வரும் நேரிசை வெண்பாவில் இத்தகைய அமைப்பைப் பார்த்திருப்பீர்கள். பல அடிகளாய் நீளும் கலிவெண்பாவிலும் இரண்டிரண்டு அடிகளாக எதுகை ஒன்றி வருவதைக் காணலாம்.

    (எ.டு)

    சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி
    முலைவிலங்கிற் றென்று முனிவாள் - மலைவிலங்கு
    தார்மாலை மார்ப தனிமை பொறுக்குமோ
    கார்மாலை கண்கூடும் போது
            
    (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

    மேற்கண்ட வெண்பாவில் முன்னிரண்டடி ஓர் எதுகை, பின்னிரண்டடி வேறோர் எதுகை வந்திருப்பதால் இது இரண்டடி எதுகை.

    6.3.5 இரண்டடி மோனை

    இரண்டடி எதுகை போலவே முன்னிரண்டடி ஒரு மோனை, பின்னிரண்டடி வேறொரு மோனை வருவது இரண்டடி மோனை எனப்படும்.

    (எ.டு)

    ஆகம் கண்டக ராலற்ற ஆடவர்
    ஆகம் கண்டகத் தாலற்ற அன்பினர்
    பாகம் கொண்டு பயோதரம் சேர்த்தினார்
    பாகம் கொண்டு பயோதரம் நண்ணினார்

            (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

    (ஆகம் = மார்பு; கண்டகராலற்ற = வாளால் வெட்டுப்பட்ட ; ஆகம் = உடல்; அகத்தால் அற்ற அன்பினர் = தம் உயிர் மீது அன்பற்ற மனைவியர் ; பயோதரம் = முலை ; பயோதரம் = மேகமண்டலம்; நண்ணினார் = அடைந்தார்)

    மேலே காட்டப்பட்ட பாடலில் முன்னிரண்டடிகளில் ஆ-ஆ என ஒரு மோனையும், பின்னிரண்டடிகளில் பா-பா என வேறொரு மோனையும் வந்திருப்பது காண்க. ஆகவே இது இரண்டடி மோனை.

    6.3.6 மூன்றாம் எழுத்து ஒன்று எதுகை

    இரண்டாம் எழுத்து ஒன்றாமல் மூன்றாம் எழுத்து ஒன்றி வருவது.

    (எ.டு)

    நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
    கினத்தியல்ப தாகும் அறிவு
                               (திருக்குறள், 452)

    (அற்றாகும் = அதுபோல ஆகும்)

    மூன்றாம் எழுத்தாகிய 'த்' ஒன்றி வந்திருப்பதனால் இது மூன்றாம் எழுத்து ஒன்று எதுகை.

    6.3.7 விட்டிசை வல்லொற்று எதுகை

    தனிக்குற்றெழுத்து சீரின் முதலில் விட்டிசைத்து வரும் போது நேரசையாகும் என்பதனைச் சென்ற பாடத்தில் அறிந்திருக்கிறீர்கள். இங்கு விட்டிசைத்து வரும் எழுத்துத் தொடர்பான வேறோர் இலக்கணத்தைக் காண்போம். 'அ' 'ஆ' இரண்டுக்குமிடையே உள்ள ஓசைத் தடையே விட்டிசை என்பது உங்களுக்குத் தெரியும். அஆ, இஈ, உஊ, எஏ, ஒஓ எனும் உயிரெழுத்துகளை அப்படியே பலமுறை உச்சரித்துப் பாருங்கள். தடைக்கு இடையில் விளக்கிச் சொல்ல முடியாத(க் போன்ற) ஒரு வல்லினமெய் இருப்பது போலத் தோன்றுகிறதல்லவா! அதற்கு எழுத்துவடிவம் இல்லை. எழுத்திலக்கணம் இந்தச் சிறு வல்லின ஒலியை ஏற்பதுமில்லை. ஆனால் ஓசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் யாப்பிலக்கணத்தார் 'அஆ' என்பவற்றுக்கிடையே ஒலிக்கும் எழுத்தற்ற வல்லினமெய்யை ஏற்கின்றனர். முதற்சீரில் விட்டிசை வந்து அடுத்த அடியிலோ முந்திய அடியிலோ முதற்சீர் இரண்டாம் எழுத்து வல்லின மெய்யானால் அவ்வல்லின மெய்க்கு விட்டிசை வல்லொற்றை எதுகையாகக் கொள்ளலாம். இதுவே விட்டிசை வல்லொற்று எதுகை எனப்படும்.

    (எ.டு)

    பற்றிப் பலகாலும் பால்மறி உண்ணாமை
    நொ அலையல் நின்ஆட்டை நீ

            (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

    (மறி = குட்டி; உண்ணாமை = உண்ணவிடாமல்; நொஅலையல = துன்புறுத்தாதே)

    மேற்காட்டிய பாடலில் 'ற்' எனும் வல்லின மெய்க்கு 'நொஅ' என்பவற்றுக் கிடையுள்ள விட்டிசை வல்லொற்று எதுகையாக வந்துள்ளது. ஆகவே இது விட்டிசை வல்லொற்று எதுகை.

    6.3.8 விட்டிசை மோனை

    அடிதோறும் அல்லது ஓரடிக்குள் உள்ள சீர்களில் முதல் எழுத்து விட்டிசைத்து வருவது விட்டிசை மோனை.

    (எ.டு)

    அஅவனும் இஇவனும் உஉவனும் கூடியக்கால்
    எஎவனை வெல்லார் இகல்

            (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

    மேற்காட்டிய பாடலில் அ-இ-உ-எ எனும் உயிர்க் குறில்கள் சீரின் முதலில் வந்துள்ளன. இயல்பாக, இலக்கணப்படி, இவை ஒன்றுக்கொன்று மோனையாகக்கூடிய எழுத்துகள் அல்ல. எனினும் விட்டிசைத்து வரும் ஒற்றுமை நோக்கி இவை விட்டிசை மோனை எனப்படுகின்றன.

    6.3.9 இன எழுத்தும் மருட்செந்தொடையும்

    மோனை தொடர்பான ஒரு முக்கிய இலக்கணத்தை இங்குக் காணவிருக்கிறோம். உறுப்பியலில் முதல் எழுத்து ஒன்றி வருவது ('க'வுக்குக் 'க','ம'வுக்கு 'ம' என்பது போல வருவது) மோனை எனக் கற்றோம். இந்தப் பாடத்தின் தொடக்கத்தில் வருக்க, நெடில், இன மோனைகளைப் பற்றிப் படித்தோம்.

    இனமோனை என்பது வல்லினத்துக்கு வல்லினம், மெல்லினத்துக்கு மெல்லினம், இடையினத்துக்கு இடையினம் மோனையாக வருவது, அது கடையாகு மோனையாகும் எனவும் படித்தோம். இங்கு நாம் காணவிருப்பது கவிதைகளில் மிக அதிக அளவில் காணப்படும் மோனையாகும்.இதுவும் இன எழுத்து ஒன்றி வரும் மோனையே. ஆனால் இங்கு இனம் என்பது வல்லின மெல்லின இடையினங்கள் அல்ல. ஓசை அடிப்படையில் ஓர் எழுத்துக்கும் மற்றோர் எழுத்துக்கும் உள்ள ஒற்றுமை கொண்டு அவற்றை ஓரின எழுத்துகளாகக் கொள்வர். அத்தகைய ஓரின எழுத்துகள் ஒன்றுக்கொன்று மோனையாகும்.

    1) உயிர்கள்

    அ ஆ ஐ ஒள
    -
    ஓரினம்
    இ ஈ எ ஏ
    -
    ஓரினம்
    உ ஊ ஒ ஓ
    -
    ஓரினம்

    இவை உயிர்மெய்யாக வரும் போதும் ஓரினமே.எடுத்துக்காட்டாக, ச,சா,சை,சௌ என்பன ஓரினம்.

    2) மெய்கள்

    ஞ்
    -
    ந்
    -
    ஓரினம்
    த்
    -
    வ்
    -
    ஓரினம்
    ம்
    -
    ச்
    -
    ஓரினம்

        மெய்கள் மொழி முதலில் தனித்து வருவதில்லை அல்லவா! ஆகவே இவை உயிர்மெய் வடிவில் ஒன்றுக் கொன்று மோனையாக, வரும். மேலே கண்ட உயிர் இனங்களுடன் இம் மெய் இனங்கள் சேர்ந்து மோனையாகும். எடுத்துக்காட்டாக,

    -
    ந;
    ஞா
    -
    நா
    -
    வ;
    மீ
    -
    வெ
    -
    ச;
    து
    -
    தொ

    என வந்து மோனை அமையும்.

    3) உயிர்மெய்

    யா எனும் உயிர்மெய் இ ஈ எ ஏ என்பனவற்றுடனும் இனமாகும் ;
    அ ஆ ஐ ஒள என்பனவற்றுடனும் இனமாகும்.

    இவ்வாறு வரும் மோனைகளை இனமோனை, கிளைமோனை எனும் பெயர்களால் வழங்குவர். ஏற்கனவே ஓர் இனமோனை (6.1.6) பற்றி நாம் பார்த்துள்ளோம். ஆகவே, தெளிவுக்காக இவற்றைக் கிளைமோனை என்றே வழங்கலாம்.

    (எ.டு)

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
                      (திருக்குறள், 25)
    தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையா

                      (திருக்குறள், 104)
    கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடி

                     (திருக்குறள், 554)
    ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும்

                      (சிலப்பதிகாரம், 15: 217)
    மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

                      (திருக்குறள், 118)
    யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

                      (திருக்குறள், 300)

    மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளில் ஐ - ஆ - அ என ஓரின உயிர்கள் மோனையாக வந்தன. தி - செ; த்-ச் மெய்களும் அவற்றின் மீதேறிய இ-எ உயிர்களும் மோனையாக வந்தன. கூ-கு-கோ; ஊ, உ, ஓ எனும் ஓரின உயிர்கள் மெய்யேறி மோனையாக வந்தன.

    ஞா - நா; ஞ் - ந் மெய்கள் உயிரேறி மோனையாக வந்தன.

    மா வ; ம் - வ் மெய்களும் அவற்றின் மீதேறிய ஆ - அ எனும் ஓரின உயிர்களும் மோனையாக வந்தன.

    யா - இ - எ : யா எனும் உயிர்மெய் இகர இனத்துடன் மோனையாக வந்தது.

    மாணவர்களே! இவ்வாறு இன எழுத்துகள் மோனையாக அமைந்து வருவது இயல்பு எனப் புரிந்து கொள்ளுங்கள்.

    • எதுகை, முரண் தொடைகள் வரும் முறை

    ஓரடிக்குள் அமையும் வழி எதுகையும், வழி முரணும் சிறப்பானவை.

    (எ.டு)

    இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்கு
    (திருக்குறள், 623)

    இது ஓரடிக்குள் நான்கு சீர்களிலும் வந்த வழி எதுகை.

    (எ.டு)

    செய்யவாய்ப் பசும்பொன் ஓலைச்
    சீறடிப் பரவை அல்குல்
             (சூளாமணி, 673)

    ஓரடிக்குள் செம்மை,பசுமை, சிறுமை, பெருமை என வழி முரண் வந்தது.

    • மருட்செந்தொடை

    உறுப்பியலில் தொடை வகைகளைப் பற்றிப் படித்தபோது 'செந்தொடை' எனும் தொடை பற்றிப் படித்தீர்கள். மோனை இயைபு முதலிய எந்தத் தொடை அமைப்பும் இல்லாத பாடலைச் செந்தொடைப் பாடல் என்பர். அதன் புறனடையே மருட்செந்தொடை. மேலே நாம் கண்ட கிளைமோனை மட்டும் பெற்று வேறு எவ்வகைத் தொடையும் தொடை விகற்பமும் அமையாமல் வருவது மருட்செந்தொடை ஆகும்.

    (எ.டு)

    அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ்
             (திருக்குறள், 64)

    மேற்காட்டிய பாடலில் அ - ஆ எனக் கிளைமோனை அமைந்திருப்பது தவிர எதுகை, இயைபு, முரண் போன்ற எந்தத் தொடையும் இல்லை. ஆகவே இது மருட்செந்தொடை.

    மாணவர்களே! இப்பகுதியில் சொல்லப்பட்ட இலக்கணங்கள் அனைத்தும் உறுப்பியல் கருத்துகளுக்குப் புறனடையாக வருவனவே என்பதை உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.

    இனி, இவ்விலக்கணக் கருத்துகளைக் கூறும் நூற்பாவின் பொருள் : வருக்க எழுத்தும், நெடில் எழுத்தும், இன எழுத்தும் எதுகையும் மோனையுமாக வந்தால் அவை வருக்க எதுகை, நெடில் எதுகை, இன எதுகை எனவும், வருக்க மோனை, நெடில் மோனை, இன மோனை எனவும் பெயர்பெறும். உயிர் எதுகை, ஆசு எதுகை, இடையிட்டு எதுகை, இரண்டடி எதுகை, மூன்றாம் எழுத்து ஒன்று எதுகை எனும் சில எதுகைகளும் உள; ஆயினும் அவை சிறப்பில்லாதவை.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    வருக்க எழுத்து என்றால் என்ன?
    2.
    ஆவா - கூகூ - மாமா - ஏகீர் என வருவது எவ்வகை எதுகை?  
    3.
    மெல்லின எதுகை எவ்வாறு வரும்?
    4.
      நெடில் மோனைக்கு எடுத்துக் காட்டுத் தருக.
    5.
      தலையாகு எதுகை என்பது யாது?
    6.
    ஆசு எழுத்துகள் யாவை?
    7.
      மூன்றாம் எழுத்து ஒன்றும் எதுகை எவ்வாறு வரும்?
    8.
    மருட்செந்தொடை என்பது யாது?
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 12:08:50(இந்திய நேரம்)