Primary tabs
-
6.4 தரவு தாழிசைகளுக்குப் புறனடை
செய்யுளியலில், கலிப்பா இலக்கணத்தில் கலிப்பாவின் உறுப்புகளாகிய தரவு, தாழிசை ஆகியவை பற்றிப் படித்திருக்கிறீர்கள். செய்யுளியல் நூற்பாவில் தரவு, தாழிசை ஆகியவற்றுக்கு அடிவரையறை சொல்லப்படவில்லை. அங்கு விடுபட்டவை இங்குச் சொல்லப்படுகின்றன.
I. அம்போதரங்க ஒத்தாழிசை ; வண்ணக ஒத்தாழிசை ஆகிய இருவகைக்கலிப்பாக்களுக்கும் தரவின் அடி அளவு ஆறடியே ஆகும். சிறுமை, பெருமை இல்லை.
II. ஏனைய கலிப்பாக்களுக்குத் தரவின் அடிச்சிறுமை மூன்றடியாகும்.அவை நேரிசை ஒத்தாழிசைக்கலியும் கொச்சகக் கலியும் ஆகும். அவற்றுள் தனிச்சொல்லும் சுரிதகமும் இல்லாமல் தரவு மட்டும் தனித்து வரும் தரவுகொச்சகக் கலிப்பாவுக்கு அடிச்சிறுமை நான்கடி ஆகும். இச்செய்தி உறுப்பியலுள் (நூற்பா. 14) சொல்லப்பட்டுள்ளது.
இந்தக் கலிப்பாக்களுக்கு அடிப்பெருமை எவ்வளவு? மேற்குறித்த உறுப்பியல் நூற்பாவை மறுபடி படித்துப் பாருங்கள். 'உரைப்போர் உள்ளக் கருத்தின் அளவே பெருமை' எனச் சொல்லப்பட்டுள்ளது. தரவு, கலிப்பாவின் முதல் உறுப்பு. ஆகவே ஏனைய பாக்களைப் போலவே தரவுக்கும் அடி மேல் வரம்பு விதிக்கப்படவில்லை. வேறுசில இலக்கண நூல்களில் தரவுக்கு மேல்வரம்பு குறிக்கப்பட்டுள்ளது. தரவின் அடிப்பெருமை பன்னிரண்டடி என்கிறார் புலவர் குழந்தை (யாப்பதிகாரம், செய்யுளியல்)
தாழிசைகளுக்கு அடிச்சிறுமை இரண்டடி; பெருமை நான்கடி. கலிப்பாவில் தரவைவிடத் தாழிசை அடிஅளவு சற்றுக் குறைந்தே வரும். தரவு மூன்றடியானால் தாழிசை இரண்டடி ; தரவு ஆறடியானால் தாழிசை இரண்டடி முதல் நான்கடிவரை வரலாம். மாணவர்களே ! செய்யுளியலில் நீங்கள் பார்த்த கலிப்பா இலக்கணத்தில் இந்த அடி அளவுகள் அமைந்த தரவு, தாழிசைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்.