Primary tabs
6.5 எல்லாப் பாக்களுக்கும் உரிய சில புதிய இலக்கணங்கள்
உறுப்பியலிலும் செய்யுளியலிலும் நீங்கள் அறியாத புதிய இலக்கணக் கூறுகளை இப்பகுதியில் காண இருக்கிறீர்கள்.இவற்றுள் சில, செய்யுளின் வடிவு சார்ந்தவை: வேறுசில செய்யுளின் பொருள் சார்ந்தவை. (செய்யுளியலில் மருட்பா இலக்கணம் மட்டுமே, நீங்கள் படித்திருப்பவற்றுள், பொருள் அடிப்படையில் வகைப்படுத்திச் சொல்லப்பட்ட இலக்கணம்) இனி இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.
6.5.1 கூன்
கூன் என்பதை ஒரு தனிச்சொல் எனலாம். இது ஒரு சொல்லாகவும் (சீராகவும்) இருக்கலாம் ; ஓர் அசையாகவும் இருக்கலாம். வெண்பா, கலிப்பா இலக்கணங்களில் நீங்கள் பார்த்த தனிச்சொல்லிலிருந்து இது வேறுபட்டது. கூன் நால்வகைப் பாக்களிலும் வருவது.
பாவினது பொருளைத்தழுவி அடி முதலில் தனியே ( அடியின் சீர் எண்ணிக்கைக்குள் அடங்காது தனியே) வருவது கூன்.
1. வஞ்சிப்பாவில் அடி முதலில் வருவது மட்டுமின்றி அடி இறுதியிலும் கூன் வரும் ; நடுவிலும் வரும். இடையிலும் இறுதியிலும் அசை கூனாக வருவது சிறப்புடையது; சீர் கூனாக வந்தால் உகரத்தில் முடியும். மாச்சீராக மட்டுமே வரும்.
2. ஆசிரியப்பாவில் வெண்பா, கலி ஆகியவற்றில் அடி முதலில் மட்டுமே கூன் வரும்; அடி இடையிலும் இறுதியிலும் வராது.
3. எல்லாப் பாவிலும் சீர் கூனாக வருவதே பெரும்பான்மை; அசை அருகியே கூனாக வரும்.
4. கொச்சகக் கலியில் ஓர் அடியே கூனாக வருவதும் உண்டு.
(எ-டு)
உதுக்காண், சுரந்தானா வண்கைச் சுவணமாப் பூதன்
பரந்தானாப் பல்புகழைப் பாடி ..................
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)( உதுக்காண் = அதோ பார் ; சுரந்து ஆனா = குறையாத ; வண்கை = ஈகை)
மேற்காட்டிய வெண்பாவில் பாடலின் பொருளைத் தழுவி 'உதுக்காண்' எனும் சீர் அடிமுதலில் கூனாக வந்தது காண்க.
(எ.டு)
அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியங் காடிறந் தோரே .....................
(குறுந்தொகை, 216)(விழுப்பொருள் = மலோன செல்வம் ; தருமார் = கொண்டு வருவதற்காக ; இறந்தோர் = கடந்து சென்றார்)
மேற்காட்டிய ஆசிரியப்பா அடி முதலில் 'அவரே' என ஒரு சீர் கூனாக வந்துள்ளது காண்க.
(எ.டு)அவரும், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக்
கண்சேந்
தொருபகல் எல்லாம் உருத்தெழுந் தாறி ...........
(கலித்தொகை , 39: 22-23)(கணை = அம்பு ; சிலை = வில் ; சேந்து = சிவந்து; உருத்து = சினந்து)
மேற்காட்டிய கலியடியின் முதலில் 'அவரும்' எனச் சீர் கூனாக வந்துள்ளது.
(எ.டு)
உலகே, முற்கொடுத்தார் பிற்கொளவும்
பிற்கொடுத்தார் முற்கொளவும்
உறுதிவழி ஒழுகுமென்ப .................
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)மேற்காட்டிய வஞ்சிப்பாவின் அடி முதலில் 'உலகே' எனச் சீர் கூனாக வந்துள்ளது.
(எ.டு)தேரோடத் துகள் கெழுமின, தெருவு
மாமறுகலின் மயக்குற்றன, வழி
கலங்கழாலின், துறை, கலக்குற்றன. ................
(புறநானூறு, 345: 2-4)(மா மறுகலின் = குதிரைகள் ஓடுவதால் ; கலம் = படைக் கருவிகள்; கழால் = கழுவுதல்)
மேற்காட்டிய வஞ்சியடிகளில் 'தெருவு' என அடி இறுதியில் உகரவீற்று மாச்சீரும், 'வழி' என அடி இறுதியில் அசையும்,'துறை' என அடி இடையில் அசையும் கூனாக வந்துள்ளன.
(எ.டு)சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்தொடா..............
(கலித்தொகை, 39)(கீழ் = கிழங்கு; தேன் = தேனடை)
மேற்காட்டிய கொச்சகக் கலிப்பா அடியின் (வள்ளிகீழ்....என்பதன் முன்வந்த) முதலில் அடிக்கோடிடப் பெற்ற அடி கூனாக வந்ததாகும்.
6.5.2 விகாரம்
விகாரம் = வேறுபாடு. வழக்கமாக, இயல்பாக இருப்பதிலிருந்து வேறுபட்டிருப்பது விகாரம்.நன்னூல் பாடத்தில், புணர்ச்சி காரணமாக வரும் விகாரங்கள் பற்றியும், செய்யுள் விகாரங்கள் பற்றியும் படித்திருப்பீர்கள். யாப்பு, செய்யுளுக்குரிய இலக்கணமாதலால் செய்யுள் விகாரங்கள் பற்றி ஒழிபியல் கூறுகிறது.வழக்கில் இல்லாமல்,செய்யுளின் ஓசைத் தேவைக்காகப்
புலவன் அமைப்பது செய்யுள் விகாரம்.செய்யுள் விகாரம் அடிப்படையாக ஆறுவகைப்படும். அவை வலித்தல் விகாரம், மெலித்தல் விகாரம், விரித்தல் விகாரம்,தொகுத்தல் விகாரம்,நீட்டல் விகாரம்,குறுக்கல் விகாரம் என்பன. இவற்றுடன் முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை எனும் விகாரங்களையும் சேர்த்துச் சொல்வர்.
- வலித்தல் விகாரம்
மெல்லின மெய் வல்லின மெய்யாக விகாரப்பட்டுவருவது.
(எ.டு)
குறுத்தாட் பூதம் சுமந்த
அறக்கதிர் ஆழியெம் அண்ணலைத் தொழினே
(யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)குறுந்தாள் என்பதில் உள்ள மெல்லினமெய் வல்லின மெய்யாக மாறி வந்துள்ளமையால் இது வலித்தல் விகாரம்.
- மெலித்தல் விகாரம்
வல்லினமெய் மெல்லின மெய்யாக விகாரப்பட்டு வருவது.
(எ.டு)
தண்டை இனக்கிளி கடிவோள்
பண்டையள் அல்லள் மான்நோக் கினளே
(யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)தட்டை என்பது தண்டை என வந்துள்ளது. ஆகவே இது மெலித்தல் விகாரம்.
- விரித்தல் விகாரமும் தொகுத்தல் விகாரமும்
ஒரு சொல்லின் இடையே ஓரிரு எழுத்துகளை இணைத்துச் சொல்லை விரிப்பது விரித்தல் விகாரம்; ஒரு சொல் அல்லது தொடரில் உள்ள ஓர் எழுத்தை நீக்கி அதனைச் சுருக்குவது தொகுத்தல் விகாரம்.
(எ.டு)
சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே
(நன்னூல், நூற்பா 155 மேற்கோள்)சிறிய+இலை = சிறிய விலை என வரவேண்டும். இங்கு அகரம் மறைந்து (சிறிய + இலை = சிறியிலை) வந்துள்ளது. ஆகவே இது தொகுத்தல் விகாரம். விளையுமே என்பது இயல்பான சொல். செய்யுளின் ஓசைத் தேவைக்காக விளையுமே என்பதன் இடையில் 'ம்' எனும் மெய் கொடுத்து விளையும்மே என விரிக்கப் பட்டிருப்பதால் இது விரித்தல் விகாரம்.
- நீட்டல் விகாரம்
குறில் நெடிலாக விகாரப்பட்டு வருவது நீட்டல் விகாரம்.
(எ.டு)
ஈசன் எந்தை இணையடி நீழலே
(தேவாரப்பாடல் அடி)நிழலே என்பது நீழலே என நீண்டு வருவதால் இது நீட்டல் விகாரம்
- குறுக்கல் விகாரம்
நெடில் குறிலாக விகாரப்பட்டு வருவது குறுக்கல் விகாரம்.
(எ.டு)
திருத்தார்நன் றென்றேன் தியேன்
(யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)தீயேன் என்பதில் உள்ள நெடில் குறுகித் தியேன் என வந்துள்ளது. ஆகவே இது குறுக்கல் விகாரம்.
- முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை
சீரின் முதலெழுத்து மறைந்து வருவது முதற்குறை.
(எ.டு)
மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி
(யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)தாமரை என்பதன் முதல் எழுத்து குறைந்து மரை என வந்துள்ளது.
சீரின் இடையே எழுத்துக்குறைந்து வருவது இடைக்குறை.
(எ.டு)
வேதின வெரிநின் ஓதி முதுபோத்து
(குறுந்தொகை, 140)இங்கு ஒந்தி என்பதன் இடையில் உள்ள'ந்'குறைந்து ஓதி என வந்துள்ளது.
சீரின் இறுதி குறைந்து வருவது கடைக்குறை.
(எ.டு)
நீலுண் துகிலிகை கடுப்ப
(யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)இங்கு நீலம் என்பதன் இறுதி 'அம்' குறைந்து நீல் என வந்துள்ளது. ஆகவே இது கடைக்குறை.
6.5.3 வகையுளி
வகை = வகுப்பு, பிரிப்பு; உளி = உள்ளடக்கியது. அதாவது பிரிக்கப்படுவது என்பது பொருள். செய்யுளில் ஓசை ஒழுங்காய் அமைவதற்காகச் செய்யுள் விகாரங்கள் அமைவதை முன்னர்ப் பார்த்தோம். வகையுளியும் செய்யுளில் ஓசை, ஒழுங்காக அமைவதற்காகவே செய்யப்படுவது.
செய்யுள் ஓசை சீர், தளை அமைப்பைப் பொறுத்தது என்பதை அறிவீர்கள். அவை சரியாக அமைவதற்காக ஒரு சொல்லைப் பிரித்து முன்சீரிலும் பின் சீரிலுமாகச் சேர்ப்பதுதான் வகையுளி.
(எ.டு)
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (திருக்குறள், 3)'நீடு வாழ்வார்' எனச் சொற்கள் வருகின்றன. செய்யுளில் இவற்றை இப்படியே அமைத்தால் வெண்பாவில் வரக்கூடாத நேரொன்றாசிரியத் தளை வரும்; ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு எனும் வாய்பாட்டில் அடங்காத மாச்சீராக வரும்;வெண்பா இலக்கணம் கெடும். ஆகவே 'வாழ்வார்' என்பதை வாழ் - வார் எனப்பிரித்து முன் சீரிலும் பின் சீரிலும் சேர்த்திருப்பதைக் காண்க. இவ்வாறு பிரித்தபின் நீடுவாழ் - வார் = இயற்சீர் வெண்டளை ; ஈற்றுச்சீர் 'நாள்' என வெண்பா இலக்கணம் சரியாக அமைகிறது.
6.5.4 வாழ்த்தும் வசையும்
இதுவரை நாம் பார்த்த இலக்கணங்கள் செய்யுளின் வடிவ அமைப்புக் குறித்தவை. இப்போது பார்க்கவிருப்பன செய்யுளின் பொருள் அமைப்பைப் பற்றியவை. அணியிலக்கணத்தில் புகழாப் புகழ்ச்சி, மாறுபடு புகழ்நிலை, வஞ்சப் புகழ்ச்சி என்றெல்லாம் அணிகளைப் படிப்பீர்கள். அவற்றை ஒத்தவைதாம் வாழ்த்தும் வசையும்.
- வாழ்த்து
வாழ்த்து இருவகைப்படும். அவை மெய்வாழ்த்து, இருபுற வாழ்த்து என்பன. உண்மையான வாழ்த்து மெய்வாழ்த்து. வாழ்த்துப் போன்ற வசை, இருபுற வாழ்த்து.
(எ.டு)
கார்நறு நீலம் கடிக்கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற பயன்கொலோ - கூர்நுனைவேல்
வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியால்
கொண்டிருக்கப் பெற்ற குணம் (முத்தொள்ளாயிரம்.)
'கூர்வேலும் வண்டுசூழும் மாலையும் தாவும் குதிரையும் கொண்ட வழுதியால் சூடப்பெற்றுள்ளது நீலமலர். இந்தப் பேற்றுக்குக் காரணம் அது குளத்தில் நாள்தோறும் நின்று செய்த தவமோ? ' என்பது பாடலின் பொருள். இதில் வழுதி உண்மையாகவே வாழ்த்தப் பெற்றிருப்பதால் இது மெய்வாழ்த்து.
(எ.டு)பண்டும் ஒருகால் பைந்தொடியைக் கோட்பட்டு
வெங்கடத்து வில்லேற்றிக் கொண்டிருந்தான் -
தென்களந்தைப்
பூமான் திருமகளுக் கின்னும் புலம்புமால்
வாமான்தேர் வையையார் கோ
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)'முன்பும் ஒருமுறை அம்மன்னன் தன் மனைவியை ஒருவன் கவர்ந்து செல்ல, (மன்னர்களைத் திருமாலின் அவதாரம் என்று கொள்வது மரபு) காட்டில் வில்லேந்தி அலைந்தான். இப்போதும் தென்களந்தை மன்னனின் 'திருமகளுக்காகப் புலம்புகிறான்' - என்பது பொருள். மன்னனை இராமனோடு ஒப்புமைப் படுத்துவது வாழ்த்துப் போலத் தோன்றினாலும் திருமகளை அடைய முடியாமல் புலம்புவதாகக் கூறுவதால் இது இருபுற வாழ்த்து.
- வசை
மெய்வசை, இருபுற வசை என இது இருவகைப்படும். உண்மையான வசை மெய்வசை. வசைபோன்ற வாழ்த்து இருபுற வசை.
(எ.டு)
தந்தை இலைச்சுமடன்; தாய்தொழிலி; தான்பார்ப்பான்
எந்தைக் கிதெங்ஙனம் பட்டதுகொல் ................
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)ஒருவரை 'இவர் தந்தை இலை சுமந்து விற்பவன்; தாய் வேலைக்காரி; இவர் மட்டும் பார்ப்பான். இது எப்படி முடியும்?' எனப் பழிப்பதால் இது மெய்வசை.
(எ.டு)
படையொடு போகாது நின்றெறிந்தான் என்றும்
கொடையொடு நல்லார்கண் தாழ்ந்தான்...................
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)ஒரு வீரனை 'இவன் படையோடு உடன் செல்லாமல் நின்ற இடத்திலிருந்தே எறிந்தான் ; கொடை கொடுத்து நல்லாரிடம் தாழ்ந்தவன்' எனப்பாடுவது இப்பாடல். படையோடு செல்லாமை, தாழ்த்தல் என்பன ஆண்மைக்குக் குறைவானவை. ஆகவே இது வசை போலத் தோன்றுகிறது. எனினும் நின்ற இடத்திலிருந்தே பெரும் முயற்சியில்லாமல் பகைவரை அழித்தான் எனவும் நல்லவர்க்குப் பணிந்தான் எனவும் வரும் பொருள் உண்மையில் அவனைப் போற்றுவதே. ஆகவே இது இருபுற வசை.
6.5.5 வனப்பு
செய்யுளுக்குரிய சிறப்புகள் (அழகுகள்) வனப்பு எனப்படும். 'வனப்பு' செய்யுளின் பொருள் அமைப்பையும் சொல் அமைப்பையும் குறிக்கும் இலக்கணம். வனப்பு எட்டு வகைப்படும்.
1) அம்மை
மென்மையான சில சொற்களால், குறைந்த அடிகளால் அமைந்து சிறப்பாக வரும் யாப்பே 'அம்மை'. இதற்குத் திருக்குறள் பாக்கள் எடுத்துக் காட்டுகளாகும்.
2) அழகு
செய்யுளுக்குச் சிறப்பாக உரிய திரிசொற்களால் அமையும் செய்யுளே 'அழகு' எனப்படும். இதற்குச் சங்க இலக்கியச் செய்யுட்கள் எடுத்துக் காட்டுகளாகும்.
3) தொன்மை
பழைய நிகழ்ச்சி, பழங்கதை கூறுவது 'தொன்மை'. இது உரைநடையோடு கூடியது. மாபாரதம் போன்ற நூல்கள் இதற்கு எடுத்துக்காட்டு.
4) தோல்
நல்ல ஓசை இனிமையுள்ள மென்மையான சொற்களால் மேன்மையான பொருளில் அமைந்தவையும் எல்லா வகைச் சொற்களாலும் பல அடிகளாலும் வருவனவும் 'தோல்' எனப்படும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும், நீங்கள் அறிந்துள்ள புறநானூற்றுப் பாடல் சொல்லினிமை, பொருள் மேன்மை கொண்டது. அதனைத் 'தோல்' எனலாம்.
5) விருந்து
புதிய பொருளைச் சொல்லும் செய்யுள் 'விருந்து'. யாப்பிலக்கணம் செய்யப்பட்ட காலத்திற்குப் பின்னால் புதிய வடிவில் அமைந்தவற்றை 'விருந்து' என்றனர். அவ்வகையில் அக்காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்கள் 'விருந்து' ஆகும். இன்றைய சிறுகதை, புதினம் ஆகியவற்றையும் 'விருந்து' எனலாம்.
6) இயைபு
ஞணநமனயரலவழள எனும் பதினொரு மெய்யும் ஈறாக வந்த பாட்டை ‘இயைபு’ என்பர்.
7) புலன்
அனைவர்க்கும் புரியும் இயற்சொற்களால் அமைந்து,தேடிப் பார்க்காமல் எளிதாகப் பொருள் புலப்படுத்துவது புலன். பாரதி பாடல்களைப் ‘புலன்’ எனலாம்.
8) இழைபு
வல்லொற்று வராமல், தொல்காப்பியர் கூறியுள்ள, எழுத்தெண்ணிக்கை அடிப்படையிலான குறளடி முதல் கழிநெடிலடி வரை ஐந்து வகை அடிகளும் (4 எழுத்து முதல் 20 எழுத்து வரை பெற்று வரும் 17 அடிகள்) உடையதாக, ஓங்கிய சொற்களால் வருவது ‘இழைபு’.
6.5.6 பொருளும் பொருள்கோளும்
பொருள் என்பது அகப்பொருளையும் புறப்பொருளையும் குறிக்கும். செய்யுள் இவ்விரு பொருள்களையும் உள்ளடக்கமாகக் கொண்டு அமைவது.
பொருள்கோள் என்பது ஒரு செய்யுளில் பொருள் கொள்ளும் முறைகளைக் குறிப்பது. பொருள்கோள் ஒன்பது வகைப்படும் . பொருள்கோள் இலக்கணத்தை நன்னூலில் படித்திருப்பீர்கள்.
1) நிரல்நிறைப்பொருள்கோள்
நிரல் = வரிசை ; நிறை = நிறுத்துதல். பெயர்ச்சொற்கள் முதலில் ஒரு வரிசையில் நிறுத்தப்பட்டு அவற்றோடு பொருள் தொடர்புடைய பெயர்ச்சொற்கள் அடுத்த வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கும். வரிசை முறைப்படி அச்சொற்களைப் பொருளுக்கேற்ப இணைத்துப் பொருள் காண்பது வினைச்சொற்களை இவ்வாறே வரிசைப்படி பொருத்திப் பொருள்காண்பது வினைநிரல் நிறைப் பொருள்கோள்.
(எ.டு)
கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி;
மதிபவளம் முத்தம் முகம்வாய் முறுவல்;
பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல்
வடிவினளே வஞ்சி மகள்
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)பெண்ணின் உறுப்புகளுக்கும் அழகுக்கும் உவமையாகும் பொருள்கள் முதல்வரிசையாகவும் உறுப்புகள் அடுத்த வரிசையாகவும் முறைமாறாமல் நிறுத்தப்பட்டுள்ளன. பொருளுக்கேற்ப அவற்றை இணைத்துப்பொருள் காணவேண்டும்.
கொடி - நுசுப்பு (இடை) எனவும், குவளை - உண்கண் எனவும், கொட்டை (தாமரையின் நடுவில் உள்ள உறுப்பு)- மேனி எனவும், மதி - முகம் எனவும், பவளம் - வாய் எனவும்,முத்தம் - முறுவல் (பல்) எனவும்,பிடி (பெண்யானை) - நடை எனவும்,பிணை (மான்) - நோக்கு எனவும்,மஞ்ஞை (மயில்)- சாயல் எனவும் இணைத்துப் பார்க்க வேண்டும்.
வினை நிரல்நிறை எடுத்துக்காட்டை இணைய நூலகத்தில் பார்த்துக் கொள்க.
2) சுண்ண மொழி மாற்றுப் பொருள்கோள்
ஓரடிக்குள், பொருள் தொடர்புடைய சொற்கள் முறைமாற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றைப் பொருளுக்கேற்ப மாற்றிப் பொருள் காண்பது சுண்ண மொழி மாற்று.
(எ.டு)
சுரைஆழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)(சுரை = சுரைக்குடுக்கை; ஆழ = மூழ்க; நீத்து = நீந்தும்; நிலை = நிற்கும்)
இச்செய்யுளின் சொற்களை இதே வரிசையில் பொருள் கொள்வது தவறாக முடியும். 'சுனையில் சுரை மூழ்கும், அம்மி மிதக்கும்' என்பது சரியாக வருமா? ஆகவே சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு (முயலுக்கு) நீத்து என அந்தந்த அடிகளுக்குள் சொற்களை மாற்றிப் பொருள் காண வேண்டும். இவ்வாறு காண்பது சுண்ணமொழி மாற்று.
3) அடிமறி மொழிமாற்றுப் பொருள்கோள்
செய்யுளின் அடிகளை எவ்விதமாக முன் பின் மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாமலிருப்பது அடிமறி மொழி மாற்று.
(எ.டு)
சூரல் பம்பிய சிறுகான் யாறே;
சூரர மகளிர் ஆரணங் கினரே;
வாரலை எனினே யானஞ் சுவலே;
சாரல் நாட! நீவர லாறே!
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)இந்தப் பாடலை அடிமறி மண்டில ஆசிரியப்பாவுக்கு எடுத்துக்காட்டாக முன்னரே படித்திருக்கிறீர்கள். தலைவன் தலைவியை இரவில் சந்திக்கக் காட்டு வழியாக வருவதில் உள்ள இடையூறுகளைச் சொல்லித் தோழி தன் அச்சத்தைத் தெரிவிப்பது பாடலின் பொருள். இப்பாடலில் ஒவ்வொரு கருத்தும் ஓரடிக்குள் சொல்லி முடிக்கப்பட்டுவிடுகிறது.ஆகவே எந்த அடியையும் முதல், நடு, இறுதி என மாற்றிப் படித்தாலும் ஓசையோ பொருளோ கெடுவதில்லை. ஆகவே இது அடிமறி மொழிமாற்றுப் பொருள்கோள்.
4) அடி மொழி மாற்றுப் பொருள்கோள்
ஓரடிக்குள் சொற்களை மாற்றிப் பொருள் கொள்வது சுண்ணமொழி மாற்று என அறிவோம். இரண்டடிகளில் உள்ள சொற்களை முன் பின் மாற்றிப் பொருள் கொள்வது அடிமொழிமாற்று.
(எ.டு)
ஆலத்து மேல குவளை; குளத்துள
வாலின் நெடிய குரங்கு
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)'ஆலமரத்தின் மேல் குவளை உள்ளது; குளத்தில் குரங்கு உள்ளது. 'எனப் பொருள் தருமாறு செய்யுள் அமைந்துள்ளது. இதனை 'ஆலத்துமேல குரங்கு' 'குளத்துள குவளை' என இரண்டடிகளிலும் சொற்களை மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். ஆகவே இது அடிமொழி மாற்றுப் பொருள்கோள்.
5) பூட்டுவில் பொருள்கோள்
வில்லைப் பூட்டுதல் என்பது வில்லை வளைத்து ஒரு நுனியில் கட்டப்பட்டுள்ள நாணை மறு நுனியில் கோப்பதாகும். செய்யுளின் ஒரு முனையில் (முதலில்) உள்ள சொல்லை மறுமுனையில் (இறுதியில்) பொருத்திப் பொருள் காண்பது பூட்டுவில் பொருள்கோள் ஆகும்.
(எ.டு)
திறந்திடுமின், தீயவை பிற்காண்டும்; மாதர்
இறந்து படிற்பெரிதாம் ஏதம் - உறந்தை யர்கோன்
தண்ணார மார்பின் தமிழர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு
(முத்தொள்ளாயிரம், 42)பவனிவரும் உறையூர்ச் சோழ மன்னனை இளம்பெண்கள் கண்ணாரக் காணக் கதவு திறந்திடுங்கள் என்று முதுபெண்கள், இளம்பெண்களின் தாயரைப் பார்த்துச் சொல்வதாக அமைந்த பாடல் இது. இல்லை என்றால் அவர்கள் இறந்துவிடக் கூடும் எனும் எச்சரிக்கையும் பாட்டில் உள்ளது. செய்யுளின் முதலில் உள்ள திறந்திடுமின் எனும் சொல்லுடன் இறுதியில் உள்ள கதவு எனும் சொல்லைச் சேர்த்துப் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே இது பூட்டுவில் பொருள்கோள் ஆகும்.
6) புனல்யாற்றுப் பொருள்கோள்
ஆற்றோட்டம் போல,செய்யுளில் எச்சொல்லையும் எங்கும் மாற்றாமல், இருந்தபடியே நேராகப் பொருள் கொள்வது புனல்யாற்றுப் பொருள்கோள்.
(எ.டு)
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
(திருக்குறள், 131)(விழுப்பம் = மேன்மை)
இப்பாடலில் சொற்களை முன்பின் மாற்றாமல் நேர்வரிசையில் பொருள்கொள்ள முடிகிறது. ஆகவே இது புனல்யாற்றுப் பொருள்கோள் ஆகும்.
7) அளைமறி பாப்புப் பொருள்கோள்
அளை = புற்று ; பாப்பு = பாம்பு.புற்றில் நுழையும் பாம்பு, தன் இடைப்பகுதியையும் வால்பகுதியையும் பாதுகாக்க, புற்றில் நுழைந்தவுடன் தலையை மடித்து மேலே நிமிர்த்திக் கொள்ளும். முழு உடலும் புற்றுக்குள் சென்றபின் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும்.அதுபோல, செய்யுளின் இறுதிச் சொற்களை முதலிலும் இடையிலும் பொருத்திப் பொருள் காண்பது அளைமறி பாப்புப் பொருள்கோள். (புற்றில்நுழையும் பாம்பின் தலை வெளியிலிருந்து பார்ப்பவர்க்குக் 'கடை' வால்தான் முதல் எனும் அடிப்படையில் இதனைப் புரிந்து கொள்க)
(எ.டு)
தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித்
தளர்வார் தாமும்
சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியில்
சுழல்வார் தாமும்
மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே
முனிவார் தாமும்
வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி
முயலா தாரே
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)(யாக்கை = உடம்பு ; விளிந்து = அழிந்து ; நாற்கதி = தேவ, மக்கள், விலங்கு,நரகர் பிறப்புகள்; மூழ்ந்த = வளைத்த; முனிவார் = வெறுப்பார்; முன்னி = எண்ணி)
மேற்காட்டிய பாடலில் ஈற்றடியை முதல் இடை அடிகளுடன் சேர்த்துப் பொருள்கொள்ள வேண்டும். வாழும் போதே வான் எய்தும் வழி நாடி முயலாதவர்கள் தண்டூன்றித் தளர்வார், நாற்கதியில் சுழல்வார்; முனிவார் என்று பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள்கொள்ளக் கிடப்பதால் இது அளைமறி பாப்புப் பொருள்கோள் ஆகும்.
8) தாப்பிசைப் பொருள்கோள்
தாப்பு = தாம்பு; கயிறு ; ஊஞ்சல் கயிறு. ஊஞ்சல் கயிறு நடுவிலிருந்து முன்னும் பின்னும் செல்வது போல, செய்யுளில் நடுவில் உள்ள சொல், முதலிலும் இறுதியிலும் சென்று பொருள் தருவது தாப்பிசைப் பொருள்கோள். அணியிலக்கணத்தில் இதனை 'இடைநிலைத் தீவக அணி' எனப் படிப்பீர்கள்.
(எ.டு)
உண்ணாமை உள்ள துயிர்நிலை; ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு (திருக்குறள், 255)(உயிர்நிலை = உயிர்கள் நிலை பெற்றிருத்தல்; அண்ணாத்தல் = வாய்திறத்தல்; அளறு = நரகம்)
இப்பாடலில் இடையே உள்ள ஊன் எனும் சொல்லை முதலில் கொண்டு வந்து 'ஊன் உண்ணாமை' எனவும், பின்னர் 'ஊன் உண்ண' எனவும் சேர்த்துப் பொருள்கொள்ளக் கிடப்பதால் இது தாப்பிசைப் பொருள்கோள்.
9) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
செய்யுள் முழுவதிலுமிருந்து,பொருளுக்கேற்பச் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள்கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோள்.
(எ.டு)
தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்
வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி
அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே
வங்கத்துச் சென்றார் வரின்
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)(தெங்கங்காய் = தேங்காய்; அஞ்சனம் = மை;வங்கம் = கப்பல்)
இச்செய்யுளில் சொற்களை இருந்தபடியே நிறுத்திப் பொருள்கொள்ள முடியாது. தேங்காய் போலக் கூந்தல், முட்டை உடைத்தாற்போல மேனி,மைபோன்ற பசலை எனப் பொருத்தமற்ற பொருளே வரும். ஆகவே செய்யுளில் அனைத்து அடிகளிலுமிருந்து பொருளுக்கேற்பச் சொற்களை எடுத்து முன்பின்னாக மாற்றிச் சேர்க்க வேண்டும். கப்பலில் சென்றுள்ள தலைவன் திரும்பி வந்தால் தலைவியின் பசலை நோய் தணியும் என்பது செய்யுளின் கருத்து. அதற்கேற்ப, 'வங்கத்துச் சென்றார் வரின், அஞ்சனத் தன்ன பைங்கூந்தலையுடைய தலைவியின் மாமேனிமீது, தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட கோழி முட்டையை உடைத்தாற் போன்றிருக்கின்ற பசலை தணிவாகும்' எனச் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.6.5.7 குறிப்பிசை
ஒலிக்குறிப்பு இடைச்சொற்கள்பற்றி நன்னூல் இடையியலில் படித்திருப்பீர்கள். பேச்சு வழக்கில் நாம் பல ஒலிக்குறிப்புச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். கலகலவெனச் சிரித்தான், பளாரென அறைந்தான் என்பன போன்றவை அவை.புலவர்களும் சில சமயங்களில் ஒலிக்குறிப்புச் சொற்களைக் கவிதையில் படைப்பர். அப்போது அவற்றை ஏனைய சொற்களைப் போலவே அலகிட்டுச் சீர், அடி, தொடை பிழையாமல் அமைத்துக் கொள்ள வேண்டும்.
(எ.டு)
மன்றலங் கொன்றை மலர்மிசைந் துஃகுவஃ
கென்று திரியும் இடைமகனே ................
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)இப்பாடலில் இடையன் உஃகுவஃகு என்று திரிகிறான் என ஒலிக்குறிப்புச் சொல் இடப்பெற்றுள்ளது.உஃ / குவஃ என அச்சீர் நேர்நிரை > கூவிளம் விளமுன் நேர் இயற்சீர் வெண்டளை எனச் செய்யுளில் அமைத்துக் கொள்ளப் படுகின்றது.
6.5.8 ஒப்பு
இதுவரை உறுப்பியலிலும் செய்யுளியலிலும் சொல்லப்பட்ட சீர், தளை, அடி வரையறைகள் பாவிலோ, பாவினத்திலோ சற்றுத் திரிந்தோ, மிகுந்தோ, நிறைந்தோ வந்தால் அவற்றை ஒருவகை ஒப்புமை நோக்கி ஏதாவது ஒரு பாவிலோ பாவினத்திலோ அடக்கிக்கொள்ள வேண்டும். இது ஒரு புறனடைக் கருத்து.
(எ.டு)
சுற்றுநீர் சூழ்கிடங்கில்
பொற்றாமரை பூம்படப்பைத்
தெண்ணீர் நல்வயல் ஊரன் கேண்மை
அல்லிருங் கூந்தற் கலரா னாவே.
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)(படப்பை = சோலை; கேண்மை = காதல்; அல் = இரவு; கூந்தல் = கூந்தலையுடைய தலைவி ; அலர் = தூற்றுதல் பேச்சு)
மேற்காட்டிய பாடலில் வஞ்சியடிகள் இரண்டு மட்டுமே யுள்ளன. வஞ்சிப்பாவின் அடிச்சிறுமை மூன்று என்னும் இலக்கணம் இதில் இல்லை. தொடர்ந்து ஆசிரியச் சுரிதகம் வருகிறது. இடையே தனிச்சொல் இல்லை. எனினும் ஓரளவு ஒப்புமை நோக்கி இதனை வஞ்சிப்பாவில் அடக்குவர். இதுவே ஒப்பு எனப்படும்.
6.5.9 வேறு சில இலக்கணங்கள்
வண்ணம், புனைந்துரை, அடியின்றி நடப்பன எனும் இலக்கணங்களை நூலாசிரியர் சொல்லவில்லை; எனினும் உரையாசிரியர் எடுத்துச் சொல்கிறார்.