தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழில் ஐந்திலக்கணம்

  • 1.1 தமிழில் ஐந்திலக்கணம்

    தமிழ்மொழியில் உள்ள இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் என்பன வாகும். இவ்வைந்தும் தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கிய வடிவமைப்பிற்கும் உரியனவாகும்.

    1.1.1 மொழிக்கான இலக்கணம்

    பொருள்களை அறிந்து கொள்ளவும், கருத்துகளைப் புரிந்து கொள்ளவும், எழுப்புகின்ற ஒலிவடிவம் பற்றியும், எழுதுகின்ற வரிவடிவம் பற்றியும் எடுத்துரைப்பது எழுத்திலக்கணம் ஆகும். எழுத்து சொல்லாகும் முறைமை பற்றியும், சொல்லின் வகைகளைப் பற்றியும் விளக்குவது சொல் இலக்கணம் ஆகும். இவை இரண்டையும் அறிந்தால் தவிர, ஒரு மொழியைப் புரிந்து கொள்ளுதல் இயலாது. எனவே, இவ்விரண்டும் மொழிக்கு அமைந்த அடிப்படை இலக்கணங்கள் ஆகும்.

    1.1.2 இலக்கியத்திற்கான இலக்கணம்

    வாழ்க்கை பற்றிய இலக்கணம் பொருள் இலக்கணமாகும். பொருள் இலக்கணம் தமிழுக்கே அமைந்த சிறப்பிலக்கணம் ஆகும். இது அகப்பொருள், புறப்பொருள் என இருவகைப்படும். அன்பும் இல்லறமும் பற்றியது அகப்பொருள் ஆகும். வீரமும் சமுதாயமும் பற்றியது புறப்பொருள் ஆகும். பிறமொழிகளில் இத்தகைய பாகுபாடு இல்லை.

    இலக்கியங்களின் வடிவத்தைப் பற்றி விவரிப்பது யாப்பிலக்கணம் ஆகும். இலக்கியங்களில் கருத்துகளை அழகுபட எடுத்துரைக்கும் முறையைப் பற்றி விளக்குவது அணி இலக்கணம் ஆகும்.

    எனவே, இம்மூவகை இலக்கணங்களும், இலக்கியத்திற்கு அமைந்த இலக்கணங்கள் ஆகும். இம் மூன்றனையும் அறிந்தால்தான் ஒரு மொழியில் உள்ள இலக்கியங்களைப் படித்துச் சுவைக்கவும், படைத்துக் களிக்கவும் இயலும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 15:56:57(இந்திய நேரம்)