Primary tabs
1.7 தண்டியலங்காரம்
தொல்காப்பியத்தை அடுத்து அணி இலக்கணம் பயிலப் பெரிதும் பயன்படுவது தண்டியலங்காரம் ஆகும். இது தொல்காப்பியத்தையும், வடமொழி காவியா தரிசத்தையும் அடியொற்றி எழுதப்பட்டது. இக்கருத்தை,
பன்னிரு புலவரில் முன்னவன் பகர்ந்த
தொல்காப் பியநெறி பல்காப் பியத்தும்
அணிபெறும் இலக்கணம் அரிதினில் தெரிந்து
வடநூல் வழிமுறை மரபினில் வழாதுஎனவரும் தண்டியலங்காரச் சிறப்புப் பாயிரத்தால் அறியலாம்.
1.7.1 தண்டியலங்காரம் - நூலமைப்பு
இந்நூல், பொதுவணியியல், பொருள்அணியியல், சொல்லணியியல் என மூன்று பிரிவுகளை உடையது. இவற்றுள் பொதுவணியியல் செய்யுள் வகைகளையும், செய்யுள் நெறிகளையும் பற்றி விவரிக்கின்றது. பொருள்அணியியல் தன்மை அணி முதல் பாவிக அணி வரையில் உள்ள முப்பத்தைந்து பொருள் அணிகளை விளக்குகின்றது. சொல்லணியியல் மடக்கு அணி, சித்திரக்கவி என்னும் இரண்டு சொல்லணிகளைப் பற்றி எடுத்துரைக்கிறது. வழு, மலைவு பற்றிய கருத்துகளும் சொல்லணியியலில் இடம் பெற்றுள்ளன.
நூலாசிரியர் தண்டி அவர்கள், அணிகளின் வகைகள் அனைத்திற்கும் எடுத்துக்காட்டு வெண்பாக்களை எழுதி யுள்ளமையும் குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும். இதிலுள்ள நூற்பாக்கள் ‘நூற்பா’ யாப்பில் அமைந்தவையாகும்.
1.7.2 தண்டியலங்காரமும் அணியியலும்
தண்டியலங்காரம் அணியின் இலக்கணத்தை எடுத்துரைப்பதால் அணியதிகாரம் எனவும் கூறப்படும். அணியியல் என்னும் பெயரும் தண்டியலங்காரத்துக்கு உரியது என்பர். சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையில் காணலாகும் நூற்பாக்களும், மாறனலங்கார உரையில் காணலாகும் நூற்பாக்களும் ‘அணியியல்’ நூலுக்குரியவை என்பர். அந்நூற்பாக்கள் தண்டியலங்காரத்திலும் இடம் பெறுதலின் அணியியல் என்பது தண்டியலங்காரத்தின் வேறு பெயரே எனக் குறிப்பிடுவர்.
ஆனால், யாப்பருங்கல விருத்தி உரையும், நேமிநாத விருத்தி உரையும் சுட்டும் ‘அணியியல்’ நூற்பாக்கள், தண்டியலங்காரத்தில் இடம் பெறவில்லை. ஆதலால், அணியியல் என்பது தண்டியலங்காரத்திற்கு முற்பட்ட நூலாக இருந்திருக்கலாம் என்றும் அதிலுள்ளவற்றைத் தண்டியலங்கார ஆசிரியர் மேற்கோளாகக் கொண்டிருக்கலாம் என்றும் அறிஞர் குறிப்பிடுவர்.
எனவே, அணியியல் என்பது, தண்டியலங்காரத்தி லிருந்து வேறான நூல், அதற்கு முற்பட்ட நூல் என்பது தெரிய வருகிறது.
1.7.3 தண்டியலங்கார நூலாசிரியர்
வடமொழியில் உள்ள அணி இலக்கண நூலாகிய காவியாதரிசம் என்பதன் ஆசிரியர் தண்டி என்பவராவார். தமிழிலுள்ள தண்டியலங்கார அணி இலக்கண நூலின் ஆசிரியர் பெயரும் தண்டி என்றே காணப்படுகிறது. இப்பெயர், இவரது இயற்பெயரா? வடமொழி ஆசிரியர் மீது கொண்ட அன்பால் தாமே வைத்துக் கொண்ட புனைபெயரா? அறிஞர்கள் பாராட்டி வடநூல் தண்டிக்கு இணையானவர் எனப் போற்றிய புகழ்ப் பெயரா? என வரையறுத்துக் கூற இயலவில்லை.
தண்டியலங்காரச் சிறப்புப்பாயிரம், இவரைக் கவிச் சக்கரவர்த்தி கம்பரின் பெயரன் ; அம்பிகாபதியின் மகன்; வடமொழி, தென் மொழிகளில் வல்லவர்; சோழநாட்டினர் எனச் சுட்டுகின்றது. நூலில் காணப்படும் சோழன் பெயரில் அமைந்த எடுத்துக்காட்டு வெண்பாக்களான 45 பாடல்களில் அனபாயன் என்னும் பெயரைக் குறிப்பிடுபவை 6 பாடல்களாகும். அனபாயன் என்னும் பெயர், கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் அரசுபுரிந்த இரண்டாம் குலோத்துங்க சோழனைக் குறிப்பதாகும். இந்நூல் அனபாயன் அவையில் அரங்கேற்றப் பட்டது எனவும் சிறப்புப்பாயிரம் குறிப்பிடுகின்றது.
1.7.4 தண்டியலங்காரத் தனிச்சிறப்புகள்
‘தண்டியாசிரியர், நூற்பாவும் செய்து, உரையும் உதாரணமும் எழுதினார்’ என்று கி.பி. 18 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிரயோகவிவேகம் என்னும் நூல் குறிப்பிடுகின்றது. தண்டியலங்கார உதாரணப் பாடல்கள் இலக்கணக் கருத்துக்குப் பொருத்தமானவை ; எளிமையானவை.
காப்பிய இலக்கணம் பற்றிப் பல அரிய செய்திகளை இது எடுத்துரைக்கின்றது.
கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தி.ஈ.சீனிவாச ராகவாச்சாரியார், தண்டியலங்காரக் கருத்துகளைத் தொகுத்து, ‘தண்டியலங்கார சாரம்’ என்னும் வசன உரைநடை நூலை எழுதியுள்ளார்.
இவை இந்நூலின் தனிச்சிறப்புகளாகும்.
1.7.5 தண்டியலங்கார உரையும் பதிப்பும்
தண்டியலங்காரத்திற்குப் பழைய உரைஒன்று சுப்பிரமணிய தேசிகரால் இயற்றப்பட்டது. இதனை அடியொற்றியே பிற உரைகளும் பதிப்புகளும் தோன்றின.
வை.மு. சடகோப ராமாநுஜாச்சாரியார் உரை- கி.பி. 1901இராமலிங்கத் தம்பிரான் குறிப்புரை - கழகம்- கி.பி. 1938சி.செகந்நாதாச்சாரியார் (சொல்லணி) உரை- கி.பி. 1962புலவர் கு. சுந்தரமூர்த்தி (பாடபேத உரை)- கி.பி. 1967புலியூர்க் கேசிகன் எளிய உரை- கி.பி. 1989வ.த. இராம சுப்பிரமணியம் உரை- கி.பி. 1998