தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அணி இலக்கணம்

  • 1.3 அணி இலக்கணம்

    ஒரு மொழியின் அழகை விளக்குவது, அதிலுள்ள அணி இலக்கணம் ஆகும். அணிகளின் இலக்கணத்தினை விளக்குவது அணி இலக்கணம் எனப்படும். அணி என்பதன் பொருள் விளக்கம், சிறப்பு, தொன்மை, வகைகள், பயன் ஆகியவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.

    அணி - பொருள் விளக்கம்

    அணி - அழகு. உடலின் அழகை நகைகள் ஆகிய அணிகள் அழகுபடுத்துகின்றன. செய்யுளின் கருத்தை அணிகள் அழகுபடுத்துகின்றன. சொல்லாலும் பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது அணி இலக்கண இயல்பாகும். வடமொழியில் அணியை, அலங்காரம் என்று கூறுவர்.

    அணி இலக்கணச் சிறப்பு

    எழுத்து, சொல், பொருள், யாப்பு ஆகிய நான்கு இலக்கணங்களும் மொழிக்கு மொழி வேறுபடுவன ; மாறுபடுவன. ஆனால் அணி இலக்கணம் எல்லா மொழிகளுக்கும் பொதுவானது ஆகும். எடுத்துக்கூற விரும்பும் கருத்தை எந்த நடையில் எந்தெந்த முறையில் எடுத்துரைப்பது எனக் கூறுவது எல்லா மொழிகளிலும் உள்ள நூல்களுக்கும் பொதுவானதாக உள்ளது. இது, பிற இலக்கணங்களுக்கு இல்லாத தனிச் சிறப்பு ஆகும்.

    அணி இலக்கணத் தொன்மை

    தொல்காப்பிய ‘உவமவியல்’, அணி இலக்கணம் பற்றி எடுத்துரைப்பது என்பதை முன்னமே கண்டோம். அந்த இயலிலுள்ள நூற்பாக்களில்,

    விரவியும் வரூஉம் மரபின என்ப (நூற்பா-2)
    உவமப் போலி ஐந்துஎன மொழிப (நூற்பா-24)

    என வருவனவற்றுள் என்ப, மொழிப என்னும் சொல்லாட்சிகள் காணப்படுகின்றன. என்ப, மொழிப என்னும் இச்சொற்களுக்கு 'ஆசிரியர்கள் இவ்வாறு கூறுவார்கள்' என்பது பொருள். தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 3 அல்லது 4ஆம் நூற்றாண்டு என ஆராய்ச்சியாளர் கூறுவர். எனவே அதற்கும் முற்பட்ட காலத்தில் அணி இலக்கணக் கருத்துகள் தமிழில் இருந்துள்ளமையை அறியமுடிகிறது.

    1.3.1 அணி இலக்கணப் பகுதிகள்

    அணி இலக்கணம் பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பகுதிகளாகத் தண்டியலங்கார நூலில் காட்டப் பெற்றுள்ளது.

    பொதுவணியியல்

    செய்யுளில் இடம்பெறும் அணிகள் குறித்த பொதுவான இலக்கணத்தைக் கொண்டது இப்பகுதியாகும்.

    பொருளணியியல்

    தன்மை அணி, உவமை அணி, உருவக அணி முதலான பொருள் அடிப்படையிலான பல அணிகள் இப்பகுதியில் எடுத்துக் காட்டுடன் விவரிக்கப் பெறும்.

    சொல்லணியியல்

    மடக்கணி, சித்திரக்கவி என்னும் சொல் அடிப்படையிலான இரண்டு அணிகளை விவரிக்கும் பகுதி இது.

    1.3.2 அணி இலக்கணப் பயன்

    அணி இலக்கணம் பொருள் புலப்படுத்துதலும், அழகுபடுத்துதலும் ஆகிய பயன்பாடுகளை உடையது.

    பொருள்புலப்பாடு

    அணிகளுக்கெல்லாம் தாயாகவும், முதன்மையாகவும் விளங்குவது உவமையணி ஆகும். தெரியாத பொருள்களைப் பற்றித் தெரிவிக்க, தெரிந்த பொருள்களை உவமையாகக் கூறுவது மரபு. காட்டுவழியில் சென்ற ஒருவன் முதன்முறையாக ஒரு காட்டுப் பசுவைக் காண்கிறான். காட்டுப் பசு என்பது நாட்டிலுள்ள பசுவைப் போன்ற தோற்றத்தை உடையது எனக் கேள்விப்பட்டிருந்ததால், இது காட்டுப்பசு என அறிந்து கொள்கிறான். இதனை, ஆப்போலும் ஆமா(ஆ - பசு; ஆமா - காட்டுப்பசு) என இளம்பூரணர் தொல்காப்பிய உரையில் சான்று காட்டி விளக்குகின்றார்.

    அழகுபடுத்தல்

    தெரிந்த பொருள்களைப் பற்றி எடுத்துரைக்கும்போதும் நயம்பட உரைக்கும் நிலையில், உவமை பிற்காலத்தில் பயன்படலானது. தாமரை போன்றது பெண்களின் முகம் என வரும் உவமைப் பகுதியில் அழகுபடுத்தலே அமைகின்றது. பிற அணிகளும், இவ்வாறு அழகுபடுத்தி உரைத்தற்கு ஏற்பட்டனவே ஆகும். பெரிய மாளிகைக்கு அதன் முன்புறத்தில் அமையும் ஓவியமும், பெரிய நகரத்திற்கு அதன் பகுதியில் அமையும் கோபுரமும் அழகு சேர்ப்பதுபோல் செய்யுளுக்கு அழகு சேர்ப்பது அணி ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 16:19:43(இந்திய நேரம்)