தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

காப்பியம்

  • 3.1 காப்பியம்

    காப்பியம் என்னும் சொல் காவியம் என்னும் வட சொல்லின் திரிபு எனவும், தமிழில் அமைந்த இயற்சொல்லே எனவும் இருவிதமான கருத்துகள் கூறப்படுகின்றன. காப்பியத்தைக் குறிக்க வேறு பெயர்களும் வழங்கப் பெறுகின்றன. காப்பியம் என்னும் சொல்லாட்சி தமிழ் இலக்கியங்களில் காலந்தோறும் பயின்று வருவதையும் காண்கிறோம்.

    3.1.1 காப்பியம் - பெயர்க்காரணம்

    காப்பியம் என்பதன் பெயர்க்காரணம் குறித்து அறிஞர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

    காவியம் என்பது 'கவி' என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது. கவிஞர்களிடமிருந்து தோன்றியது என்பது இதன் பொருள். இதுவே காப்பியம் என்று தமிழில் திரிந்து வரலாயிற்று.

    'கவி' என்ற வடசொல், செய்யுளையும் செய்யுள் செய்பவனாகிய கவிஞனையும் குறிக்கும் ; தமிழிலும் அப்படியே கூறும் மரபு உண்டு. கவியால் செய்யப்படுவது காவியம் ; காவியம் காப்பியமாயிற்று.

    காப்பியம் என்பது தமிழ்ச் சொல்லேயாகும். இது காவியம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு அன்று; காப்பு + இயம் என்னும் தமிழ்ச் சொற்சேர்க்கையே காப்பியம் எனப்பட்டது.

    காப்பியாறு, காப்பியக்குடி, தொல்காப்பியம் என்ற சொற்களில் தொன்று தொட்டு வழங்கப் பெற்ற காப்பியம் என்னும் சொல், வடமொழியில் இடம் பெறும் காவியம் என்பதற்கு இணையான சொல்லாகக் கருதப்பெற்றுப் பிற்கால வழக்கில் நிலைபெறலானது எனக் கொள்வது பொருத்த முடையதாகும்.

    3.1.2 காப்பியம் - பிற பெயர்கள்

    காப்பியம் என்னும் இலக்கிய வகையைக் குறிக்கப் பல்வேறு பெயர்கள் தமிழில் வழங்கப் பெறுகின்றன.

    தொடர்நிலைச் செய்யுள்

    பொருள் அடிப்படையில் செய்யுள்கள் தொடர்ந்து அமைதலின், பொருள் தொடர்நிலைச் செய்யுள் எனக் காப்பியங்களைக் குறிப்பிடுவது உண்டு.

    தொடர்நடைச் செய்யுள்

    பல செய்யுள்கள் கூடிப் பொருள் தொடர்பு அமைய நடைபெறும் (தொடர்ந்து செல்லும்) இயல்புடையது ஆதலின், காப்பியம், தொடர்நடைச் செய்யுள் எனவும் கூறப் பெறும்.

    வித்தாரக்கவி

    விரிவாக அமையுமாறு கதையினைச் செய்யுளில் எடுத்துரைத்தலின், அகலக்கவி, பெருங்கவி, வித்தாரக்கவி எனவும் இதனைக் குறிப்பது உண்டு. (வித்தாரம் = விரிவு)

    கதைப்பாட்டு

    பாட்டு என்பது செய்யுளைக் குறிக்கும். கதையை உரைநடையில் கூறாமல் பாட்டு வகையில் கூறலால் காப்பியம் இப்பெயர் பெறலானது. கோவலன் கதை, நல்லதங்காள் கதை எனக் கிராமப் புறங்களில் இன்றும் கதைப் பாடல்கள் பாடியும் கேட்டும் மகிழும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

    உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

    செய்யுள் நடையில் கூறப்பெறும் கதை, இடையிடையே உரைநடை விரவி வரப் பாடப்பெறுவதும் உண்டு. சிலப்பதிகாரம், பாரதவெண்பா, அரிச்சந்திர வெண்பா போன்றன இவ்வகையில் அடங்கும்.

    சரிதம்

    வரலாறு என்னும் பொருள்படும் சரிதம் என்பதும் காப்பியத்தைக் குறிக்கும். சீவகசிந்தாமணி, சீவகசாமி சரிதம் எனவும், சூளாமணி, செங்கண் நெடியான் சரிதம் எனவும், நைடதம், நிடதர்கோன்புகழ் சரிதம் எனவும் வழங்கப்பெறுதல் இதற்கான சான்றுகளாகும்.

    நாடகம்

    காப்பியம், நாடகம் எனவும் கூறப் பெறுகிறது. கம்பராமாயணம், கம்பநாடகம் எனச் சுட்டப் பெறுவது இதற்குச் சான்றாகும்.

    கதை

    கதை என்பது செய்யுளில் அமைந்த கதையாம் காப்பியத்தைக் குறிப்பதும் உண்டு. பெருங்கதை, விம்பசாரன்கதை போன்றன இதற்கான சான்றுகளாகும்.

    இவ்வாறு பல பெயர்களால், காப்பியம் சுட்டப் பெறுகின்றது.

    3.1.3 காப்பியம் - இலக்கிய ஆட்சி

    காப்பியம் என்னும் சொல், மணிமேகலை என்னும் காப்பியத்தில், நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர் (19 : 80) என்ற தொடரில் பெற்றுள்ளது. அடுத்து, பெருங்கதையில் காப்பியக் கோசம் (1-38 ; 167), காப்பிய வாசனை (4-3 ; 42) என இடம்பெறக் காண்கிறோம். சீவகசிந்தாமணி, காப்பியம் இயற்றும் கவிஞர்களைக் காப்பியக் கவிகள்(1585) எனக் குறிக்கின்றது. காப்பியம் என்பதனை முதலில் தொடர்நிலை எனக் கையாள்வது தண்டியலங்காரமேயாகும்.

    காவியம் என்னும் சொல்வழக்கு, யசோதரகாவியம், நாககுமார காவியம், உதயண குமார காவியம் என நூற்பெயரிலேயே இடம் பெற்றுள்ளமையும் சிந்திக்கத்தக்கதாகும்.

    பெருந்தொகையில் பஞ்சகாவியம் (1259) எனவும், தமிழ்விடுதூதில், பஞ்சகாப்பியம் (கண்ணி-52) எனவும் சுட்டக் காண்கிறோம்.

    எனவே, காப்பியம், காவியம் ஆகிய இரு சொல்லாட்சிகளும் சமகால வழக்கிலிருந்தமையை அறிய முடிகின்றது.

    3.1.4 காப்பிய இலக்கணம்

    காப்பியம் ஒரே வகைச் செய்யுளால் அமைவதும் உண்டு. பலவகைச் செய்யுட்களால் அமைவதும் உண்டு. செய்யுளாக அமைவது மட்டுமன்றி இடையிடையே உரைநடையும் பிறமொழிச் சொற்களும் கலந்து வருவதாக அமைவதும் உண்டு.

    அவைதாம்
    ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
    உரையும் பாடையும் விரவியும் வருமே
    (தண்டியலங்காரம்-11)

    (ஒருதிறம் = ஒருவகை
    பாடை
    = பிறமொழி
    விரவி = கலந்து)

    ஒரே வகை யாப்பில் (செய்யுளில்) அமைவது கம்பராமாயணம். அது விருத்தத்தால் அமைந்தது. பல வகை யாப்பில் அமைவது சிலப்பதிகாரம். உரைநடை விரவி வருவதற்கும் அதுவே சான்றாகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 13:07:09(இந்திய நேரம்)