தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

காப்பியக் கதை நிகழ்ச்சிகள்

  • 3.5 காப்பியக் கதை நிகழ்ச்சிகள்

    காப்பியக் கதைத்தலைவனின் வாழ்வில் நிகழும் திருமணம் முதலான அகநிகழ்ச்சிகளும், முடிசூடல் முதலான புறநிகழ்ச்சிகளும் காப்பியங்களில் விரவிக் காணப்படும். இல்லற வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையுமாகப் பின்னிப் பிணைந்த வரலாறு சுவைபடக் காப்பியங்களில் எடுத்துரைக்கப்படும். இவற்றை அகப்பொருள் நிகழ்ச்சிகள், புறப்பொருள் நிகழ்ச்சிகள் என்று இருவகைப்படுத்திக் காண்போம்.

    3.5.1 அகப்பொருள் நிகழ்ச்சிகள்

    திருமணம் புரிதல், பொழில் விளையாடல், நீராடல், கள்ளுண்டு களித்தல், சிறுவரைப் பெறுதல், புலவியில் புலத்தல், கலவியில் களித்தல் ஆகியன குறிப்பிடத்தக்க அகப்பொருள் நிகழ்ச்சிகளாகும்.

    திருமணம்

    கோமகன் முன்சன கன்குளிர் நல்நீர்
    பூமக ளும்பொரு ளும்என நீஎன்
    மாமகள் தன்னொடும் மன்னுதி என்னா
    தாமரை அன்ன தடக்கையின் ஈந்தான்
    (கம்ப-பால-கடிமண-86)

    (கோமகன் = இராமன்
    பொருள்
    = மெய்ப்பொருள், திருமால்
    மன்னுதி = நிலைபெறுக)

    சனகமன்னன், இராமனிடம் தன் மகள் சீதையைத் தாரை வார்த்து, பூமகளும் பொருளும்போல் (இலக்குமியும் திருமாலும்) நிலைபெறுக என்று கைகளில் அளித்தான்.

    பொழிலாடல்

    இது சோலையில் உலாவுதலை வருணிப்பதாகும்.

    புனைமலர்த் தாரி னானும் போதுஅணி கொம்ப னாளும்
    நனைமலர்க் காவும் அம்தண் வாவியும் நல்ல ஆடிச்
    சுனைமலர்க் குவளை குற்றுச் சூழ்மலர் கண்ணி சூட்டி
    வினைநலம் நுகர்ந்து செல்வார் விதியினான் மிக்கநீரார்
    (சீவக-கேமசரி-84)

    (நனை = தேன்
    கா = சோலை
    வாவி = தடாகம் (நீர்நிலை)
    குற்று = பறித்து)

    சீவகனும் கேமசரியும் பூங்காவிலும், தடாகத்திலும் ஆடி மகிழ்ந்து, சுனை மலர்களைப் பறித்து மாலையாக்கிச் சூட்டிக் கொண்டு மகிழ்ந்து செல்லத் தொடங்கினர்.

    களியாட்டு

    சுவைதரும் தேன் பொருந்திய தீங்கற்ற மதுவினை அளவோடு ஆடவரும் பெண்டிரும் அக்காலத்து அருந்தி வந்தனர்.

    பூக்கமழ் ஓதியர் போது பொங்கிய
    சேக்கையின் விளைசெருச் செருக்கும் சிந்தையர்
    ஆக்கிய அமிழ்தென அம்பொன் வள்ளத்து
    வாக்கிய பசுநறா மாந்தல் மேயினார்
    (கம்ப-பால-உண்டாட்டு-6)

    (ஓதி = கூந்தல்
    போது = மலர்
    போக்கிய = தூவிய
    செரு = கலவிப்போர்
    வள்ளம்
    = கிண்ணம்
    வாக்கிய = ஊற்றிய
    நறா = தேன்(மது)
    மாந்தல் = பருகுதல்)

    பூக்கமழும் கூந்தலுடைய மகளிர், கலவிப் போர் புரியும் சிந்தையராய் அமுதம் போன்று பொற்கிண்ணத்தில் ஊற்றிய புது மதுவினைப் பருகலாயினர்.

    இதுபோலவே, மக்கட்பேறு, ஊடல், கலவி முதலிய பிற அகப்பொருள் நிகழ்ச்சிகளும் காப்பியத்தில் இடம் பெறும்.

    3.5.2 புறப்பொருள் நிகழ்ச்சிகள்

    பொன்முடி (மகுடம்) கவித்தல், மந்திரம் (ஆலோசனை), தூது, செலவு (பயணம்), இகல் (பகை), வெற்றி ஆகியன குறிப்பிடத்தக்க புறப்பொருள் நிகழ்ச்சிகளாகும்.

    முடிசூடுதல்

    கதைத்தலைவன் நாடாளும் பொறுப்பேற்று மகுடம் சூடும் நிகழ்ச்சி.

    அரியணை அனுமன் தாங்க
        அங்கதன் உடைவாள் ஏந்தப்
    பரதன்வெண் குடைக விக்க
        இருவரும் கவரி பற்ற
    விரிகடல் உலகம் ஏத்தும்
        வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
    மரபுளோர் கொடுக்க வாங்கி
        வசிட்டனே புனைந்தான் மௌலி
    (கம்ப-யுத்த-திருமுடி-16)

    (கவரி = விசிறி
    மௌலி = மகுடம்)

    இராமபிரான் முடிசூடிய போது அனுமன் அரியணையைத் தாங்கினான்; அங்கதன் உடைவாள் ஏந்தினான்: பரதன் குடைபிடித்தான் ; இலக்குவனும் சத்துருக்கனும் கவரி வீசினர் ; சடையனின் முன்னோர் கொடுக்க, வசிட்டர் மகுடம் சூட்டினார்.

    மந்திராலோசனை

    மந்திரம், ஆலோசனை, கலந்துரையாடல், சூழ்ச்சி, மந்திராலோசனை ஆகியன யாவும் ஒரேபொருள் உடையவை. போர், அரசாட்சி தொடர்பாக அரசன், அரசவை உறுப்பினர்களை அழைத்துக் கலந்து பேசுதலாகும்.

    நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு
    எல்லைஇல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்
    ஒல்லைவந்து உறுவன உற்ற பெற்றியின்
    தொல்லைநல் வினைஎன உதவும் சூழ்ச்சியார்
    (கம்ப-அயோத்தியா-மந்திர-9)

    (ஒல்லை = விரைந்து
    பெற்றி = இயல்பு
    சூழ்ச்சி = யோசனை)

    நல்லன, தீயன இவை இவை என ஆராய்ந்து, மருத்துவனைப் போன்றும், நல்வினை போன்றும் ஆலோசனை கூறவல்லவர்கள் அரசவையினர்.

    தூது

    பகைநாட்டின்மேல் படையெடுக்குமுன், அரசன் போர் மூளாதிருக்கப் பகையரசனிடம் சில நிபந்தனைகள் அமையத் தூது அனுப்புதல் ‘தூது’ எனப்படும். தூதினால் பல போர்கள் தவிர்க்கப்பட்டதும் உண்டு. காப்பியங்களில் காணும் தூதுகள் போரைத் தடுத்து நிறுத்த முயன்றும். போர்கள் தடைபட்டதாகத் தெரியவில்லை.

    தூதுவன் ஒருவன் தன்னை
        இவ்வழி விரைவில் தூண்டி
    மாதினை விடுதி யோஎன்று
        உணர்த்தவே மறுக்கும் ஆகின்
    காதுதல் கடன்என்று உள்ளம்
        கருதியது அறனும் அஃதே
    நீதியும் அஃதே என்றான்
        கருணையின் நிலையம் அன்னான்’
    (கம்ப-யுத்த-அங்கதன்தூது-2)

    (மாது = சீதை
    காதுதல் = அழித்தல்
    கடன் = கடமை)

    இராமபிரான், 'இராவணனிடம் தூதுவிடுத்துச் சீதையை விடுவிக்குமாறு கூறுவோம் ; அவன் மறுத்தால் போரிட்டு அழிப்போம் ; அதுவே முறை' என்கிறார்.

    இதுபோன்றே செலவு (படையெழுச்சி), இகல் (போர்), வெற்றி (போரில் பெற்ற வெற்றி) முதலிய புறப்பொருள் காட்சிகளும் அவற்றின் வருணனைகளும் காப்பியங்களில் இடம்பெறும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 16:47:54(இந்திய நேரம்)