தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தமிழ்க் காப்பியங்கள்

  • 3.7 தமிழ்க் காப்பியங்கள்

    சங்க இலக்கியங்களை அடுத்துத் தமிழில் காப்பியங்கள் தோன்றலாயின. தமிழில் முதன்முதலில் தோன்றியனவும், பிறமொழிகளிலிருந்து தமிழிற்கு வந்தனவும், சமயம் தழுவி எழுந்தனவும், தலபுராணங்களும் எனக் காப்பிய வரிசை தொடர்ந்து வருகின்றது. தொடக்க காலக் காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என இருவகைப் படுத்தப்பட்டுள்ளமையை முன்பே கண்டோம்.

    3.7.1 தமிழ் முதன்மைக் காப்பியங்கள்

    சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழில் தோன்றிய முழுமுதற் காப்பியங்கள் ஆகும். பிற எம்மொழியிலிருந்தும் தழுவியோ மொழிபெயர்த்தோ எழுதப் பெறாதது இவை.

    பெரியபுராணம் தமிழில் எழுந்த காப்பியம், தமிழகத்தில் வாழ்ந்த சிவனடியார்களின் சிறப்பினை எடுத்துரைப்பது. சிலர் இதனை வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது என்பர். அவர்தம் கருத்து தவறானது.

    3.7.2 பிறமொழிக் காப்பியங்கள்

    சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய பெருங்காப்பியங்களும், உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதரகாவியம், நீலகேசி, சூளாமணி ஆகிய ஐஞ்சிறுகாப்பியங்களும், பெருங்கதையும் வடமொழி, பாலி, பிராகிருதம் போன்ற மொழிகளில் அமைந்த காவியங்களைத் தழுவியும் மொழிபெயர்த்தும் எழுதப் பட்டனவாகும்.

    பிரபுலிங்கலீலை என்னும் காப்பியம், கி.பி. 17ஆம் நூற்றாண்டில் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் கன்னட மொழியிலிருந்து மொழி பெயர்த்து எழுதப்பட்டது.

    சீறாப்புராணம், இயேசு காவியம் போன்ற காப்பியங்கள் அரபிமொழி, யூதமொழி ஆகியவற்றின் மூலக்கதைகளைத் தமிழின் தன்மைக்கேற்ப அமைத்து எழுதப்பட்டனவாகும்.

    இவை மொழி பெயர்ப்பும், தழுவலுமாக அமைந்த போதிலும் தமிழில் தோன்றிய காப்பியம் போலவே தமிழ் நடையும், பெயரமைப்பும் சொல்லாட்சியும் பெற்று அமைந்துள்ளன.

    3.7.3 சமயக் காப்பியங்கள்

    மணிமேகலை பௌத்தத்தைப் போற்றும் நிலையில் எழுந்தது. சீவகசிந்தாமணி சமணம் பரப்ப எழுந்தது ; வளையாபதி சமண சமயத்தது. குண்டலகேசி பௌத்தத்தைப் போற்றுவது.

    ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண சமயத்தனவாகும்.

    கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வைணவ சமயக் காப்பியங்களாகும். பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம் முதலின சைவ சமயக் காப்பியங்களாகும். சீறாப்புராணம் இசுலாமியக் காப்பியம். இயேசு காவியம் கிறித்துவக் காப்பியம் ஆகும்.

    சமயம் பரப்பும் நோக்கில்தான் காப்பியங்களின் வளர்ச்சி அமைந்தது என்றே உறுதிபடக் கூறலாம்.

    3.7.4 வடமொழி இலக்கணத் தாக்கம்

    வடமொழித் தண்டியாசிரியர் இயற்றிய காவியாதரிசம் என்னும் வடமொழி இலக்கண நூல் கூறும் காப்பிய இலக்கணங்களைத் தமிழ்த் தண்டியலங்காரமும் வழிமொழிந்து உரைக்கின்றது.

    தண்டியலங்காரம், காப்பியத்திற்கு என வகுத்த இலக்கணக் கூறுகளைக் காலத்தால் அவ்விலக்கண நூலுக்கு முற்பட்டனவாகிய சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றுடன் பொருத்திப் பார்த்து, சில கூறுகள் இக்காப்பியங்களில் அமையவில்லை ; சில வேறுபட்டுள்ளன என்றெல்லாம் ஆராய்வது முறையானதாகாது.

    தண்டியலங்காரக் கருத்துகளை அடுத்து வந்த காப்பியங் களில் அமைத்துப் பார்த்துப் பொருந்திவந்தால் அதுகண்டு மகிழ்தல் முறை. முந்தையவற்றை ஒப்பிட்டுக் குறை கூறுதல் கூடாது.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 17:04:35(இந்திய நேரம்)