Primary tabs
5.2 வைதருப்பம் - உய்த்தல்இல் பொருண்மை
உய்த்தல்இல் பொருண்மை என்பது, பிற சொற்களை வருவித்துச் சேர்த்து விளக்க வேண்டிய நிலைமையில்லாத பொருளுடைமையாகும்.
கருதிய பொருளைத் தெரிவுற விரித்தற்கு
உரியசொல் உடையது உய்த்தல்இல் பொருண்மை(தண்டியலங்காரம் : 22)என்பது நூற்பா.
செய்யுளில் உள்ள சொற்களைக் கொண்டு அதற்குரிய பொருளைக் காணுதல் சிறப்புடைமையாகும். சிலவகைப் பாடல்களில் சில சொற்களை வருவித்தும் கூட்டியும் அதற்குரிய பொருளைக் காண வேண்டியிருக்கும். அத்தகைய நிலைமை இன்றி அச் செய்யுளில் இயல்பாகவே உரிய பொருள் அமைந்தி- ருக்கும் குணப்பாங்கு இது.
இன்றுஉமையாள் மாசிலா வாள்முகம்கண்ட ஏக்கற்றோ
அன்றி விடஅரவை அஞ்சியோ - கொன்றை
உளராஆறு ஓடும் ஒளிர்சடையீர் சென்னி
வளராவாறு என்னோ மதி(வாள் = ஒளி
ஏக்கறுதல் = ஏங்குதல்
உளரா = கலங்காத
ஆறு = கங்கையாறு
சென்னி = தலை
வளராவாறு = வளராத தன்மை
மதி = சந்திரன்)கொன்றை மலரையும் கங்கையையும் ஒளிரும் சடைமுடியில் ஏற்று விளங்கும் பெருமானே ! உமாதேவியாரின் மாசற்ற ஒளி முகத்தைக் கண்டு அத்தகைய சிறப்பு தனக்கு இல்லையே என்கின்ற ஏக்கத்தாலோ அல்லது நீவிர் விடம் பொருந்திய பாம்பை அணிந்தமையால் அது தன்னை விழுங்கிவிடும் என்ற அச்சத்தாலோ, யாது காரணம் கொண்டு நின் சடைமுடியில் ஒளிரும் சந்திரன் பிறையாகிய நிலையிலிருந்து வளர்ந்து அரை நிலவாகவோ முழுநிலவாகவோ மாறாமல் உள்ளது? என்பது இப்பாடலின் பொருள்.
செய்யுளில் உள்ள சொற்களைக் கொண்டே உரிய பொருள் முழுமையாக இங்கு விளக்கப் பெற்றது. புதியதாகச் சொற்களை வருவித்துரைக்கவில்லையாதலின், இச்செய்யுள், உய்த்தல்இல் பொருண்மைக்கு உதாரணம் ஆயிற்று.
இதே பாடலுக்கு இச் சொற்களைக் கொண்டு பொருள் காண்பதோடு விட்டுவிடாமல், ஏக்கத்தாலோ? அச்சத்தாலோ? என இரு வினா எழுப்பியுள்ள இச் செய்யுளில் ‘யாதனாலோ?’ என ஒரு சொல் வருவித்துப் பொருள் காணும் நிலையும் உள்ளது. அவ்வாறான நிலை ‘உய்த்தல் பொருண்மை’ எனப்படும்.
உய்த்தல் பொருண்மையே வைதருப்பருக்கும் கௌடருக்கும், உடன்பாடு ; உய்த்தலில் பொருண்மை வைதருப்பருக்கு மட்டுமே உடன்பாடு ; கௌடருக்கில்லை என்கிறார் உரையாசிரியர் புலியூர்க்கேசிகன் (வர்த்தமானன் பதிப்பு, 1989).