Primary tabs
5.7 புறனடை
தண்டியலங்காரத்தின் முதற்பகுதியாகிய பொதுவணியியலின் இறுதியில் செய்யுள் வகைக்கும் செய்யுள் நெறிக்கும் பிற இலக்கணங்களுக்குமாகப் புறனடை நூற்பா அமைகின்றது. (புறனடை = குறிப்பிட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டவைகளைப் பொருத்திக் காட்ட உதவுவது.)
ஏற்ற செய்யுட்கு இயன்ற அணியெலாம்
முற்ற உணர்த்தும் பெற்றியது அருமையின்
காட்டிய நடைநெறி கடைப்பிடித்து இவற்றொடு
கூட்டி உணர்தல் ஆன்றோர் கடனே(தண்டியலங்காரம் : 26)என்பது அந்நூற்பா,
செய்யுளுக்கு உரிய அணிகள் யாவற்றையும் ஒன்று விடாது உணர்த்துவது அரிதாகும். முந்தைய விதிகளைக் கடைப்பிடித்து, வேண்டிய வகையில் ஒழுகுதல் சான்றோர் கடமையாகும்.
பொருள் எளிதில் விளங்கும் தன்மையுடையதாய்ச் சொற்செறிவு இல்லாததாய் விளங்குகின்ற மிடுக்கற்ற நடையொன்று உளது. அது வைதருப்பம் என்பதாகும்.
பொருட்செறிவும் சொற்செறிவும் உடைய மிடுக்கான நடையுடையது ஒன்று உளது. அது கௌடம் என்பதாகும்.
எந்த நடைக்கும் ஓசையினிமையும், பொருட்செறிவும் இன்றியமையாதவையாகும்.
வைதருப்பம், கௌடம் தவிர வேறு நெறிகளும் உள்ளன. இவற்றுள் வெளிப்படையான பேதமுடையவை வைதருப்பமும் கௌடமுமேயாகும். பிற, நுட்பமான பேதமுடையன.
நூலாசிரியர் தண்டியடிகள் வடநாட்டுக் கவிநயங்களில் விரிந்த பயிற்சி பெற்றவர். எனவே, அவற்றை எடுத்துக் காட்டி விளக்குகின்றார்.
இவை புறனடை நூற்பாவில் பெறப்படும் கருத்துகளாகும்.