Primary tabs
6.4 ஒழுகிசையும் உதாரமும்
ஒழுகிசையும் உதாரமும் பற்றி இனிப் பார்ப்போம்.
வெறுக்கத்தகும் இன்னாஇசை இல்லாமல், செவிக்கு இனியதாகச் சொல்லப் பெறும் மெல்லிசை ஒழுகிசையாகும்.
ஒழுகிசை என்பது வெறுத்திசை யின்மை (20)என்பது நூற்பா.
வைதருப்பமும் கௌடமும் ஒழுகிசை குறித்த கருத்தில் ஒன்றுபடுகின்றன.
சான்று :
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை ;
என்றும் வணங்குவது உன்மலர்த் தாள் ; எழு தாமறையின்
ஒன்றும் அரும்பொரு ளே,அரு ளே,உமை யே,இமையத்து
அன்றும் பிறந்தவ ளே,அழி யாமுத்தி ஆனந்தமே(அபிராமி அந்தாதி : 10)(எழுதாமறை = வேதம்)
என்பது அபிராமிப்பட்டர் அருளிய பாடல்.
‘எழுதப்படாத வேதத்தில் பொருந்திய அரியபொருளே! அருள்வடிவே! உமையவளே! முன்பு பர்வதராசனின மகளாகப் பிறந்தவளே! அழிவற்ற முத்தி தரும் ஆனந்தமே! நான் நின்று கொண்டும், அமர்ந்திருந்தும் படுத்திருந்தும், நடந்து கொண்டும் எப்போதும் வணங்குவது உன் திருவடித் தாமரைகளையே ஆகும்’ என்பது பாடலின் பொருள்.
செவிக்கினிய இசைநலம் கொண்டு ஒழுகிசைக்குத் தக்க சான்றாகத் திகழ்கின்றது இப்பாடல்.
உதாரம் என்பது உரிய பொருளேயன்றி, குறிப்பால் வேறொரு பொருளையும் உணர்த்தி நிற்பதாகும்.
உதாரம் என்பது ஓதிய செய்யுளில்
குறிப்பின் ஒருபொருள் நெறிபடத் தோன்றல் (21)என்பது தண்டியலங்காரம். வைதருப்பரும் கௌடரும் இக்கருத்தில் ஒன்றுபட்டுள்ளனர்.
சான்று : 1
காளமேகப்புலவர், நாகைப்பட்டினம் காத்தான் வருணாதித்தன் சத்திரத்தில் உண்ணக் காத்திருந்து, இரவு நெடுநேரம் கழித்து உணவு உண்ட நிலையில் பாடிய பாடல் :
கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்(கத்து = ஒலிக்கும்
நாகை = நாகைப்பட்டினம்
அத்தமித்தல் = மறைதல், அந்தி, சூரியன் மறைதல்
வெள்ளி = வைகறை விண்மீன்)‘ஒலிக்கும் கடல் சூழ்ந்த நாகைப்பட்டினத்தில் உள்ள காத்தான் சத்திரத்தில் மாலைப்பொழுதில் அரிசி வந்து சேரும்; அதனைக் குத்தி உலையில் போட ஊரே அடங்கும் முன்னிரவாகும்; சமைத்துப் பரிமாறும் பொழுது வெள்ளி முளைத்துவிடும். அதாவது விடிந்துவிடும்’ என்பது பாடற்பொருள்.
இதுவும் ஒரு சத்திரமோ? என்னும் குறிப்பைத் தருகிறது இப்பாடல்.
சான்று : 2
ஈட்டு புகழ்நந்தி பாண! நீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடியளவும் - கேட்டிருந்து
பேய்என்றாள் அன்னை பிறர்நரிஎன் றார்தோழி
நாய்என்றாள் ; நீஎன்றேன் நான்(நந்திக்கலம்பகம் : தனிப்பாடல் : 13)என்பது தலைவி, வாயிலாக வந்த பாணனிடம் கூறுவதாக அமைவது.
‘பெருகிவரும் புகழுடைய நந்திவன்மனின் பாணனே! நீ எம் தங்கையராகிய பரத்தையர் வீட்டில் இருந்து இரவு முழுக்கப் பாடினாய், அதுகேட்டு உண்மை உணராமல் எம் அன்னை ‘பேய்குரலெடுத்துக் கத்துகிறது’ என்றாள். மற்றவர்கள் ‘நரியின் ஊளையிடல் இது’ என்றனர். தோழி ‘நாய் குரைக்கிறது’ என்றாள். நான்தான் இது உனது குரல் என உணர்ந்து கூறினேன்’ என்பது பாடலின் பொருள்.
தலைவனைப் பரத்தையர்பால் கொண்டு சேர்த்த பாணனின் பண்பும் ஒழுக்கமும் வெறுத்தற்குரியன என்னும் குறிப்பை உட்கொண்டு, பாணனின் பாடலை இகழ்ந்தாள் அவள். வேறு குறிப்புப்பொருள் கொண்டிருத்தலின் உதாரத்துக்கு இப்பாடல் சான்றாயிற்று.